ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்தியா 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசல்வுட், 5 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, பகல்–இரவு ஆட்டமாக அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 244 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை துவக்கியது.
இந்திய அணியில் உமேஷ் யாதவ், நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோரின் வேகத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தடுமாறினர். அதேபோல், அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விழிபிதுங்கினர். அவரின் மாயாஜால சுழலில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து, 53 ரன்கள் முன்னிலையுடன், 2-ம் நாளான நேற்று இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்து, 62 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. மயங்க் அகர்வால் 9 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த 3 வது இந்திய வீரர் என்ற சாதனையை புரிந்தார்.
3-வது நாளான இன்று இந்திய வீரர்களின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகளாய் சரிந்தது. 36 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது. இதன் மூலம் இந்தியா தனது மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்து உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசல்வுட், 5 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துளார்.
இதற்கு முன் 1974 ஆம் ஆண்டில் லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் மிகக் குறைந்த ரன் 42 ஆகும். ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட்டில் வெற்றிபெற்றது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry