தேசியக் கல்விக்கொள்கையைப் பின்பற்றி திறனறித் தேர்வு! 3,6,9ம் வகுப்பு மாணவர்கள் OMR தாளில் தேர்வெழுத நிர்ப்பந்தம்! ஐபெட்டோ கடும் விமர்சனம்!

0
215
AIFETO Annamalai opposes Tamil Nadu government's decision to conduct State Educational Achievement Survey exam.

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “புதிய கல்விக் கொள்கையில் கூட மூன்றாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்துவதை தவிர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கிறார்கள்.

NEP 2020க்காக உருவாக்கப்பட்டு, NCERT இன் அங்கமான PARAKH( Performance Assessment Review and Analysis of Knowledge for Holistic Development), ETS என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆலோசனையுடன் SEAS-2023 (State Educational Achievement Survey) தேர்வினை உலக வங்கி வங்கி நிதி உதவியுடன் நாளை(03/11/2023) நடத்த உள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கைப்படி, பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிட மாநிலங்கள் தனியாக கள ஆய்வு செய்ய நடத்தப்படும் இந்த State Educational Achievement Survey தேர்வில் நாடு முழுவதும் 11 மில்லியன் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

இதற்காக, தமிழகத்தில் இன்று (02.11.2023) பி.எட்., மாணவர்கள் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று, தேர்வு பேக்கேஜ்களை கொடுத்து, பள்ளி விவரங்கள், மாணவர்களின் விவரங்களை தொகுத்து வைத்திடுமாறு பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அறிவுறுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 3, 6 மற்றும் 9-ம் வகுப்புகள் உள்ள 27, 047 பள்ளிகள் மற்றும் அதில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த SEAS தேர்வினை நடத்துவதற்காக கல்லூரிகளில் பி.எட், எம்.எட், பயிலும் 29,775 மாணவர்கள் கள ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் வட்டார அளவிலும் ஒருங்கிணைப்பாளர்களாக 20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் விரிவுரையாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் என மொத்தம் 1,356 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆறு பேக்கேஜ் களில் வினாத்தாள் விடைத்தாள் பேனா ஆகியவை SCERT வழியாக தேர்வினை கண்காணிக்கும் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். தேர்வு நடைபெறும் அறையில் தேர்வு நடத்தும் கள ஆய்வாளரைத் தவிர, தலைமை ஆசிரியரோ, வகுப்பு ஆசிரியரோ இருக்கக் கூடாது. அந்தளவு கெடுபிடிகளுடன், அவ்வளவு மந்தனமான முறையில் தேர்வினை நடத்த வேண்டுமாம்.

Also Read : சமூக ஊடகப் பதிவுகளை தணிக்கை செய்ய அரசு அமைப்பு! ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால், கருத்துரிமைக்குப் பெரும் அச்சுறுத்தல்! Fact Checking Unit!

அதிகபட்சம் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது. மூன்று வகையான(A,B,C) வினாக்கட்டுகள் அனுப்பி வைத்துள்ளார்களாம். அரசு போட்டித் தேர்வு முறையில், OMR (Optical Mark Recognition – OMR SHEET) தாள் வடிவில் ஒரு வினா தொகுப்பில் இருக்கக்கூடிய வினாக்கள், மற்றொரு தொகுப்பில் வினா எண் மாறி, மாறி இருக்குமாம். நல்லவேளை நீட் தேர்வைப் போன்று, எங்களுடைய மாணவர்களின் இடுப்பில் அணிந்துள்ள அரைஞாண் கயிற்றை தவிர, கழுத்திலோ, காதிலோ, பெரிதாக அணிகலன்கள் எதுவும் இல்லை. இல்லையென்றால் அதையும் கழற்றச் சொல்லி இந்தத் தேர்வினை நடத்தினாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை..!

தேர்தல் முடிந்து பொருள்களை ஒப்படைப்பது போல், இந்தத் தேர்வினை முடித்து நாளை(03/11/2023) மாலையே, OMR தாள் மற்றும் எழுது பொருட்களை ஏழு பேக்கேஜ்களில் ஒப்படைத்தல் வேண்டுமாம். பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்ய அக்கறை காட்டவில்லை. கற்பித்தல் பணிகளைத் தவிர பிற பணிகளை ஆசிரியர்களுக்கு அடுக்கடுக்காக அள்ளித் தந்து வருகிறார்கள்.

மாணவர்களின் அடைவுத்திறனை கண்காணிப்பதற்கு மட்டும், ஹெலிகாப்டரில் இருந்து நேரடியாக வந்து இறங்குவதைப் போல, வானளாவிய கற்பனை உலகில் மிதந்து வருகிறார்கள். எப்படி அடைவு சோதனை நடத்தினாலும் சரி; எழுதுகிற மாணவர்கள் எங்கள் மாணவர்கள்; எங்கள் மாணவர்களைப் பற்றி எங்களுக்குத்தான் தெரியும். தேர்வுக்கு திட்டமிட்டுள்ள மத்திய அரசினைப் பற்றியும் தெரியும். NCERT பற்றியும் எங்களுக்கு தெரியும்.

Also Read : அரசு ஆதரவில் சைபர் தாக்குதல்! எதிர்க்கட்சி எம்.பி-க்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அலெர்ட்! ஒட்டுக்கேட்கிறதா மத்திய அரசு?

மதிப்பீடாக இருந்தாலும் சரி, அடைவுத்திறன் சோதனையாக இருந்தாலும் சரி, தேர்வாக இருந்தாலும் சரி, இவையெல்லாம் இயல்பான சுதந்திரமான சூழலில் நடைபெற வேண்டும். முற்றிலும் இயல்புக்கு மாறாக, பி.எட்., கல்லூரியில் படிக்கும் மாணவர்களை வைத்து தனி அறையில், நெருக்கடியான மந்தன முறையில் தேர்வினை நடத்தினால், அந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள் எப்படி அந்தத் தேர்வினை எழுதுவார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

OMR(Optical Mark Recognition) தாளில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் திடுதிப்பெனெ எப்படி தேர்வினை எழுதுவார்கள்? இந்தச் சோதனையின் முடிவுகள் எப்படி சரியான முடிவுகளை தரும்? யதார்த்தத்தை (Practical) விட்டு விலகி நிற்கும் கல்வித்துறையே, சிந்திக்க வேண்டியவற்றை சிந்தித்து செயல்படுத்த எப்போதுதான் முன் வருவீர்கள்? நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

தேசிய கல்விக் கொள்கையினை அமல்படுத்துவதற்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையினரை நியமனம் செய்தால் முதல் வகுப்பு முதலே பொதுத் தேர்வுகளை நடத்தவும் தயங்க மாட்டார்கள். நீட் தேர்வினை நாம் எதிர்க்கிறோம். ஆனால் நியமனத் தேர்வினை நாமே நடத்துகிறோம். தேசிய கல்விக் கொள்கையில், தொடக்கக் கல்வியில் உள்ள வகுப்புகளுக்கு பொதுத் தேர்வினை எதிர்க்கிறோம். ஆனால் NCERT நடத்துகிற அடைவுத்திறன் தேர்வினை நாமே வரவேற்று நடத்துகிறோம்.

Also Read : வகுப்பறையை அரசியல் மேடையாக்கிய திமுக எம்.எல்.ஏ.! நீட் தேர்வுக்கு எதிராக பள்ளியிலேயே தலைமை ஆசிரியர் பிரச்சாரம்!

விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு ரூ. 13,000 கோடி நிதியினை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. பெற்றோர் தொழிலை பிள்ளைகள் கற்றுக் கொள்ளலாம். ரூபாய் 15,000 இலவசம். உடனடியாக ஒரு லட்சம் கடனும் தருகிறார்கள். இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நீலகரி, திருப்பூர், விருதுநகர் என ஏழு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆண்டவன் சொல்கிறார், அருணாச்சலம் கேட்கிறார் என்பார்கள்!. ஆனால் தற்போது அருணாசலம் சொல்கிறார், ஆளுபவர்கள் கேட்டு வருகிறார்கள்! என்று பரவலாக தெரிவித்து வருகிறார்களே!

ஒரு புதுப் பெயரினை, நல்ல தமிழ்ப் பெயரினை விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு அருணாசலங்கள் அறிமுகப்படுத்தினால், இது முதலமைச்சரின் நல்ல திட்டம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பக்குவ நிலைக்கு நம்மை தள்ளுவார்களோ? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் மையக் கருத்துதான் என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்..! சமூக நீதிக்கு எதிராக கல்வித்துறை எந்தத் திட்டங்களை அமல்படுத்த முனைப்பு காட்டினாலும், உரிமை உறவுடன் என்றும் எதிர்க் குரல் கொடுப்போம்! விடிவு காலத்தை நோக்கி நமது பயணத்தினை தொடர்வோம்..!” இவ்வாறு அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry