ஏ.எஃப்.டி. மில் மூடும் முடிவை திரும்பப்பெற வேண்டும்! கலாம் சேவை மைய நிறுவனர் வழக்கறிஞர் சம்பத் வலியுறுத்தல்!

0
10

.எஃப்.டி. மில்லை மூடாமல், அரசு அதனை புணரமைக்க வேண்டும் என கலாம் சேவை மைய நிறுவனர் வழக்கறிஞர் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதுவையில் பாரம்பரியமிக்க ஏ.எஃப்.டி மில் கடந்த 1898 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. புதுச்சேரி சுதந்திரம் பெற்றதும் இந்த மில்லை லண்டன் நிறுவனத்திடம் இருந்து 1980 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஜி என் செட்டி என்ற தொழிலதிபர் விலைக்கு வாங்கினார்.

முதலில் இந்த மில்லில் ராணுவத்திற்கு  தேவையான சீருடைகள், பாராசூட் துணிகள் என 93 வகையான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒரு காலகட்டத்தில் புதுவைக்கு வேலைவாய்ப்பு கேந்திரமாகவும், பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகவும் இந்த மில் விளங்கியது.

இதில் சுமார் 7600 தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். 1983 ஆம் ஆண்டு நிர்வாக சீர்கேட்டால் இந்த மில் மூடப்பட்டது. இதைக் கண்டித்து தொழிலாளர்களின் போராட்டம் வலுக்கவே, மத்திய அரசு 1985இல் அவசர சட்டம் பிறப்பித்து, தனியாரிடமிருந்து கைப்பற்றி புதுச்சேரி அரசிடம் ஒப்படைத்தது.

நல்ல நிலையில் லாபகரமாக இயங்கி வந்த ஆலை, நிர்வாக அலட்சியத்தாலும், சீர்கேடுகளாலும், 130 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது. இதைகாரணம் காட்டி மில்லை மூடும் முடிவுக்கு அரசு வந்துள்ளது. லாபகரமாக இயங்கிய ஆலையை நஷ்டத்திற்கு தள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏற்கனவே புதுவையில் வேலைவாய்ப்புகள் குறைந்துகொண்டே வருகின்ற நிலையில், அரசு இப்படி ஒரு முடிவை எடுப்பதை கலாம் சேவை மையம் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். அரசு உடனடியாக வல்லுநர் குழு ஒன்றை ஏற்படுத்தி, மத்திய அரசிடம் பேசி நிதி பெற்று, .எஃப்.டி. ஆலையை புணரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலை ஊழியர்களுக்கான ஊதிய நிலுவைத் தொகையையும், ஓய்வூதிய பணப்பலன்களையும் உடனடியாக வழங்க அரசு முன்வரவேண்டும் என்றும் வழக்கறிஞர் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.