மத்திய அரசின் விவசாய வளர்ச்சி நிதி திமுகவுக்கு செலவிடப்படுகிறதா? முதலமைச்சருக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி!

0
50
PR Pandian press conference at Mannargudi

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “மத்திய அரசால் ஒதுக்கப்படுகிற ஆத்மா திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுக்களில், அனைத்து மட்டங்களிலும், விவசாயிகள் பெயரில் திமுக நிர்வாகிகளே இடம்பெற்றுள்ளனர்.

ஒதுக்கப்படும் நிதியானது, தமிழ்நாடு முழுமையிலும், முதலமைச்சர் பங்கேற்கும் விழாக்களுக்காக செலவழித்துவிட்டு, விவசாயிகள் என்கிற பெயரில் விளம்பரத்திற்காக வீணடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. விவசாய வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டிய நிதியை, தன்னுடைய கட்சி நலனுக்காக முதலமைச்சர் பயன்படுத்துகிறாரோ? என அஞ்சத் தோன்றுகிறது. இச்செயல் விவசாயிகளின் வளர்ச்சியை தடுக்கும் உள்நோக்கும் கொண்டது.

மாவட்ட வேளாண் உற்பத்திகாண உயர்மட்ட ஆலோசனை குழுக்கள் முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உறுப்பினராக இருந்த விவசாயிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. எனவே அரசியல் தலையீடின்றி வேளாண் வளர்ச்சிக்கான ஆத்மா திட்டம் முதல், அனைத்து குழுக்களையும் விவசாயிகளைக் கொண்டு அமைக்க முன்வர வேண்டும்.

காவிரியில் உரிய காலத்தில் தண்ணீரை பெறாமல் குறுவை சாகுபடிக்கு உரிய திட்டமிடல் இல்லாத நிலையில் ஜூன் 12ல் காவிரி நீர் திறக்கப்பட்டது. நீர் மேலாண்மையில் ஏற்பட்ட குளறுபடியால் காவிரி டெல்டாவில் 3.50 லட்சம் ஏக்கரில் நேரடி விதைப்பு செய்து பயிர் கருகுவதைப் பார்த்து விவசாயிகள் கண்ணீர் விட்டுக் கதறுகிறார்கள். பல கிராமங்களில் முளைத்த பயிர்களை டிராக்டரை வைத்து உழவு செய்து அழித்து வருகிறார்கள். பருத்திக்கு உரிய விலை கிடைக்காமல் பயிரை டிராக்டர் விட்டு அழித்து வருகிறார்கள். தேங்காய்க்கு விலை கிடைக்காமல் வீதியிலேயே கொட்டி விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாக்க முன்வராத முதலமைச்சர், விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறுகிற போது திருச்சியில் வேளாண் சங்கமம் நடத்துவது தேவையா? நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் முதலமைச்சர் குறுவை பாதிப்பை டெல்டா மாவட்டங்களில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டும்.

Also Read : பள்ளிக்கூடமா? சித்திரவதைக்கூடமா? ஆசிரியர்கள் உரிமைக்காக குரல் கொடுப்போம் வாரீர்..! ஐபெட்டோ அண்ணாமலை அழைப்பு!

குறுவை பாதிக்கப்பட்ட பயிருக்கு 3வது ஆண்டாக காப்பீடு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு, ஏக்கர் ஒன்றுக்கு 35,000 ரூபாய் இழப்பீடாக வழங்கி விவசாயிகளை தற்கொலையிலிருந்து பாதுகாக்க முன்வர வேண்டும். தற்போது கிடைக்கும் தண்ணீரை கொண்டு ஒருபோக சம்பா சாகுபடி திட்டத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பதை காலத்தில் திட்டமிட்டு சாகுபடி பணியை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். வளையமாதேவி கிராமத்தில் முதிர்ந்த பயிரை ராட்சத மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு அழித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். இச்செயல் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. வளரும் பயிரை அழிப்பதற்கு சட்டரீதியாக யாருக்கும் அனுமதி கிடையாது. பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறுவதை காவல்துறையைக் கொண்டு அடக்குவதும், பயிர்களை அழிப்பதும் மனிதநேயமற்ற செயல் என்பதை தமிழ்நாடு அரசு உணர்ந்து முதலமைச்சர் உடனடியாக தடுத்து நிறுத்த முன் வர வேண்டும்.

Also Read : NLC விரிவாக்கப்பணி! தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஜேசிபி மூலம் அழிக்கப்படும் பசுமை வயல்கள்!

கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதற்கு 2022ல் தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட வரைவு திட்ட அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறை நிராகரித்துவிட்டது. தற்போதைய காங்கிரஸ் அரசு ஆய்வு என்ற பெயரில் அணை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு வனத்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு அமைத்திருப்பது சட்டவிரோதமானது. இது குறித்து முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்காதது தமிழ்நாடு விவசாயிகளுக்கு செய்யும் மிகப்பெரும் துரோகமாகும்.

நாகப்பட்டினம் முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலை வேளாண் தொழில் வட சாலை என பெயர் சூட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. இதுவரையிலும் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் எதுவும் துவக்கப்படவில்லை. அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாகவும் தெரியவில்லை.” இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry