நிரூபிக்கப்படாத பதஞ்சலி நிறுவன மருந்துக்கு ஆதரவு! மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு IMA கண்டனம்!

0
7

அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படாத ஒரு மருந்தை கோவிட்19-க்கு எதிரான துணைச் சிகிச்சை மருந்தாகப் பயன்படுத்தலாம் என சுகாதார அமைச்சர்  எப்படி தவறாகப் பரிந்துரைக்கலாம்? என ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

கொரொனா வைரஸுக்கு எதிரான சிகிச்சையில் துணைமருந்தாகப் பயன்படுத்த ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக ஐஎம்ஏ தலைவர் டாக்டர் ஜெயலால் கூறும்போது, “ஒரு நாட்டின் சுகாதார அமைச்சர் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படாத ஒரு மருந்தை கோவிட்19-க்கு எதிரான துணைச் சிகிச்சை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று எப்படி தவறாகப் பரிந்துரைக்கலாம்?

இட்டுக்கட்டப்பட்ட ஒரு மருந்தை இந்திய மக்கள் மீது திணிப்பதா? ஒரு பொருள் நேர்மையானதா, நல்லதா என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத போது அதை பயன்படுத்த அனுமதியளிப்பது அறம்தானா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே, கரோனில் என்ற மருந்துக்கு கிளினிக்கல் சோதனைகள் நடத்தப்பட்டிருந்தால் அதன் விவரங்களை தருமாறு இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு கேட்டுள்ளது. மேலும் இந்திய மெடிக்கல் கவுன்சிலின் நடத்தை விதிமுறைகளை பட்டவர்த்தனமாக மீறும் செயல் குறித்து தேசிய மருத்துவக் கழகத்திடம் புகார் எழுப்பவுள்ளதாக ஐ.எம்.. அறிக்கையில் தெளிவு படுத்தியுள்ளது.

இந்திய மெடிக்கல் கவுன்சிலின் நடத்தை விதிகளின்படி எந்த ஒரு மருத்துவரும் என்னென்ன மருந்துகள் கலக்கப்பட்டுள்ளன என்ற துல்லிய விவரம் இல்லாத எந்த ஒரு மருந்தையும் பரிந்துரை செய்யக் கூடாது. கடந்த வாரம் யோகா குரு பாபா ராம்தேவ், சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் முன்னிலையில் கரோனில் மருந்தை அறிமுகம் செய்தது.

ஆயுஷ் அமைச்சகம் இதற்கு அனுமதியளித்துள்ளது, அதுவும் உலகச் சுகாதார அமைப்பின் சான்றிதழ் முறைகளின்படி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. ஆனால் உலகச் சுகாதார அமைப்பு பதஞ்சலியின் இந்த மருந்தின் தரம், திறன் பற்றி தாங்கள் எதுவும் சோதிக்கவில்லை என்று ட்விட்டரில் மறுத்துள்ளது. அதாவது, “கோவிட் 19- காய்ச்சலுக்கு உலக சுகாதார அமைப்பு எந்த ஒரு மரபான மருந்தின் தரத்தையோ திறனையோ, சோதித்து சான்றிதழ் அளிக்கவில்லைஎன்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி மருந்து உற்பத்தி நிறுவனத்தின் கொரோனில் மருந்தை ஏன் பரிந்துரை செய்ய வேண்டும்? அந்த மருந்துக்கு ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்? என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. #ArrestRamdev, #Return_Coronil, #Ban_PatanjaliProduct போன்ற ஹேஷ்டேக்குகளும் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry