நவீன “பீஷ்மாச்சாரி” மோடியின் மெஸ்மரிசம்! செய்வதறியாது தத்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!

0
68

சீனா, கொரோனா, பொருளாதார வீழ்ச்சி இப்படி பல பிரச்னைகள் புரட்டிப் போட்டாலும், எப்போதும்போல உற்சாகமாகவே நாட்டை வழிநடத்துகிறார் பிரதமர் மோடி. தம்மை விட்டால், வேறு வாய்ப்பே இல்லை என்று மக்களுக்கு உணர்த்தியிருப்பதுதான் அவரது பலம்.

கடந்த ஆட்சியில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கச்சை கட்டி கூப்பாடுபோட்டன. மக்கள் தத்தளிக்கிறார்கள், ஆக இது பாசிச அரசு, சனாதன அரசு, ஆக மோடி சர்வாதிகாரி, இப்படியெல்லாம் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், கடந்த முறையை விட அதிக இடங்களுடன், பெரும்பான்மை பலத்துடன் அரியணை அமர்ந்து அடக்கமாக கையசைத்தார் மோடி.

70 ஆண்டுகளாக நாட்டில் புரையோடிப்போயிருக்கும் பிரச்னைகளை சரி செய்ய, ஊழல் ஊற்றுக்கண்ணை அடித்துநொறுக்க, பலவீனமான ராணுவத்தை பலமாக்க, மோடியால் மட்டுமே முடியும் என மக்கள் உணர்ந்ததன் வெளிப்பாடுதான் பா... பெற்ற அதீத பெருபான்மை.

அப்படியானால், பணமதிப்பிழப்பின்போதும், கொரோனாவாலோ, பொருளாதார சரிவாலோ, வேலையிழப்பாலோ, ஊதியக்குறைப்பாலோ மக்கள் பாதிக்கப்படவில்லையா? என்று கேட்டால், பாதிக்கப்பட்டார்கள்தான். அதன் பின்னணியில் இருக்கும் உண்மை புரிந்து மக்கள் கஷ்டத்தை ஏற்றார்கள், ஏற்கிறார்கள். தற்போதைய சூழலில் கொரோனாவின் தாக்கத்திலிருந்து, என்ன விலை கொடுத்தாலும், மக்கள் உயிரை காப்பாற்றியாக வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு, மோடி எடுத்த, எடுக்கும் நடவடிக்கைகள் சர்வதேச கவனம் பெறுகின்றன.

இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில் நாடுகளின் தலைவர்களைப் போல, சர்வதேச பேரிடரை அவர் அற்பத்தனமாகக் கையாளவில்லை. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது, புலம்பெயர் தொழிலாளர், நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் நடந்தே சொந்த ஊர் சென்றார்கள். அவர்கள் சொல்வது என்ன தெரியுமா?, மக்கள் உயிரைக் காப்பாற்றத்தானே மோடிஜி முயற்சிக்கிறார்.

பல பாதிப்புகளை சந்தித்தாலும் மக்கள் மோடிக்கு எதிராகத் திரும்பவில்லை என்ற உண்மையை நாம் உணர வேண்டும். அப்படி என்ன மோடி மெஸ்மரிசம் செய்துள்ளார்? மாய மந்திரங்கள் ஏதும் செய்துவிட்டாரா? என்றுகூட நீங்கள் கேட்கலாம்.

மோடி எடுக்கும் சில கடினமான நடவடிக்கைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மைகளை உணர வேண்டும். அப்படி செய்யும்போது, நீங்கள் மோடி விமர்சகராக இருந்தாலும், அந்த உண்மைகள் உங்களை உற்சாகப்படுத்தவே செய்யும்.  மக்கள், மோடியை, கடவுளைப்போல, டாக்டரைப் போலத்தான் பார்க்கிறார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கும், அவரது உறவினர்களுக்கும் டாக்டர்தான் கடவுள். அவர் நோயாளியை குணமாக்க முழு முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது, வேறு மருத்துவமனைக்கு அழைத்துப் போகலாமா என்ற எண்ணம் உறவினர்களுக்கு வருமா? அப்படிப்பட்ட மருத்துவராக மோடியையும்,  அப்படிப்பட்ட மருத்துவமனையாக பா...வையும் மக்கள் பார்க்கிறார்கள். எனவே அவர்களுக்கு பாஜக தவிர்த்து மாற்றுச்சிந்தனைக்கான வாய்ப்பு மிகமிகக் குறைவே.

எந்த சாமானியர்களும், மோடியைத் தவிர மற்றவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு குறைவு என்ற நிலையில்,  எதிர்க்கட்சிகளோ மோடியை வீழ்த்த திரிபு வாதம் செய்கின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையும் பழைய ஃபார்முலாவையே அவைகள் மீண்டும் கையிலெடுக்கலாம். ஒரு சில மாநிலங்களைத் தவிர்த்து அந்த ஃபார்முலா கைகொடுக்காது.

அப்படியானால் அசைக்கமுடியாத, வலிமையான சர்வதேச தலைவராக உயர்ந்து நிற்கும் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்கு என்னதான் வழி? அவரைப்போன்ற ஒரு தலைவரை உருவாக்க வேண்டும், அது சாத்தியமில்லை. ஊழல், முறைகேடு என காங்கிரஸ் கட்சியைப்போல தன்னைத் தானே வீழ்த்திக்கொள்ள மோடிக்கு புத்தியைக்கொடு என இஷ்ட தெய்வங்களிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் மண்டியிடலாம். இந்தியாவை எஃகு கோட்டையாக மாற்றும் அளவுக்கு, நவீன இந்தியாவை கட்டமைக்க வலிமையுடன் உருவானார், உருவாக்கப்பட்டார் பீஷ்மாச்சாரி மோடி. இதுவே நிதர்சனம்.

கட்டுரையாளர்:- கோ

——————————————-

Please Subscribe Vels Media YouTube Channel: https://www.youtube.com/channel/UC_zBBAjCO_LWYt63zVQgeYw?view_as=subscriber

——————————————-

RO தண்ணீர் ஏன் குடிக்கக் கூடாது? என்ன உடல் உபாதைகள் ஏற்படும்?