3.30 Minute(s) Read : சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் அமாவாசைவரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மகாளயம் என்று பெயர். மஹாளய பட்சம் என்பது ஆவணி மாதப் பௌர்ணமிக்குப் பின் வரும் தேய்பிறை 15 நாள்களைக் குறிக்கும். ‘மகாளயம்’ என்றால் ‘பெரிய கூட்டம் என்று பொருள்’. பட்சம் என்றால் பதினைந்து நாள்கள். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம்.
நம்முடைய பிறப்பானது மூன்று கன்ம நிலைகளால் ஆனது. 1. பூர்வ கன்மம் (நம்முடைய முன்னோர்கள் செய்த வினை மற்றும் நம்முடைய முற்பிறவியில் நாம் செய்த வினை). 2. சஞ்சித கன்மம் (நாம் அனுபவித்தது போக எஞ்சியுள்ள வினை). 3. பிராப்த கர்மம் (இந்த பிறவிக்குக் காரணமான வினை). இந்த மூன்று கன்மங்கள்தான், நல்வினை, தீவினை என இரண்டு வினைகளாகிறது. இந்த வினைகள் தான் நம்முடைய வாழ்க்கையை வழிநடத்தக்கூடிய அஸ்திவாரமாகும். நம்முடைய வாழ்க்கை, நம்முடைய சிந்தனை, செயல்கள் என அனைத்தும் நம் முன்னோர்களின் வினைப்பதிவுகளின் அடிப்படையிலேயே செயல்படுகிறது.
கர்மாவைப் பொறுத்தவரை, நம்முடைய முன்னோர்கள் செய்த தீவினைகள், நம்முடைய முற்பிறவியில் நாம் செய்த தீவினைகள், இந்தப் பிறவியில் செய்து கொண்டிருக்கும் தீவினைகள் ஆகியவற்றால் நாம் துன்பங்களை அனுபவிக்கின்றோம். இந்தத் துன்பங்கள், வாழ்க்கை போராட்டங்கள் தான் கர்மாவாக செயல்படுகின்றன. நம் முன்னோர்களின் ஆத்மாவை சாந்தி செய்வதால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகள் நீங்கும். முன்னோர்களை வழிபாடு செய்வதினால் நம்முடைய உடலில் உள்ள கர்மாவும் தூய்மை அடைய வழி ஏற்படும்.
எனவே முன்னோர் வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. மஹாளயபட்ச காலமான பதினைந்து நாட்கள், நமது முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து வந்து நம்மோடு தங்குவார்கள் என்பது ஐதீகம். மஹாளயபட்ச காலத்தில் நமது முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள். மஹாளயபட்ச தர்ப்பணம் செய்வதால், நமது முன்னோர்கள் ஆசியுடன் நமது வாழ்க்கை சிறப்படையும். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசையாகும்.
மஹாளய கால பதினைந்து நாட்களில் ஒரு முறையும், அமாவாசையன்று ஒரு முறையும் என இரண்டு முறை தர்ப்பணம் செய்வது சிறப்பு. மஹாளயபட்ச காலத்தில் மஹாபரணி, மத்யாஷ்டமி, மஹா வியதீபாதம், வைதிருதி, அவிதவா நவமி ஆகிய நாள்களில் தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாள்களில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் மற்ற ஏதாவது ஒரு நாளில் மஹாளய பட்சத்திற்குள் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
Also Read : உடல் பருமன் அறிகுறிகள்; ஏற்படுத்தும் நோய்கள்! Obesity: What You Need to Know
பொதுவாக ஒவ்வோர் அமாவாசையன்றும் செய்யும் தர்ப்பணம் யமதர்மராஜனின் கைகளுக்குச் சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்குச் சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாளயபட்சமான பதினைந்து நாள்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்து இருப்பதாக நம்பிக்கை.
ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் ஸ்ரீமந்நாராயணனே பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு மாதமும் அமாவாசை முதலான முக்கியமான நாள்களில் அவரவரின் வீடுகளுக்குப் பித்ருக்கள் வந்து, வாசற்படிக்கு முன் நின்று, தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதித்துச் செல்கிறார்கள் என்றும், ஒருவேளை சிறப்பாகத் தர்ப்பணம் செய்யாமல் விட்டு, அதனால் அவர்கள் மனவருத்தம் அடைந்தால், அது சாபமாக மாறி நம்மைப் பாதிப்பதாகவும் சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.
எனவே, மஹாளயபட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல, நம் தலைமுறைக்கும் சேர்த்துதான். மஹாளயபட்ச தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன், நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்.
Also Read : சுவையான நஞ்சா அஜினோமோட்டோ? அதென்ன ‘சைனீல் ரெஸ்டாரன்ட் சின்ட்ரோம்’? THE HARMFUL EFFECTS OF AJINOMOTO!
தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாயார், பாட்டி, கொள்ளுப் பாட்டி (தாயார் உயிருடன் இருந்தால் பாட்டி, கொள்ளுப் பாட்டி, எள்ளுப் பாட்டி), தாய் வழித் தாத்தா பாட்டி என மூன்று தலைமுறையினர், நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் அனைவருக்குமாக இந்தக் காலங்களில் தர்ப்பணம் செய்யலாம்.
சிலருக்குக் கர்ப்பத்திலேயே கரு கலைந்திருக்கலாம்; சிறு குழந்தையாக இருக்கும்போதே இறந்திருக்கலாம்; சிலர், விபத்து போன்று அகால மரணம் அடைந்திருக்கலாம். அந்த ஆத்மாக்கள் அனைத்தையும் திருப்தி அடையச் செய்வதற்கு மஹாளயபட்சம் சிறந்த நாளாகும்.
மஹாளயபட்ச நாள்களில் தினமும் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். தாம்பத்யம் வைத்துக் கொள்ளக் கூடாது. சைவ உணவை மட்டும் சாப்பிட வேண்டும். உணவில் பூண்டு, வெங்காயம், சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இந்த காலத்தில் நம் முன்னோர்கள் நம்முடன் வசிப்பதால் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். நம் முன்னோர்களை வழிபட்ட பின்னரே, பூஜைகளை செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்பவர்கள், தினமும் தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டில் பூஜை செய்ய விளக்கேற்றி வழிபட்டு அன்றாட பணிகளை தொடங்க வேண்டும்.
வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மஹாளயபட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அனைத்து முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும்.
புனித நீர் நிலைகள் கடலுக்குச் சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்தித்து வர வேண்டும். வயதில் பெரியவர்களுக்கும், கற்றறிந்த அறிஞர்களுக்கும் ஆடைகள், ஏழைகளுக்கு பசிக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் முன்னோர்கள் ப்ரீதியடைந்து நம்மை நன்கு ஆசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், பங்களிகளின் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். மஹாளயபட்ச காலத்தில் முன்னோர்களை வழிபடுவதன் மூலம் புத்திர பாக்கியம், ஞானம், கல்வி, சத்ரு ஜயம், சுக சம்பத்துக்கள் ஆகியவை கிடைக்கும்.
சுய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு கேதுகளுக்குடன் எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் அது பித்ரு தோஷமாகும். ஜாதகத்தில் ராகு-கேது 1, 5, 7, 9 இடங்களில் இருந்தாலும் அது பித்ரு தோஷம் ஆகும். ராகுவுடன் சூரியனும் சனியும் சிம்மத்தில் சேர்ந்து இருந்தால் மூன்று தலைமுறைக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தமாகும். பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது.
Also Read : பஞ்சாங்கம் என்றால் என்ன? எது சரியானது… திருக்கணிதப் பஞ்சாங்கமா, வாக்கியப் பஞ்சாங்கமா?
ஒருவரின் ஜாதகத்தில் கிரகநிலைகள் யோகநிலையில் இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ரு தேவதைகளும் தடை செய்வார்கள். எனவே மஹாளயபட்ச காலத்தில் வரும் மஹாளய அமாவாசையில் தானம் செய்து பித்ரு கடனை நிறைவேற்றுவோம். தானம் கொடுத்து சாபம் நீங்கப்பெறுவோம். முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெறுவோம்.
தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக, ‘ஏஷாம் ந மாதா ந பிதா… குசோதகை:’ என்று மந்திரம் சொல்லச் சொல்வார்கள். ‘எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ… இதுபோன்று யாருமே அற்ற அநாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு, நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும்’ என்று, ஜாதி மத பேதமற்று, உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் எனப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறது நமது சாஸ்திரம். இந்த ஆண்டு(2023) மகாளய பட்சம் செப்டம்பர் 30 ம் தேதி சனிக்கிழமை தொடங்கி, மகாளய அமாவாசை தினமான அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமை வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry