ஆட்சியரை பொய்சொல்ல வைத்த வசந்தம் கார்த்திகேயன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கள்ளச்சாராய சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பளீர் கேள்வி!

0
107
AIADMK MLA Senthilkumar asks why no action has been taken against Vasantham Karthikeyan? | Pic - Kallakurichi AIADMK MLA Senthilkumar | Image Courtesy - Vikatan.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார், திமுகவின் கோர முகம் அம்பலமாகி இருப்பதாக கூறியுள்ளார். விகடன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம்.

“60க்கும் மேற்பட்டோர் சாவை வைத்து அரசியல் செய்து, போதிய மருந்துகள் இல்லையென பதற்றத்தை உருவாக்க அ.தி.மு.க முயல்கிறது என்ற விமர்சனம் முன்வைக்கபடுகிறதே?”

“கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மெத்தனால் விஷ முறிவு மருந்தான `Fomepizole` மருத்துவமனையில் இருப்பு இல்லை என்பதை மருத்துவர்கள்தான் எங்களிடம் சொன்னார்கள். அதேசமயம் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் இல்லாமல் பொது மருத்துவர்களாகவே இருக்கின்றனர். உயர் சிகிச்சைக்காக ஜிப்மர், விழுப்புரம் மற்றும் சேலம் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்கிறார்கள் என்றால், அங்கே போதிய வசதிகள் இல்லையென்றுதானே பொருள். அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படுகிறது. நாங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் இந்த விவகாரத்தை மூடி மறைத்திருப்பார்கள். தி.மு.க-வின் கையாளாகத் தனத்தை சுட்டிக்காட்டியதன் மூலம் தி.மு.க-வின் கோரமுகம் அம்பலமாகியிருப்பதால் குற்றசாட்டை மடைமாற்ற எதேதோ பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்”

Also Read : குத்தகைக் காலம் முடிந்தும் சுங்கச்சாவடிகளை மூட மறுக்கும் மத்திய, மாநில அரசுகள்! மூன்று மடங்கு லாபம் சம்பாதிக்கும் குத்தகைதாரர்கள்!

“ஆளும்தரப்பு இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறது எனப் பேசிவருகிறீர்கள்..! அதற்கென்ன ஆதாரம் இருக்கிறது?”

“கருணாபுரம் குடியிருப்பில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளென பார்த்தாலும் அங்கே இருப்பது தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சியினரும்தான். இவ்வளவு ஏன் சாராயம் விற்ற கன்னுக்குட்டி வீட்டு கதவில் மட்டுமல்ல, பீரோவிலும் தி.மு.க தலைமையின் படம்தான் இருக்கிறது. அவர் கள்ளசாராயம் விற்கிறாரென அப்பகுதி தி.மு.க பொறுப்பாளர்களுக்கு தெரியாதா? மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயனுக்கு தெரியாதா? நான் சொல்கிறேன், அங்கே என்னனென்ன நடக்கிறதென்ற அனைத்தும் அவர்களுக்குத் தெரியும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தெரிந்துகொண்டே தடுக்காமல் இருப்பதன் பின்னணி என்ன? அதுமட்டுமில்லை, கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்த பிறகு `இது கள்ளச்சாராய மரணமில்லை’ என ஆட்சியரை பேசவைக்கிறார் வசந்தம் கார்த்திகேயன். அப்படி அறிவித்த ஆட்சியர் மீதும், உடனிருந்த எஸ்.பி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பேசவைத்தவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?”

அதோடு கள்ளக்குறிச்சியின் எம்.பி.யாக 2024 மே மாதம் வரை இருந்தவர் அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருக்கோவிலூர் எம்.எல்.ஏ-தான் பொன்முடி, இவற்றுக்கு மேலாக மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் எ.வ வேலு. இருப்பினும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடியிருப்பதுதான் வேடிக்கை. ஆனால் மாவட்டத்தின் ஒற்றை எம்.எல்.ஏ-வாக ஆட்சியரிடமும், எஸ்.பி.யிடமும் போராடினேன்”

Also Read : ரூ.4,730 கோடி மணல் குவாரி ஊழல்! அதிகாரிகள் – ஒப்பந்ததாரர்கள் இடையே கூட்டு! DGPக்கு அமலாக்கத்துறை ஆதாரத்துடன் கடிதம்! பெரும் சிக்கலில் தமிழக அரசு!

“நீங்கள்தானே கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., உங்களுக்கு கள்ளச்சாராய விற்பனை குறித்து தெரியாதா, என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?”

“கள்ளச்சாராயம் புழக்கம் அதிகரிக்கிறதென எஸ்.பி. மற்றும் கலெக்டரிடம் பல முறை புகாரளித்தேன். பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் கவனத்துக்கும் கொண்டு சென்றேன். 29.03.2023-ல் அவரின் அறிவுறுத்தலின் பெயரில் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு மனு செய்தேன். குறிப்பாக, நானே நேரடியாக சபாநாயகரை சந்தித்து, கள்ளசாராய புழக்கம் மிகப் பெரும் சிக்கலாக இருக்கிறது, சட்டமன்றத்தில் பதிவு செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டேன். அதற்கு சரி தம்பி, பார்த்துக் கொள்ளலாம் என்றார். ஆனால் வாய்ப்பு வழங்கவில்லை. கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருப்பதை, அந்தச் சம்பவத்தை எடப்பாடியாரும் அவையில் பேசினார். இருப்பினும் இந்த அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் விளைவாகவே இத்தனை உயிர் போயிருக்கிறது.” இவ்வாறு செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேட்டியில் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry