காலையில் எழுந்தவுடன் நாம் என்ன சாப்பிடுகிறோம், என்ன குடிக்கிறோம்? என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், முந்தைய நாள் இரவு வரை சாப்பிட்டது செரிமானத்திற்குச் சென்றுவிடும் என்பதால், வயிறு காலியாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் காபி, டீயுடன் பிஸ்கட்டுகளை முக்கிச் சாப்பிடும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. வெறும் வயிற்றில் டீ, காபி குடிக்க வேண்டாம் என்பதற்காக பிஸ்கட் அல்லது ரஸ்க் எடுத்துக்கொள்வதாக பலரும் சொல்வார்கள். டீ, காபியோடு பிஸ்கட் சாப்பிடுவதில் அப்படி என்னதான் பிரச்னை?
காபி அல்லது டீயில் பால், டிகாக்ஷன் மற்றும் சர்க்கரை சேர்க்கிறீர்கள். அதில் நனைத்துச் சாப்பிடுகிற பிஸ்கட்டில் மைதா, சர்க்கரை, பாமாயில் அல்லது மார்ஜரின் எனப்படும் கொழுப்பு அல்லது வனஸ்பதி சேர்க்கப்படும். இவற்றில் எதிலுமே உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பொருள்கள் இல்லை. பேக்கரி பொருள்கள் எந்தளவுக்கு ஆரோக்கியமற்றவை என்பதை புதிதாகச் சொல்லத் தேவையில்லை.
Also Read : ரெடிமேட் மாவு வாங்கி இட்லி, தோசை செய்யறீங்களா? இந்த உண்மை தெரிஞ்சா இனி வாங்கவே மாட்டீங்க..!
பிஸ்கட்டுகள் பெரும்பாலும் மைதா அல்லது குளுட்டன் நிறைந்த மாவுகளில் தான் செய்யப்படுகிறது. அதோடு ரீஃபைண்ட் ஆயில் மற்றும் பட்டர் ஆகியவை அதிகமாக சேர்க்கப்படுகிறது. இவை டிரான்ஸ் கொழுப்பாக மாறி, உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதை காஃபைன் கொண்ட டீ, காபி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடும் போது இது ரத்தக் குழாய்களில் கெட்ட கொழுப்பு படிதலுக்குக் காரணமாகிறது. அதனால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கார்டியோ வாஸ்குலர் நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.
எல்லா பிஸ்கட்டுகளிலும் உப்பு இருக்காது. சிலர் பிஸ்கட்டுகளில் இனிப்பு இருக்கும் என்று சொல்லி, சர்க்கரை இல்லாத உப்பு பிஸ்கட்டை விரும்பி சாப்பிடுவார்கள். அது மிக மிக ஆபத்து. ஏற்கனவே பிஸ்கட்டி்ல் சேர்க்கப்படும் மாவு மற்றும் எண்ணெய் உடலுக்கு மிக மோசமானது. அதோடு உப்பும் அதிகமாக சேர்க்கப்படும் பிஸ்கட் சாப்பிடும்போது அது ரத்த அழுத்தத்தில் மாற்றத்தை ஏற்படும். உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அது பக்கவாத ஆபத்தைக் கூட ஏற்படுத்தும்.
பிஸ்கட்டுகளில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சர்க்கரை சேர்க்கப்படும். அதோடு டீயிலும் சர்க்கரை இருக்கும். இந்த இரண்டும் சேரும் போது சருமத்தில் சீபம் சுரப்பு உண்டாகும். சருமத்தில் சீபம் சுரப்பு அதிகரிக்கும் போது முகத்தில் பருக்கள் அதிகமாக வரும். இதை தொடரும்போது பருக்கள் அப்படியே அமுங்கி. கரும்புள்ளிகளாகவும் மாறும் வாய்ப்பு உண்டு.
தினமும் பிஸ்கட் சாப்பிடுவது, டீயில் பிஸ்கட்டை முக்கி சாப்பிடுவது ஆகியவை குடல் ஆரோக்கியத்தையும் ஜீரணத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதை தினமும் செய்பவர்களுக்கு அஜீரணக் கோளாறும் அதனால் அடிக்கடி வயிற்றுப் போக்கும் ஏற்படும் வாய்ப்பு உண்டு. பிஸ்கட்டுகளில் நார்ச்சத்துக்களே கிடையாது. கார்போ ஹைட்ரேட், கொழுப்பு ஆகியவை சேர்ந்து ஜீரண ஆற்றலை பாதிக்கும். தினமும் டீயுடன் பிஸ்கட்டுகளைச் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது அது மலத்தை இறுக்கி, மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
Also Read : உயிருக்கே உலைவைக்கும் சோடியம்! அதிகரித்தால் மட்டுமல்ல, குறைந்தாலும் பிரச்சனைதான்!
பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் கார்போஹைட்ரேட், கொழுப்பு உள்ளிட்டவை இயல்பாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவை பாதிக்கும். பிஸ்கட்டுகளில் நார்ச்சத்தும் மிக மிகக் குறைவு. கிளைசெமிக் குறியீடு பிஸ்கட்டில் மிக மிக அதிகம் என்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக கிடுகிடுவென உயர்த்தும்.
பிஸ்கட்டை வெற்று கலோரிகள் கொண்ட ஸ்நாக்ஸ் என்றே சொல்லலாம். பிஸ்கட்டுகளில் சர்க்கரை, சோடியம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவை மட்டுமே இருக்கின்றன. பிஸ்கட்டுகளில் எந்தவித நுண்ணூட்டச்சத்துக்களும் கிடையாது. அதனால் பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது எந்தவித ஊட்டச்சத்துக்களும் இல்லாமல் வெறும் கலோரிகள் மட்டுமே இருக்கின்றன.
மாவுப் பொருள்கள், சர்க்கரை, கொழுப்பு ஆகியவை பிஸ்கட்டுகளில் இருக்கும். இவை இயற்கையாகவே உடலில் உள்ள தண்ணீரை அதிகமாக உறிஞ்சிக் கொள்ளும். அதனால் தினமும் பிஸ்கட் சாப்பிடும்போது உடலில் நீர்ச்சத்து குறைபாடு அதிகரிக்கும். அதோடு குடலின் பிஎச் அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இது குடல் மற்றும் ஜீரண மண்டலத்தில் இன்ஃபிளமேஷன்கள் மற்றும் அழற்சியை ஏற்படுத்தக் கூடும்.
தினமும் பிஸ்கட்டுகளில் டீயை முக்கிச் சாப்பிடுகிறவர்களுக்கு உடல் எடை வேகமாக அதிகரிக்கும். இதில் கலோரிகள் மிக அதிகம். சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டும் அதிகம், நார்ச்சத்தோ அல்லது வேறு ஊட்டச்சத்துக்களோ கிடையாது என்பதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
டீ மற்றும் காபியுடன் ரஸ்க், பிஸ்கட்டிற்கு பதிலாக பழங்களை சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இருப்பினும், சிட்ரஸ் பழங்களை தவிர்ப்பது நல்லது. காலையில் எழுந்ததும் வெறும்வயிற்றில் வேறு என்னதான் சாப்பிடுவது என்ற கேள்வி பலருக்கு உண்டு. சீரகம் சேர்த்துக் கொதிக்கவைத்த தண்ணீர் குடிக்கலாம். சீரகம், ஓமம், பெருஞ்சீரகம் சேர்த்த தண்ணீரும் நல்லது. ஊறவைத்த பாதாம் அல்லது வால்நட்ஸ், இரண்டு பேரீச்சம்பழம்கூட எடுத்துக்கொள்ளலாம்.
டீ, காபியோடு ஏதாவது சாப்பிட்டால்தான் ஆச்சு… அப்படியே பழகிவிட்டோம் என்று சொல்பவர்கள், நெல் பொரி அல்லது அரிசிப் பொரி சாப்பிடலாம். அல்லது நீங்களே வீட்டில் ஆரோக்கியமான முறையில் சிறுதானிய மாவு, நாட்டுச்சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கிற பிஸ்கட் கூட ஓகே. மற்றபடி காலையில் வெறும்வயிற்றில் பிஸ்கட், பன், பிரெட், ரஸ்க் என எதையும் சாப்பிடாதீர்கள்.
Image Source : Getty Source
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry