புதுச்சேரி வன்னியர் வாக்குகளை வளைக்க என்ன செய்யப்போகிறது பா.ம.க.? தலைமை ஏற்பாரா செந்தில் கவுண்டர்!

0
553

தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலின்போதும், கூட்டணிக்கு பாமக வரவேண்டும் என பெரிய கட்சிகள் எதிர்பார்க்கும் நிலையில், புதுச்சேரியிலோ, அந்தக் கட்சியை தேட வேண்டிய நிலை உள்ளது. ஏன் இப்படியானதொரு நிலை ஏற்பட்டது?

சாதிக்கட்சி அடையாளத்தை ஏற்க மருத்துவர் ராமதாஸ் மறுத்தாலும், ’வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லைஎன்பதுதான் பாமகவின் கொள்கை முழக்கம். அப்படியிருக்க புதுச்சேரியில் 60 சதவிகிதத்துக்கும் மேல் வன்னியர்கள் இருக்கும் நிலையில், ஏன் பாமகவால் சாதிக்கமுடியவில்லை? இத்தனைக்கும் மருத்துவர் ராமதாஸின் வசிப்பிடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது புதுச்சேரி பிராந்தியம்.

2011-ல் ரங்கசாமி தனிக்கட்சி தொடங்கியபோது, அவரை முதலமைச்சர் அரியணையில் ஏறவைத்தது வன்னியர்கள்தான். ஏனெனில் ரங்கசாமி வன்னியர் என்ற ஒரே காரணம்தான். வாக்களித்த வன்னியர்களை ரங்கசாமி மறக்க, அவரது உறவினரான காங்கிரஸ் கட்சியின் நமசிவாயத்தை முதலமைச்சராக்க வன்னியர்கள் உழைத்தனர். (தேர்தல் வெற்றிக்குப் பிறகு நாராயணசாமி குறுக்குசால் ஓட்டியது வேறுகதை).

புதுச்சேரியில் பாமக மற்றும் அதனைச் சார்ந்த வன்னியர்களின் தேர்தல் கணக்குகள் இவ்வாறு இருக்க, வழக்கமான அரசியலிலும் அவர்கள் பின்தங்கியே இருக்கிறார்கள். அனந்தராமன் மாநில அமைப்பாளராக இருந்தவரை கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தார்

இவருக்குப் பிறகு, பொறுப்பேற்ற கோபாலகிருஷ்ணனின் நடவடிக்கைகள், மெச்சும்படியாக இல்லாவிட்டாலும், விமர்சிக்கும்படியாக இருந்ததில்லை. 2016 தேர்தலை தனித்து சந்திக்க வேண்டிய நிலை வந்தபோது, 30 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, துணிச்சலுடன் தேர்தலை அவர் எதிர்கொண்டார். அதன்பிறகு, நிறுவனரின் உறவினர் என்ற ஒரே காரணத்துக்காக மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. தனராஜ் சுத்தமாக செயல்படவில்லை என்பதே பரவலான குற்றச்சாட்டு.

உறுப்பினர் சேர்க்கையோ, நிர்வாகிகள் நியமனமோ, ஆலோசனைக் கூட்டமோ, பொதுக்கூட்டமோ, கண்டனப் போராட்டங்களோ, சொல்லிக்கொள்ளும்படியாக எதையும் அவர் செய்யவில்லை என்பது கட்சியினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த வன்னியர்களின் வேதனையாக இருக்கிறது.

இதுபற்றி கட்சி நிர்வாகிகள், வன்னியர் சமூக பிரதிநிதிகள் சிலரிடம் வேல்ஸ் மீடியா சார்பாக பேசினோம். அவர்கள் கூறிய கருத்துகள் என்னவென்றால், புதுச்சேரியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் வன்னியர்கள் இருக்கிறோம். இங்கு பாமகவின் செயல்பாடற்ற தன்மை காரணமாக, மாற்று கட்சியில் இருக்கும்  வன்னியர்களுக்கு தோள்கொடுக்க வேண்டிய நிலைக்கு எங்களை தள்ளியது மருத்துவர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும்தான்.

தமிழகத்தில் காட்டும் அக்கறையை கட்சித் தலைமை புதுச்சேரிக்கு காட்டாதது எங்களுக்கு எல்லாம் வருத்தம்தான். கட்சிக்காக உழைப்பவர்களுக்கு முக்கியத்தும் கொடுத்து, வன்னியர்களை முழுவதுமாக அரவணைத்துச் சென்றால், புதுச்சேரியில் பாமக ஆட்சி அமைக்க சாத்தியம் இருக்கும்போது, கட்சித் தலைமை இதை உணர மறுப்பதை என்னவென்று சொல்வது.

புதுச்சேரியில் கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சி, புத்துயிர் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். வழக்குகள், விமர்சனம் இருந்தாலும், வன்னிய இளைஞர்களின் மத்தியில் நல்ல அபிமானத்தையும், ஏகோபித்த ஆதரவையும் பெற்றுள்ள தட்டாஞ்சாவடி செந்தில் கவுண்டரை மாநில அமைப்பாளராக தயக்கமின்றி நியமிக்கலாம். தமிழகத்துக்கு வன்னிய இளைஞர்களின் நாயகனாக எப்படி காடுவெட்டி குரு இருந்தாரோ, அதேபோன்று புதுச்சேரியில் வன்னிய இளைஞர்கள் செந்தில் கவுண்டரை நாயகனாக போற்றுகிறார்கள். வன்னியர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வரும் செந்தில் கவுண்டர், மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்டால், சட்டமன்ற தேர்தலில் சொல்லிக்கொள்ளும்படியான இடத்தை பெற்றுத்தருவார்.

அதேபோல, புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களின் ஆதரவைப் பெருமளவு பெற்றுள்ள கலாம் சேவை மைய நிறுவனர் வழக்கறிஞர் சம்பத்தையும், கட்சித் தலைமை பரிசீலிக்கலாம். சம்பத் முழுமையாக வன்னியர் சமூகத்தை சேர்ந்தவராக இல்லாவிட்டாலும், அவரது தாய் வன்னியர், தந்தை முதலியார் என்பதால், பிரச்சனை இருக்காது. முன்னாள் பாமக எம்.எல்.. அருள்முருகன் சம்பத்தின் தாய்வழி உறவினர்தான். முதலியார் சமூகத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம் செந்தில்குமார் தமிழகத்தில் துணைத் தலைவராக இருக்கும்போது, சம்பத்தை மாநில அமைப்பாளராக நியமிப்பதில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு வராது.

தட்டாஞ்சாவடி செந்தில் கவுண்டர், வழக்கறிஞர் சம்பத் இருவரும் மிக நெருக்கமாக நட்பு பாராட்டுகின்றனர். எனவே இவர்கள் இருவரையும் கட்சிக்குள் கொண்டுவர தலைமை முயற்சித்தால், வரும் தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கக் கூடிய அளவுக்கு எம்.எல்..க்களை பெறமுடியும். தமிழகம் போலில்லாமல், அமைச்சரவையிலும் பங்குவகிக்க முடியும் என்று அவர்கள் கூறினார்கள்.

தற்போதைய சூழலில் புதுச்சேரியில் உள்ள வன்னியர்கள், பாமகவை மறந்து, மற்ற கட்சிகளில் உள்ள வன்னியர்களை தேடவும், ஆதரிக்கவும் செய்கிறார்கள். இந்த நிலையை மாற்ற மருத்துவர் இராமதாஸும், அன்புமணி இராமதாஸும் புதுச்சேரி மாநிலத்தின் பக்கமும் கவனத்தை திருப்பினால், அந்த மாநிலத்தில் பாமகவின் வாக்கு அறுவடை கணிசமாகவே இருக்கும். கட்சியும் உயிர்ப்புடன் இருக்கும்.


Subscribe Vels Media YouTube Channel https://www.youtube.com/channel/UC_zBBAjCO_LWYt63zVQgeYw?


RO தண்ணீர் ஏன் குடிக்கக் கூடாது? அதனால் ஏற்படும் உடல் உபாதைகள் என்னென்ன?