காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்தை எட்டும் நிலையில் அங்குள்ள மக்களின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அரபு நாடுகளில் மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து வருகிறது.
அந்தப் பிராந்தியத்தில் நிலைமை மேலும் மோசமாகி விடாமல் தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்காக, அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் மூன்று நாட்களாக அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எந்த நேரத்திலும் மோசமடையக் கூடிய ஆபத்தில் உள்ள போர்ச் சூழ்நிலையை சமாளிப்பதுதான் அவருடைய திட்டமாக உள்ளது.
காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டதற்கும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், போரை இடைநிறுத்தம் செய்யும் முயற்சியாகவும் இஸ்ரேலிய தலைவர்களை சமாதானப்படுத்த பிளிங்கன் முயன்றார். ஆனால் இஸ்ரேலிய பிரதமர் அதற்கு உடன்படாமல், உடனடியாக மறுத்துவிட்டார். ஒவ்வொருவரும் தங்கள் நாட்டுக்குள் இருந்து அழுத்தத்தை எதிர்கொள்வதால், அரபு நாடுகளோ அல்லது இஸ்ரேலோ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் பேச்சைக் கேட்பதாகத் தெரியவில்லை.
Also Read : இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சனையின் பின்னணி! ஹமாஸ் இயக்கம் தோன்றிய வரலாறு! The Israeli-Palestinian conflict!
வடக்கு காசாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர நான்கு மணி நேர அவகாசத்தை அளிக்கப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை (0800-12:00 ஜிஎம்டி) பொதுமக்கள் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், சுமார் 3,50,000 முதல் 4,00,000 பேர் தற்போது வடக்கு பகுதியில் தங்கியுள்ளனர் என்று அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேலின் வலதுசாரிக் கட்சி உறுப்பினரும் இஸ்ரேலிய அமைச்சருமான அமிச்சாய் எலியாஹு, ஹமாஸுக்கு எதிராக ‘காஸா பகுதியில் அணு ஆயுதங்களைப் பிரயோகிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். எலியாஹு, இஸ்ரேல் அரசின் பாரம்பரியத் துறை அமைச்சர். அவர் ஓட்ஸ்மா யெஹூதித் (யூத அதிகாரம்) எனும் கட்சியின் தலைவரும் ஆவார். இவரது அறிக்கை வெளியான பிறகு, இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பதில் இருந்து எலியாஹு காலவரையின்றி தடை செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பரபரப்புக்கு மத்தியில், இஸ்ரேல் ராணுவம் மீது EURO-MED மனித உரிமை அமைப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. போர் தொடங்கிய அக்டோபர் 7ஆம் தேதி முதல் இதுவரை காஸா பகுதிகள் மீது 25,000 டன் வெடிகுண்டுகளை இஸ்ரேல் ராணுவம் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது. காஸா நகரங்கள் மீது கொத்துக்குண்டுகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.
இது இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டின் தாக்கத்தை காட்டிலும் இரண்டு முறை சக்திவாய்ந்தது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. காஸா பகுதியில் உள்ள 12 ஆயிரம் இலக்குகளை குறிவைத்தே இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, காசா குழந்தைகளின் மயானமாகிறது, உடனடியாகப் போரை நிறுத்துங்கள் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கேட்டுக்கொண்டுள்ளார். ’இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஒரு மாதத்தைக் கடந்துவிட்டது. 4100 குழந்தைகள், 2640 பெண்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காசாவில் உயிரிழந்தனர். அந்தப் பிராந்தியமே குழந்தைகளின் மயானமாகிறது. உடனடியாகப் போரை நிறுத்துங்கள்’ என்று அண்டோனியோ குத்ரேஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஸாவில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று பல நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தியுள்ளன. ஆனால் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை இந்த யோசனையை ஆதரிக்கவில்லை. இது அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய அரசாங்கங்களால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸுக்கு பயனளிக்கும் என்று அவை கூறுகின்றன.
போர் நிறுத்தத்திற்குப் பதிலாக அமெரிக்கா மனிதாபிமான ரீதியிலான போர் இடைநிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. முறையான போர் நிறுத்தத்துடன் ஒப்பிடும்போது, மனிதாபிமான இடைநிறுத்தங்கள் குறுகிய காலத்திற்கே நீடிக்கும். சில நேரங்களில் சில மணி நேரங்கள் மட்டுமே நீடிக்கும். வரையறுக்கப்பட்ட காலம் மற்றும் குறிப்பிட்ட இடத்தை உள்ளடக்கியதாகவே இருக்கும்.
மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்ய சர்வதேச அமைப்புகள், உலக நாடுகள் பலவும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “மனிதாபிமான உதவிகள் காசாவுக்குள் சென்று சேர்வதை உறுதி செய்யவும், பிணைக் கைதிகள் பத்திரமாக வெளியேற வழிவகுக்கவும், அவ்வப்போது சரியாக திட்டமிட்டு சற்றே லாவகமாக காசாவில் தாக்குதலை நிறுத்துவது பற்றி பரிசீலிப்போம். ஆனால் ஏற்கெனவே கூறியபடி போர் நிறுத்தம் என்பதற்கு வாய்ப்பில்லை. போர் முடிந்த பின்னர் காசாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் சில காலம் எடுத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொறுப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த காசாவையும் சுற்றிவளைத்து விட்டதாகவும் வடக்கு, தெற்கென்றில்லாமல் காசாவை இரண்டாகப் பிரித்து தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1400 பேர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் வசம் உள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry