கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கல் அடுத்துள்ள மல்லம்பாளையம் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைத்துள்ளது. இங்கு, அரசு அனுமதித்துள்ள அளவைவிட சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய சூழலியல் ஆர்வலர்கள், சட்டவிரோத மணல் குவாரிக்கு எதிராகப் போராடிய ஜெகநாதன் என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லாரி ஏற்றி கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தங்கள் அடையாளத்தை மறைத்துப் பேசினார்கள். “பொதுப்பணித்துறைதான் இந்தக் குவாரியை நடத்துகிறது. மணல் அள்ளி ஸ்டாக் பாயின்ட்டுக்கு கொண்டு செல்லும் வரை மட்டும்தான் தனியாருக்கு இதில் பங்கு. ஆனால், மணல் அள்ளுபவர்களின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கிறது.
இங்கிருந்துதான், கணபதிபாளையம் மற்றும் நன்னியூர் ஆகிய இரண்டு ஸ்டாக் பாயிண்டுகளுக்கு பெரிய லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்லப்படுகின்றது. பசுமைத் தீர்ப்பாய உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, காவிரி ஆற்றில் நீர் செல்லும் இடத்தில் செயற்கை மணல் திட்டுக்களை அமைத்து, அதாவது, மணல் மூலம் சுவர் போல் அமைத்து, நீர்ப் புகாமல் தடுத்து மணல் அள்ளுகிறார்கள்.
ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் பல ஆயிரம் யூனிட் மணல் சட்டவிரோதமாக அள்ளப்படுகிறது. ஒரு மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே மணல் அள்ள அரசு அனுமதித்துள்ளது. ஆனால் பத்து மீட்டர் ஆழத்துக்கு மணல் அள்ளுகிறார்கள்.
நீதிமன்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுப்படி குவாரியில் எங்கேயும் கண்காணிப்புக் கேமரா வைக்கப்படவில்லை. மணல் அள்ளுபவர்கள், தங்களது கூலியாட்களின் கையில் கம்பு மற்றும் பிரம்புகள் கொடுத்து, 100 அடி தூரத்திற்கு ஒருவரை நிறுத்தி கண்காணிக்கின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இவர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனர். எனவே அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுபவர்களை கேள்வி கேட்க பலரும் அச்சப்படுகின்றனர். வாங்கல் காவிரி ஆற்றுப்பாலத்தில் உள்ள சோதனைச் சாவடி தற்போது செயல்படாத நிலையில், அங்கேயும் மணல் அளளுபவர்களின் ஆட்கள் தான் கண்காணிப்புப் பணியில் உள்ளனர்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கல் அடுத்துள்ள மல்லம்பாளையம் காவிரி ஆற்றில், 100 அடிக்கு ஒரு ஆள் நிறுத்தி மணல் கொள்ளை. சாலையில் புழுதி பறக்காமல் இருக்க டேங்கர் மூலம் தண்ணீர் தெளிக்கும் அவலம். கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்.@EPSTamilNadu @OfficeofminMRV @annamalai_k pic.twitter.com/qIDtsvODx3
— VELS MEDIA (@VelsMedia) September 11, 2023
மாநில அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமச் சாலைகளில், பெரிய பெரிய மணல் லாரிகள் சென்று வருவதால், புழுதி பறக்காமல் இருக்கவும், லாரிகளின் டயர்கள் வெப்பம் ஆகாமல் இருக்கவும் டிராக்டர்கள் மூலம் சாலைகளில் தண்ணீர் தெளிக்கின்றனர். தினந்தோறும் காலை, மதியம், மாலை தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகின்றது. சாலையில் தண்ணீர் தெளித்து மணலை கொள்ளையடிக்கும் இதைப்போன்ற அவலம் வேறெங்கும் நடக்குமா?
மணல் குவாரி இருக்கும் மண்மங்கலம் வட்டாரத்தில் குடிநீர்ப் பஞ்சம் நிலவுகிறது. மண்மங்கலம் வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கு, குடிநீர் வசதி செய்துதர கரூர் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை சிறிதளவும் மதிக்காமல், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட சட்டவிரோதமாக அதிக மணல் அள்ளும் இந்த குவாரிக்கு, எங்களைப் போன்றவர்கள் மட்டுமல்லாமல், சமூக நல ஆர்வலர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால் குவாரியில் ஆதிக்கம் செலுத்தும் சக்திமிக்க நபர்கள் மத்தியில் எங்கள் குரல் எடுபடவில்லை. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தலையிட்டால் மட்டுமே மல்லம்பாளையம் காவிரி ஆற்றுக்கு விடிவு கிடைக்கும்” என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
Also Read : மணல் கடத்தலை தடுத்த விஏஓ வெட்டிப்படுகொலை! மாஃபியாக்களுக்கு ஆதரவாக இருக்கிறதா போலீஸ்?
இதனிடையே, மனித சக்தி மற்றும் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தி அள்ளும் முறைக்குப் பதிலாக இயந்திரங்கள் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளுவதற்கு இந்த குவாரிக்கு அனுமதி உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மணல் அள்ளுவதில் மனித சக்தி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதையெல்லாமல் கருத்தில் கொள்ளாமல் இயந்திர முறையில் மணல் அள்ளுவது ஆறுகளின் அழிவிற்கே வித்திடுவது மட்டுமல்லாமல், சூழலியலுக்கு பெரும் கேடு விளைவிக்கும்.
Mr. Anandakumar, Reporter, Karur, reported the news for Ecological Welfare and Awareness.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry