இளம் தலைமுறையினரை பிஎப்ஐ தவறாக வழிநடத்தியது! தடையை வரவேற்பதாக முஸ்லீம் லீக் அறிவிப்பு!

0
94

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகள் இல்லங்களில் சில தினங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் நிர்வாகிகள் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து பாஜக நிர்வாகிகள், இந்து இயக்கங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எஸ்டிபிஐ கட்சியினர் உள்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்குத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வரவேற்றுள்ளது. கேரளத்தில் மிக வலுவாக இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. அக்கட்சிக்கு கேரளத்தில் 15-க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் உள்ளனர்.

Also Read : PFI மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் தடை குறித்துப் பேசியிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கேரள எம்எல்ஏவுமான எம்.கே.முனீர் கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திருக்குரானை தவறான புரிந்துகொண்டு அந்த அமைப்பினர் சமூக மக்களை தவறாக வழிநடத்தியுள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா இளம் தலைமுறையினரை தவறாக வழிநடத்தியதுடன், சமூகத்தில் பிளவையும், வெறுப்பையும் ஏற்படுத்த முயற்சித்தது.

சிறுகுழந்தைகளைக் கூட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அவமதிப்பு முழக்கத்தை எழுப்பச் செய்தனர். இஸ்லாம் அப்படிச் செய்ய வலியுறுத்தவே இல்லை. ஆர்எஸ்எஸ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ ஆகியவற்றை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எதிர்க்கிறது. அதன் சிந்தாந்தங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.”என தெரிவித்தார். கேரள மாநில காங்கிரஸ் கட்சியும் பிஎஃப் தடை செய்யப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளது.

மத்திய அரசின் தடையைத் தொடர்ந்து பி.எப்.ஐ. அமைப்பின் இணையதள பக்கம் முடக்கப்பட்டது. அந்த அமைப்பின் டிவிட்டர் பக்கமும் நீக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தடையை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது
நாடு முழுவதும் 17-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் செயல்படுகின்றன. இவற்றின் மீது 1,300 குற்ற வழக்குகளை போலீஸாரும், என்ஐஏ.வும் பதிவு செய்துள்ளன.

பிஎஃப்ஐ நிர்வாகிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் செய்வது எப்படி என்ற கையேடுகள், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்காக ஆவணங்கள், தீவிரவாத அமைப்புகளின் சி.டி.க்கள், எளிதில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான குறுகிய கால பயிற்சி குறித்த ஆவணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களுக்கும் இந்த அரசாணை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry