ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கும் ChatGPT செயலி! கதை, கவிதை, கட்டுரை எழுத இனி கவலை வேண்டாம்! How to download ChatGPT on Android?

0
99
GETTY IMAGE

Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு பல்வேறு வாதப் பிரதிவாதங்களை கிளப்பி இருந்தாலும், அதன் முக்கியத்துவம் அதிகரித்துத்தான் வருகிறது. மொபைல் ஃபோன்களில் AI செயலி இன்றியமையாததாகி வருகிறது.

அந்த வகையில், ChatGPT (‘Generative Pre- Trained Transformer’ – GPT) செயலி முக்கியத்துவம் பெறத் தொடங்கி இருக்கிறது. இந்தச் செயலி OpenAI நிறுவனத்தின் சாட்போட்(ChatBot) எனப்படும் கணினி மென்பொருள் மூலம் இயங்குகிறது. இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன், மனிதனைப் போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத இயலும்.

பயனாளர் ஒருவர் கேள்விகளை எழுப்பினாலோ, ஒரு செயலை மேற்கொள்ள உத்தரவிட்டாலோ, அதுதொடர்பாக இணையத்தில் கிடைக்கப்பெறும் தகவல்களை கொண்டு பதிலளிப்பது மட்டுமின்றி, பயனர்களால் கோரப்படும் குறிப்பிட்ட செயல்களையும் இது செய்து முடிக்கும். சாட்ஜிபிடியில் வழக்கமான தட்டச்சு செய்து ஒரு தகவலை தேடும் வசதியுடன், குரல் பதிவு தேடல் வசதியும் உள்ளது.

Also Read : அச்சுறுத்தும் ஏஐ தொழில்நுட்பம்! வேலையைத் தக்க வைக்க போராட வேண்டியிருக்கும் என எச்சரிக்கை!

ஒரு உரையாடலின் முந்தைய பதிவை பார்க்கும் வசதியும், தரவுகளை பதிவேற்றம் செய்யும் வாய்ப்பும் இதில் உள்ளது. கூகுள் தேடலுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயலியை, ஒரு தலைப்பைப் பற்றிய உள்ளடக்கத்தை பெறுவதற்கும் பயனர்கள் உபயோகித்து வருகின்றனர். கணினி குறியீடுகளை எழுதுவதிலும் பயனாளர்களுக்கு இது குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது.

இருப்பினும், ஒரு குறிப்பிட்ட கேள்வி தொடர்பாக போதுமான தகவல் இணையத்தில் இல்லாவிட்டாலும், அந்த தகவல்கள் சாட்ஜிபிடிக்கு கிடைக்கப் பெறாவிட்டாலும், அக்கேள்வி அல்லது கட்டளைக்கு நிறைவான பதில் கிடைக்காது.

ஐஃபோன்களில் பிளக் -இன் எனப்படும் பிரத்யேக மென்பொருள் வசதியுடன், சாட் ஜிபிடி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் ChatGPT எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயலி தற்போது கிடைக்கிறது. இந்தச் செயலியை வடிவமைத்துள்ள ‘ Open AI’ நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சாட்ஜிபிடி செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு இந்தியா, வங்கதேசம், அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் தற்போது கிடைக்கப் பெறுவதாக Open AI நிறுவனம் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு செல்ஃபோனில் நிறுவ வசதியாக, கூகுள் ப்ளே ஸ்டோரில் இச்செயலி செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) முதல் கிடைக்கப் பெறுகிறது. ஆண்ட்ராய்டு வகை ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்துபவர்கள், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து சாட் ஜிபிடியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்யும்போது இலச்சினையின் வலதுபுறம் Chat GPT என்றும், அதற்குக் கீழே OpenAI எனவும் எழுதப்பட்டிருக்கும். இப்படி தோன்றினால்தான் அது உண்மையான செயலி. அதன்பின் ஜிமெயில் மின்னஞ்சல் வசதியுடன் இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தலாம். மார்ஷ்மெல்லோ எனப்படும் 6.0 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளை கொண்ட ஆண்ட்ராய்டு இயங்குதள ஸ்மார்ட்ஃபோன்களில் மட்டும் சாட் ஜிபிடி செயலியைப் பயன்படுத்த இயலும்.

Also Read : என்.எல்.சி.யால் அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு! பீதியில் கடலூர் மாவட்ட மக்கள்! நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்துமா தமிழக அரசு?

சாட்ஜிபிடி செயலி, பயனர்கள் குறித்த பல்வேறு தரவுகளை சேகரிக்கும் திறன் படைத்தது என்று இதை வடிவமைத்துள்ள OpenAI நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் பயனர்களின் இருப்பிடத்தையும் இதனால் கண்டறிய இயலும். மேலும் பெயர், இருப்பிட முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற பயனர்களின் தனிப்பட்ட தகவல்களையும் இச்செயலி கேட்டு பெறுகிறது. இருப்பினும், பயனர்களின் இந்தத் தகவல்கள் பிற நிறுவனங்களுடன் ஒருபோதும் பகிரப்படாது என்று Open AI நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும், தங்களை பற்றிய தரவுகளை செயலியில் இருந்து நீக்க பயனாளர்கள் விரும்பினால் அவர்கள் நீக்கிக்கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry