ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த காலம் தொட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தாருங்கள், நம்பிக்கை இழக்க வைக்காதீர்கள்! இது எங்கள் அரசு, நமது அரசு! என்று கனிவோடு வேண்டுகோள் வைத்து வந்தோம்.
ஏறெடுத்தும் பார்க்காத காரணத்தினால், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு போராட்ட வடிவத்திலும் தனிச்சங்கங்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். பிறகு ஜேக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக மாநில மாநாடு நடத்தியும் கேட்டுப் பார்த்தோம்! தொடர்ந்து போராடியும் பார்த்தோம்! தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் சார்பாகவும் போராடினோம், போராடியும் வருகிறோம். நிதி சார்ந்த, நிதி சாராத கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
வெறுப்பின் உச்சத்திற்கே சென்று ஆட்சியின் மீது உள்ள எதிர்ப்புணர்வுகளை பல்வேறு கோணங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இப்போது தான் குரல் கொடுத்திருக்கிறார். ‘ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை திராவிட முன்னேற்ற கழக அரசு நிறைவேற்றவில்லை. நிறைவேற்றுவதாக கபட நாடகம் ஆடுகிறார்கள். கேட்டால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட நன்மைகளை தான் சொல்கிறார்களே தவிர, இவர்கள் ஆட்சி அமைத்து 42 மாத காலத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்களா?’ என்று கேட்டிருக்கிறார்.
உடன் ஆளும் கட்சித் தரப்பில், எதிர்க்கட்சித் தலைவர் நீலிக் கண்ணீர் வடிக்கிறார். எப்போதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எங்கள் பக்கம் தான் இருப்பார்கள் என்று உறுதிமொழி தந்து அறிக்கையினை வெளியிட்டு வருகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஒன்Js முக்கால் லட்சம் பேர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்ட வரலாற்றினை நினைவுபடுத்துகிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக் கட்சிகள் தவிர மீதி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றித் தர வேண்டும் என்று தொடர்ந்து அறிக்கையினை வெளியிட்டு வருகிறார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றிட வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகிறார்கள். ஜாக்டோ ஜியோ போராட்டக் காலங்களில் கட்சித் தலைவர்கள் சந்திப்பு என்ற ஒரு தீர்மானத்தை பதிவிட்டு விட்டு, ஆளும்கட்சியின் மனம் நோகக்கூடாது என்பதற்காக, கூட்டணி கட்சித் தலைவர்களை கூட சந்திப்பதை தவிர்த்தார்கள்.
அதை ஆளும் அரசு உணரவே இல்லை. தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற வில்லை? என்று காட்டமாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். இதுவரை மெளனம் காத்து வந்த அரசு, இப்போது எதிர்க்கட்சிகள் மீது சீறிப்பாய்வதை காண்கின்றோம்.
Also Read : கோரிக்கைகள் குறித்து அறிவிக்காததால் ஆசிரியர்கள் ஏமாற்றம்! முதலமைச்சர் உணருவாரா என ஐபெட்டோ கேள்வி!
எங்களைப் போன்ற மூத்த தலைவர்கள், எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் போராடி சிறை சென்றவர்கள். போராட்டத்தை முன்னின்றி நடத்தியவர்கள். ஆளுநர் அலெக்ஸாண்டர் காலத்திலும் முன்னின்று போராட்டத்தை நடத்தி மேடையில் பேசுகிற போதே கைது செய்யப்பட்டவர்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் பறிக்கப்பட்ட சலுகைகள், புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவதை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டவர்கள். எட்டு மாதம் நிரந்தர பணி நீக்க காலத்திலும் இருந்தவர்கள்.
மூன்று போராட்டங்களிலும் தலைவர் கருணாநிதி பாதுகாப்பாக இருந்து உச்ச நீதிமன்றம் வரை சென்று எங்களை மீண்டும் பணிக்கு கொண்டு வந்து அமர்த்தியதை நெஞ்சிருக்கும் வரை எங்களால் மறக்க இயலாது. இடதுசாரி கட்சிகளின் ஆதரவுப் போராட்டத்தினையும் நீதிமன்றம் வரை சென்று, சட்டப் போராட்டங்கள் நடத்தியதையும் மறக்கத்தான் முடியுமா? முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உச்சநீதிமன்ற படிக்கட்டில் ஏறி எங்களுக்காக வாதாடியதையும் நினைவில் வைத்து போற்றுகிறோம்.
இந்தியாவில் முதன்முறையாக மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதத்தை அமல்படுத்தியவர் கருணாநிதி. அவர் செய்த நன்மைகளை எல்லாம் பட்டியலிட்டால் மாளாது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பிரதான கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
எம்ஜிஆர் தொடங்கி,ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி வரை ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது நம்பிக்கை இழந்தவர்கள். காரணம் இவர்கள் நமது கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதில் உறுதியாக இருந்தார்கள். போராட்டங்களின் போது நம்மை எதிர்க்கட்சிக்காரர்களாகவே பார்த்து தண்டனை வழங்கினார்கள். ஆனால் அவர்கள் காலத்தில் ஆசிரியர்களுக்கு அன்றாடம் சித்திரவதை எதுவும் அளிக்கப்படவில்லை.
ஆனால் திராவிட மாடல் அரசில் கற்பித்தல் பணி அல்லாத 120க்கும் மேற்பட்ட பிற பணிகளை இடைவெளி இன்றி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி வருவது என்பது ஒவ்வொரு ஆசிரியரிடையே மன அழுத்தம் தாங்க முடியாத அளவில் இருப்பதை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நியமித்த பிறகு, பள்ளிக் கல்வித்துறை தனித்தன்மையினை இழந்து இருக்கிறது. எதையும் கண்டுகொள்ளாத கல்வி அமைச்சர், 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பள்ளிகளை பார்வையிட்டு வருகிறார்.
அதிகாரிகள் ஒரு நாளாவது ஆசிரியர்களை பாடம் நடத்திட அனுமதிக்கிறார்களா? இல்லவே இல்லை! 12 ஆண்டு காலமாக ஆசிரியர் நியமனம் நடைபெறவே இல்லை. துறை அமைச்சர் ராணிப்பேட்டையில் பேசுகிற போது 19 ஆயிரம் ஆசிரியர் நியமனம் என்கிறார். சென்னையில் பேசுகிற பொழுது 3000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப் போகிறோம் என்கிறார்.
தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் ஒரு ரகசிய திட்டத்தினை வகுத்துக் கொண்டு ஒரே வளாகத்தில் இருக்கக்கூடிய பள்ளிகளை இணையுங்கள் என்று ரகசியமாக மாவட்டக் கல்வி அலுவலர்களை முடுக்கிவிட்டு வருகிறார். குறைந்தது 100 பள்ளிகளாவது மூடப்படும் அபாயத்தினை ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்த பிறகும் கூட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கண்டு கொள்ளவேயில்லை.
தமிழ்நாடு அரசின் சார்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மகிழும் வகையில் கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு அரசின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். ஒருவேளை பிரதான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் அரசை புகழாரம் சூட்டி கொண்டாடி மகிழ்வோம்.
பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு, ஊக்க ஊதிய உயர்வு, சரண் விடுப்பு, நியமன தேர்வு முறை ரத்து, பதவி உயர்வுகள், அரசாணை 243 ரத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த 12 உறுதிகள் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகள் தேர்தல் காலம் வரை நிறைவேற்றப்படவில்லை என்றால், 50 தொகுதிகளின் வெற்றியினை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குடும்ப வாக்குகள் தான் நிர்ணயம் செய்யும் என்ற நிலையினை உணர்ந்து முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு வருகிறோம்..
நிதி அமைச்சர் பொறுப்பில் தங்கம் தென்னரசு இருப்பதால், இதயத்தின் ஓரத்தில் ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது. எதையும் செய்யாமல் கைவிட்டு விட்டால் ஒன்றே முக்கால் கோடி வாக்காளர்களின் மனநிலையினை உளவியல் மருத்துவர்களாலும் கணிக்க முடியாது, ஆஸ்தான ஜோதிடர்களாலும் கணிக்க முடியாது! பொதுத்தேர்தல் முடிவில்தான் கண்டுகொள்ள முடியும்.இது உறுதி..! இது உறுதி..! என்பதை அனைவரும் ரத்த கையெழுத்திட்டு பதிவு செய்து வருகிறார்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry