ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் கருவறைக்குள் இசைஞானி இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்றும், அவர் அவமதிக்கப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு திவ்ய பாசுரம் இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று இரவு(15/12/2024) நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஶ்ரீ திர்தண்டி சின்ன ஶ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் தலைமை வகித்தனர். இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த திவ்ய பாசுரம் ஆல்பத்தில் ஆண்டாள் பாசுரங்களை இசைக்கலைஞர்கள் பாடினர். தொடர்ந்து பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Also Read : இளசுகளை பாடாய்ப்படுத்தும் ‘சைபர் புல்லியிங்’ எனப்படும் இணைய மிரட்டல்..! அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்!
முன்னதாக ஆண்டாள் கோயிலுக்கு வந்த இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டாள் சந்நிதி, நந்தவனம், பெரிய பெருமாள் சந்நிதி ஆகியவற்றில் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஶ்ரீ திர்தண்டி சின்ன ஶ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோருடன் சென்று இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார்.
ஆண்டாள் சந்நிதியில் கருவறைக்கு முன் உள்ள அர்த்த மண்டபத்திற்கு வெளியே வசந்த மண்டபத்தில் நின்றே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று இரவு ஜீயர்களுடன் இளையராஜா சுவாமி தரிசனம் செய்ய சென்ற போது, வசந்த மண்டபத்தை தாண்டி அர்த்த மண்டப வாசல் அருகே நின்றார். அப்போது கோயில் அர்ச்சகர் சின்ன ஜீயரிடம், வசந்த மண்டபத்தில் நின்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என கூறினார். அதை சின்ன ஜீயர் இளையராஜாவிடம் கூறியதும், அவர் அர்த்த மண்டப வாயிலில் நின்று சுவாமி தரிசனம் செய்தார்.
கோயில் அர்ச்சகர்கள் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஶ்ரீ திர்தண்டி சின்ன ஶ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர், இளையராஜா ஆகிய 3 பேருக்கும் ஆண்டாள் சூடிய மாலை மற்றும் பட்டு வஸ்திரம் கட்டி மரியாதை செய்தனர். இணை ஆணையர் ஆண்டாள் படம் மற்றும் பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து ஆடிப்பூர கொட்டகையில் நடந்த திவ்ய பாசுரம் இசை நிகழ்ச்சி மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சியை ஜீயர்களுடன் சேர்ந்து இளையராஜா கண்டு களித்தார்.
இந்நிலையில், இளையராஜா அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக விளக்கம் அளித்த ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் “ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முழு மரியாதை அளிக்கப்பட்டது. இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் மன நிறைவுடன் சென்றார்.” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, இளையராஜா கோவிலுக்கு வந்தபோது நடந்தது என்ன என்று, அறநிலையத்துறை அறிக்கை அளித்துள்ளது. ’ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி அர்த்தமண்டபத்தில் (கர்ப்ப கிரகம் முன் உள்ள இடம்) மடாதிபதிகள், அர்ச்சகர்கள் தவிர, மற்றவர்கள் உள்ளே செல்ல கோவில் வழக்கப்படி அனுமதி இல்லை’ என திரிதண்டி ஜீயர் தெரிவித்ததை இளையராஜா ஏற்றுக்கொண்டு அர்த்தமண்டபம் முன் நின்று தரிசனம் செய்தார் என்று, மதுரை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளார்.
இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இசைஞானி இளையராஜா, நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 16, 2024
இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, இளையராஜா என்பவர் ஒரு இசை கடவுள். கடவுளுக்கு கோயிலுக்குப் போக வேண்டும் என்ற அவசியமே இல்லை. இளையராஜா எங்கு சென்றாலும், அவரே ஒரு கோயில், கடவுள்தான். ஆனால், அவரை கோயிலினுள் அனுமதிக்கவில்லை என்றொரு செய்தி வந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்ட பிரச்சாரங்களை வைத்து இன்னும் இந்த நாட்டில் எத்தனை நாட்கள்தான் ஏமாற்றுவார்கள்?
காரணம், கருவறைக்குள் எந்த சாதியை சேர்ந்தவர்களுமே போக முடியாது. அது இளையராஜா, கஸ்தூரி யாராக இருந்தாலும் கருவறைக்குள் போக முடியாது. அது பிராமணர்களாக இருந்தாலும் கருவறைக்குள் போகமுடியாது. கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டும்தான் போகமுடியும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். அர்ச்சகர்கள் எந்த சாதியாக இருந்தாலும் கருவறைக்குள் போக முடியும்” என்று கூறியுள்ளார்.
பொதுவாக கோவில் கருவறை என்று அழைக்கப்படும் கர்ப்ப கிரகத்தில் ஆதீனங்கள், மடாதிபதிகள், தக்கார்கள், அறங்காவலர்கள் உள்பட யாரும் உள்ளே செல்ல அனுமதியில்லை. கருவறையில் அந்தந்த கோவிலில் பூஜை செய்யும் ஸ்தானிகர்கள், பட்டாச்சாரியார்கள், பரம்பரை குருக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதே கோவிலில், வேறு சன்னதியில் பூஜை செய்யும் குருக்களாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகம விதிப்படி கட்டிய கோவில்களில், பண்டைய காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் நடைமுறை இதுதான். எனவே, இசைஞானி இளையராஜாவை முன் வைத்து இந்த சர்ச்சை வேண்டுமென்றே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry