பட்டென காலில் விழுந்த மாஃபா பாண்டியராஜன்! OPS உள்நோக்கத்துடன் செயல்படுவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

0
402

அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் எனக் கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ். உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “திட்டமிட்டபடி செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடக்கும். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியே ஆக வேண்டும் என கடிதம் எழுதியுள்ளனர். மேல்மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை ஒற்றை தலைமை குறித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஒற்றை தலைமை 100 சதவீதம் ஏற்று கொள்ளப்பட்டு விட்டது.

பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பி.எஸ்., கடிதம் எழுதியது வழக்கத்திற்கு மாறான ஒன்று. கடிதம் எழுதிவிட்டு, அதை ஊடகங்களுக்கு வெளியிட்டது ஏன்?. அவரது உள்நோக்கம் சந்தேகத்திற்குரியது. கடிதம் வாயிலாக தொடர்பு கொள்ள ஓ.பி.எஸ்., முயன்றது தவறு. இ.பி.எஸ்., ஒற்றை தலைமையாக வர வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர்.

ஒற்றை தலைமை நல்ல விஷயம் என்பதால் அதை வெளியில் சொன்னேன். ஒற்றை தலைமை குறித்து பேசியது சரி. தவறு இல்லை. நிர்வாகிகளின் கருத்து தொண்டர்களுக்கு தெரியக்கூடாது என ஓ.பி.எஸ்., நினைக்கிறாரா?. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைப்பாளர் பார்ப்பது ஏன்? கட்சியின் விதி தனக்கு பொருந்தாது என ஓ.பி.எஸ். நினைக்கிறாரா? இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

இதனிடையே, ஓபிஎஸ் முகாம் பலவீனமடைந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த நெல்லை மாவட்ட செயாலளர் கணேஷ் ராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோர் எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஓ. பன்னீர் செல்வத்தின் வலதுகரம் போல் நேற்றுவரை செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இன்று எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அவரது காலிலேயே விழுந்த ஆதரவு தெரிவித்துள்ளார். எடப்பாடி வீட்டினுள் பூங்கொத்து கொடுத்து அவருக்கு தனது ஆதரவை தெரிவித்த பாண்டியராஜன், திடீரென எடப்பாடி பழனிச்சாமியின் காலில் விழுந்தார். ஆனால் இதனை கவனிக்காத எடப்பாடி பழனிச்சாமி பின்னர் சந்திக்கலாம் எனக் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry