கொரோனா வேகமாகப் பரவி வரும் நேரத்தில் புதுச்சேரி அரசு மேற்கொள்ளும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்று கலாம் சேவை மையம் குற்றஞ்சாட்டியுள்ளது. மக்களின் உயிரைக் காப்பதில் அரசு மெத்தனமாக இருப்பதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மையத்தின் நிறுவனரும், சமூக ஆர்வலருமான வழக்கறிஞர் சம்பத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரி பிராந்தியத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேகத்தில் உயிரழப்பும் அதிகரிப்பு கவலை தருவதாக இருக்கிறது.
ஜிப்மர், இந்திரா காந்தி அரசு மருத்துவமனைகள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது. ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு 24-ந் தேதி மூடப்படும் என்று அறிவிக்கபட்டிருக்கிறது. இந்த மருத்துவமனைகளில், படுக்கை இல்லாத காரணத்தால், பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
அரியூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியை கோவிட் சிகிச்சை மையமாக அரசு மாற்றியுள்ளதாக தெரிகிறது. அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் கோவிட் தொற்றோல் பாதிக்கப்பட்டனர். என்.ஆர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், முன்னாள் அமைச்சர் ஏழுமலை ஆகியோரை கொரோனாவுக்கு பலிகொடுத்துவிட்டோம்.
கொரோனா புள்ளிவிவரத்தை பார்த்தால், கடந்த 10 நாளில் வெகுவாக அதிகரிப்பத்திருப்பது தெரிகிறது. ஒரே நாளில் 10 பேர் வரை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், ஒரே நாளில் அதிகபட்சமாக 370 பேர் வரை தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்றுதான், குறைந்தது 10 நாட்களுக்காவது முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என கடந்த 12-ந் தேதி அரசுக்கு கலாம் சேவையம் வேண்டுகோள் விடுத்தது.
ஆனால், அதை நிராகரித்த அரசு, செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் தளர்வில்லா ஊரடங்கு என அறிவித்தது. இது எந்த விதத்திலும் கைகொடுக்கவில்லை என்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதுவரை கொரோனா தொற்றால் 137 பேர் உயிரிழந்த நிலையில், 9,297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டமன்ற கூட்டத்தொடரை திறந்தவெளியில் நடத்தும் அரசு, மக்களின் உயிரை துச்சமென கருதுவது சரிதானா? இனிமேலும் மெத்தனமாக இல்லாமல், குறைந்தது இரண்டு வாரங்களுக்கு தளர்வில்லா ஊரடங்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பிற மாநிலத்தவர்களின் வருகையை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில், உயிர்வாழ்வதே லாபம் என கருதப்படும் நிலையில், வாழ்வாதாரம் என்பதை காரணம் காட்டி இந்தக் கோரிக்கையையும் அரசு நிராகரித்துவிடக் கூடாது.
அதேபோல், கொரோனா தவிர்த்து, நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாதநிலை உள்ளது. அவர்களுக்காக மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள, வீட்டிலிருந்தே இலவச மருத்துவ ஆலோசனை பெறும் eSanjeevani திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் சம்பத் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக குழு தலைவர் அன்பழகன், முதலமைச்சர் நாராயணசாமியிடம் மனு கொடுத்துள்ளார்.
அதில், மக்களின் உயிர் காக்க 10 தினங்கள் முழுமையாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி, பிற மாநிலத்தில் இருந்து நம் மாநிலத்திற்குள் வரும் 168 சாலைகளையும் முழுமையாக தடை செய்ய வேண்டும். இந்த 10 நாட்களுக்கு மின் கட்டணம், வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.