மெட்டா நிறுவனம், டிவிட்டருக்கும் போட்டியாக த்ரெட்ஸ் (Threads) என்ற செயலியை வரும் வியாழக்கிழமை அறிமுகப்படுத்துகிறது. டிவிட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் – மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் இடையே நீடிக்கும் போட்டியின் அடுத்தக்கட்டமாக இது பார்க்கப்படுகிறது.
த்ரெட்ஸ் செயலியின் பிரதான முன்பக்கம் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட டிவிட்டரைப் போன்றே இருக்கிறது. ‘எழுத்துகள் அடிப்படையில் உரையாடலுக்கான செயலி இது’ என மெட்டா நிறுவனம் கூறுகிறது. இன்ஸ்டாகிராம் செயலியுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த செயலியை, ஐஃபோன் பயனர்கள் முன்பதிவு அடிப்படையில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பெறலாம்.
டிவிட்டர் பயனர்கள் ஒரே நாளில் பார்க்கக் கூடிய டிவீட்களின் எண்ணிக்கையில் எலோன் மஸ்க் கடந்த சனிக்கிழமையன்றுதான் கட்டுப்பாடுகளை அறிவித்தார். அத்துடன், டிவிட்டரில் பரவலாக பயன்படுத்தப்படும் டேஷ்போர்டான, ட்வீட்டெக் (TweetDeck) வசதி அடுத்த 30 நாட்களுக்குள், பணம் செலுத்தி பெறும் ஒன்றாக மாறிவிடும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது டிவிட்டர் பயனர்களை சந்தாதாரர்களாக மாற்ற எலோன் மஸ்க் மேற்கொண்டுள்ள முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
Also Read : அச்சுறுத்தும் ஏஐ தொழில்நுட்பம்! வேலையைத் தக்க வைக்க போராட வேண்டியிருக்கும் என எச்சரிக்கை!
அதேநேரத்தில், மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் செயலியோ, இலவசமாகவும், டிவிட்டர் போன்று பதிவுகளை பார்வையிடுவதில் எந்தவொரு கட்டுப்பாடுகள் இல்லாமலும் இருக்கும் என்று தெரிகிறது.
“பல்வேறு சமூகத்தினரும் ஒரே இடத்தில் கூடி இன்றைய விஷயங்கள் குறித்தும் நாளைய டிரெண்டிங் குறித்தும் விவாதிக்கும் இடமாக த்ரெட்ஸ் இருக்கும்” என்று மெட்டா நிறுவனம் கூறுகிறது.
த்ரெட்ஸ் செயலியின் ஸ்க்ரீன்ஷாட்களை பார்க்கையில், அது கிட்டத்தட்ட ட்விட்டரைப் போன்றே இருக்கிறது. இது மெட்டா நிறுவனத்தின் செயலி என்பதால், உங்கள் செல்போனின் தரவுகள், ப்ரவுசிங் ஹிஸ்டரி போன்றவற்றையும் த்ரெட்ஸ் பயன்படுத்திக் கொள்ளும்.
மற்ற நிறுவனங்களின் யோசனைகளை வாங்கி அதனை மேம்படுத்தி வெற்றி பெறுவதில் மார்க் ஜூக்கர்பெர்க் கைதேர்ந்தவர் என்பதால், டிவிட்டருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக த்ரெட்ஸ் உருவெடுக்கும் என்று கருதப்படுகிறது. டிவிட்டருடன் போட்டியிடக் கூடிய அளவுக்கு மெட்டா நிறுவனத்திற்கு ஆதார வளம் இருக்கிறது. இன்ஸ்டாகிராம் செயலியின் ஒரு பகுதியாகவே த்ரெட்ஸ் இயங்கும். ஆகவே, தொடங்கும்போதே இது பல கோடி பயனர்களுடன் இணைக்கப்பட்டதாகவே இருக்கும்.
பேச்சுரிமைக்கு குரல் கொடுத்தமைக்காக எலோன் மஸ்க் புகழப்பட்டாலும், டிவிட்டரில் அவரது செயல்பாடுகள் அதற்கு மாறாகவே உள்ளன. டிவிட்டரின் செயல்பாடுகளால் ஏமாற்றம் அடைந்த பயனர்களை இழுப்பதன் மூலம் டிவிட்டருக்கு சரியான மாற்றாக த்ரெட்ஸை உருவெடுக்கச் செய்ய முடியும் என்று ஜூக்கர்பெர்க் நம்புவதாக தெரிகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry