இனி வரும் நாட்களில் நீங்கள் என்ன வாங்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பதில் இருந்து, அதை உங்களிடம் கொண்டு சேர்ப்பது வரையில், அத்தனையும் செய்யப்போவது ரிலையன்சும், அமேசானும்தான்.
அமேசானைப் பொறுத்தவரை, அந்நிறுவனத்துக்கு இந்தியா மிக முக்கிய வணிக சந்தையாகும். கொரோனா காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட, அதை சாதகமாக்கிக்கொண்டு அமேசான் நிறுவனம், தொழில் விரிவாக்கத்தை செய்துள்ளது.
பெங்களூருவில், இ–பார்மசி சேவையை தொடங்கியுள்ள அமேசான், கடந்த மாதம் முதல், நான்கு மற்றும் இரு சக்கர வாகன இன்சூரன்ஸ் சேவையையும் செய்து வருகிறது. காகிதப் பயன்பாடு இன்றி, 2 நிமிடங்களில் பாலிசி உங்கள் கைகளுக்கு கிடைக்கும் வகையில் இந்த சேவை இருக்கிறது. அமேசான் ஃபிரஷ் மூலமாக காய்கனிகள், மளிகை பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல், கடந்த ஆண்டு முதலே அமேசான் உணவு டெலிவரி சேவையும் தனது இ–காமர்ஸ் தளம் மூலம் செய்கிறது.
இப்படியே போனால், இந்தியாவின் ஆன்லைன் ரீடெய்ல் சந்தையை அமேசான் கைப்பற்றிவிடுமோ என்ற அச்சம், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்கு ஏற்பட்டது. எனவே, அமேசானுக்கு போட்டியாக முழுமையாக களமிறங்கியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இதன் மூலம் இந்திய ரீடெய்ல் சந்தையில் இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரீடெய்ல் வர்த்தகப் பிரிவில் மிகப்பெரிய அளவிலான வர்த்தக விரிவாக்கம் செய்கிறது. ஜியோ தளத்தை அனைத்து சேவைகளுக்கும் ஒன் ஸ்டாப் சொல்யூஷனாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் முகேஷ் அம்பானி செயல்பட்டு வருகிறார்.
அமேசானின் இ–பார்மசி சேவைக்கு செக் வைக்கும் விதமாக, சென்னையைச் சேர்ந்த Netmeds நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளைச் சுமார் 620 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் ரிடெய்ல் வென்ச்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. மருந்து சேவைகளைக் கணினிமயமாக்கி, மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை விநியோகம் செய்யவதே நோக்கம் என ரிலையன்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது.
அதேபோல், இந்தியாவில் ஆன்லைன் நிதி சேவையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் பேடிஎம் நிறுவனத்திற்குப் போட்டியாக அமேசான் கார் மற்றும் மைக் இன்சூரன்ஸ் விற்பனை சேவையைத் துவங்க, ரிலையன்ஸ் நிறுவனமும் இன்சூரன்ஸ், ப்ரோக்கிங், மியூச்சவல் பண்ட் சேவைகளை அறிமுகம் செய்கிறது.
அமேசான் ஃபிரெஷ்ஷைப்போலவே, இந்தியாவின் 200 நகரங்களில் ஜியோ மார்ட் தொடங்கப்பட்டுள்ளது. பிக் பஸாரை கைப்பற்ற ரிலையன்ஸ் நிறுவனம் முயற்சிக்கும் நிலையில், அதில் சிறிதளவு பங்குகளை வைத்திருக்கும் அமேசான், முகேஷின் முயற்சிக்கு தடைபோட்டு வைத்துள்ளது.
இதேபோன்று, அனைத்து விதமான டிஜிட்டல் சேவையிலும் தனது கால்தடத்தைப் பதிக்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. புதிதாகச் சேவையைத் துவங்கினால் காலதாமதம் ஆகும் என்பதை உணர்ந்து, இத்துறையில் முன்னணி நிறுவனங்களை மொத்தமாகவும் அல்லது நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கான பங்குகளை முகேஷ் அம்பானி வாங்கித் தனது ஜியோ தளத்துடன் இணைத்து வருகிறார். இனி ரிலையன்சும், அமேசானும்தான் நமது தேவைகளை தீர்மானிக்கப்போகும் சக்திகளாக இருக்கப்போகின்றன.