96% இந்துக்களுக்குக் கல்வியை மறுத்தது சனாதனம்! கிறிஸ்தவ விழாவில் பேசி சர்ச்சைக்கு வித்திட்ட அப்பாவு!

0
37
TN Speaker Appavu | Photo Credit - News Bharati

நெல்லா மாவட்டம் பாளையங்கோட்டை மறைமாவட்ட பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, “சனாதனம் என்றால் 4% மக்களுக்கு கல்வி கற்க அனுமதி உண்டு. மற்றவர்கள் அடிமையாக வாழ வேண்டும். இதுதான் அதன் தத்துவம்.

1835-ல் மெக்காலே பிரபு வரவில்லை என்றால், எல்லோரும் கல்வி கற்கலாம் என்ற சட்டம் வரவில்லை என்றால், நாம் கல்வி கற்றிருக்க மாட்டோம். 1795-ல் எல்லோரும் நிலம் வாங்கலாம் என்ற சட்டம் வராமல் போயிருந்தால், நாம் தற்போது கூடி இருக்கும் சேவியர் கல்லூரிக்கு, சேவியர் பள்ளிக்கு இந்த இடம் கிடைத்திருக்காது.

111 ஆண்டுகளுக்கு முன்னால், 1912-ஐ எடுத்துக்கொண்டால், அப்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, ஒடிசாவின் ஒரு பகுதி ஆகியவை உள்ளடக்கிய பகுதியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு என பல்வேறு மொழிகளை பேசுகிறவர்கள் இருந்தார்கள். அவர்களில் பட்டதாரிகள் 100 பேரில் 94 பேர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். 4% பேர் 94% பட்டம் பெற்றிருந்தார்கள். மீதி 96% பேர் 6% பட்டம் பெற்றிருந்தார்கள். இதுதான் அன்றைய கல்வி முறை; இதுதான் அன்றைய சமூக நிலை.

Also Read : இசை நிகழ்ச்சியில் பெரும் குளறுபடி! ரசிகர்கள் கொந்தளிப்பு! வருத்தம் தெரிவித்தார் ஏ.ஆர். ரஹ்மான்!

125 ஆண்டுகளுக்கு முன் தென் தமிழகத்தில் இருந்து படிப்பதற்காக சென்னை செல்வதாக இருந்தால், அங்கே இருந்த மைசூர் கஃபே என்ற விடுதியில் உணவருந்த, தங்க அனுமதி கிடையாது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்பவர்களுக்கு விடுதி தேவைப்பட்டது. அந்த 4 சதவீதத்தைத் தவிர்த்துப் பார்த்தால் மீதமுள்ள 96 சதவீதத்தினரும் இந்துக்கள்தான்.

அவர்களுக்குத்தான் கல்வி மறுக்கப்பட்டது; விடுதி மறுக்கப்பட்டது; விடுதியில் சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது. இத்தகைய காலகட்டத்தில்தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஒய்எம்சிஏ என்ற அமைப்பு சென்னையின் பல இடங்களில் விடுதிகளை ஆரம்பித்தது. அதன்மூலம்தான் மாணவர்களுக்கு விடுதி கிடைத்தது.

ஐயா வைகுண்டரின் கொள்கையை தற்போது சிலர் சனாதனம் என்று சொல்கின்றனர். சனாதனத்தை எதிர்த்து, சாதியை எதிர்த்து, அடக்குமுறைகளை எதிர்த்து 200 ஆண்டுகளுக்கு முன் குரல் கொடுத்தவர் ஐயா வைகுண்டர். அவரது இயற்பெயர் முடிசூடும் பெருமாள். இழிகுலத்தில் பிறந்த நீ எப்படி முடிசூடும் பெருமாள் என பெயர் வைத்துக்கொள்ளலாம் என்று கூறி அவருக்கு முத்துக்குட்டி என்ற பெயர் வைத்தவர் அன்றைய திருவாங்கூர் மகாராஜா.

Also Read : #BharatVsIndia ஆங்கிலேயர்கள் பாரதத்தை ‘இந்தியா’ என்று ஏன் மாற்றினார்கள்? அறிய வேண்டிய வரலாற்றுப் பின்னணி! Explainer!

அந்த முத்துக்குட்டிதான் திருச்செந்தூர் கடற்கரையில் ஜோதியாக வந்தார், ஐயா வைகுண்டரானார் என்பது வரலாறு. எல்லோரும் சமம் என சொன்னவர் ஐயா வைகுண்டர். உருவ வழிபாடு கூடாது என அவர் கூறினார். ஏனெனில், உருவ வழிபாடு இருந்தால் அந்த 4 சதவீதத்தைச் சேர்ந்தவர்கள் பூஜை செய்ய வந்துவிடுவார்கள் என்பதால் அது தேவையில்லை எனக் கூறினார்.

உன் மனசாட்சிதான் உனக்குக் கடவுள் என கூறியவர் ஐயா வைகுண்டர். அவர் ஒரு இந்து. அவரது உறவினர்தான் நாராயண குரு. அவர் வைக்கத்தில் உள்ள சோமநாதர் ஆலய தெருவில் நடந்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோயிலுக்குள் அல்ல, தெருவில்கூட நடந்து செல்ல முடியாத நிலை இருந்தது.

அதை எதிர்த்து பெரியார், காமராஜர் போன்றோர் போராடித்தான் அவர் அந்த தெருவில் நடமாட வைத்தார்கள் என்றால், எவ்வளவு அடக்குமுறை இருந்தது என்று எண்ணிப்பார்க்க வேண்டும். கிறிஸ்தவ மத போதகர்கள் அனைவருக்காகவும் சேவை செய்ய வந்ததன் பயன்தான் இன்று தமிழ்நாடு கல்வியிலும், பொருளாதரத்திலும், வளர்ச்சியிலும் முன்னேறி இருக்கிறது” இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசினார்.

Also Read : திரித்துப் பேசும் உதயநிதி, திராவிட இயக்கம்! தோல் சீலைப் போராட்டம், ஆலயப் பிரவேசத்தில் இதுதான் நடந்தது! உண்மையை உடைக்கும் KSR!

அவரது இந்தப் பேச்சு மறைமுகமாக பிராமணர்களைத்தான் குறிக்கிறது என்று வலதுசாரி ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மேலும், “இந்து மதத்தில் உள்ள வாழ்வியல் முறைதான் சனாதன தர்மம் என்ற புரிதல் இல்லாத அவரது பேச்சு ஏற்கத்தக்கது அல்ல. மாற்று மதத்தைச் சார்ந்த அவர், தான் சார்ந்த மதத்தின் விழாவில் இந்து மதத்தைப் பற்றி தவறாகப் பேசுவது ஏற்புடையதல்ல. அரசமைப்பின் மீது உறுதி எடுத்துக்கொண்ட அவர், அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். இதுபோன்ற பேச்சுக்களை அவர் தவிர்ப்பது நல்லது.” என்று கூறுகின்றனர்.

முன்னதாக, ஜூன் 29, 2022 அன்று, திருச்சியில் கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அப்பாவு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கிறிஸ்தவர்களாலும் கிறிஸ்தவர்களுக்காகவும் அமைக்கப்பட்டது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ‘விரதம்’ மற்றும் ஆதரவினால்தான் திமுக ஆட்சிக்கு வந்தது. கிறிஸ்தவர்களின் உதவியால்தான் திமுக ஆட்சி அமைந்தது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொள்கிறார். இவ்வாறு அப்பாவு வெளிப்படையாகப் பேசியது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry