கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. திமுக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Also Read : கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை! அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 19-ம் தேதியன்று விஷச் சாராயம் குடித்து 69 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவரும், பாமக செய்தி தொடர்பாளருமான வழக்கறிஞர் கேபாலு, பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ வால்பாறை டாக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
Also Read : வகுப்பறையிலேயே ஆசிரியை படுகொலை! திமுக ஆட்சியில் கொலை சாதாரணமாகிவிட்டதாக ஈபிஎஸ் கண்டனம்!
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் டி. செல்வம், ஜி.எஸ்.மணி, கே.பாலு ஆகியோர் தங்களது வாதத்தில், “கடந்த ஆண்டு மரக்காணத்தில் இதேபோல விஷச் சாராயம் குடித்து 30 பேர் பலியானர். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்தாண்டு கள்ளக்குறிச்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கெனவே கள்ளச் சாராயம் அப்பகுதியில் அதிகரித்து வருவதாக கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பொதுமக்களும் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடையின்றி கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்காரணமாக போலீஸ் அதிகாரிகளை அரசே இடைநீக்கம் செய்துள்ளது. இதனால் சுதந்திரமான விசாரணை அமைப்பு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் துணையில்லாமல் கள்ளச் சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்ய முடியாது. ஆனால் இந்தச் சம்பவத்துக்கு போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என அரசு கூறுகிறது. விஷச் சாராயத்தை காய்ச்சியவர்கள் மற்றும் விற்பனை செய்தவர்கள் மீது மட்டும் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீதும், தொடர்புடைய முக்கிய நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்தில் 69 பேர் வரை பலியாகியுள்ளதால் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்,” என வாதிட்டிருந்தனர்.
அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, “இந்த சம்பவத்துக்கு காரணமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் ஓய்வு பெற்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கை விசாரிக்க சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையில் 50 பேர் அடங்கிய 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 24 பேரில் 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை,” என வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
Also Read : டெங்குவை பரப்பும் கொசுக்கள் உடலின் எந்த இடத்தில் அதிகம் கடிக்கும் தெரியுமா? Dengue Prevention!
இந்நிலையில், நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை (நவ.20) கள்ளக்குறிச்சி விஷச் சாராய பலி தொடர்பான இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தீர்ப்பளித்தனர். ‘சமுதாயத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும், தீங்குகளுக்கும் மதுதான் முக்கிய காரணியாக உள்ளது. அதற்கு கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. உள்ளூர் போலீஸாருக்கு எதுவும் தெரியாமல் கள்ளச் சாராய மரணங்கள் நடந்துள்ளது எனக் கூறுவதை ஏற்க முடியவில்லை.
தமிழக போலீஸார் கண்டும், காணாமலும் இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. காவல்துறை உயரதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்பப் பெற்றதும் தவறான நடவடிக்கை. எனவே, இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி போலீஸார் உடனடியாக சிபிஐ அதிகாரிகள் வசம் ஒப்படைக்க வேண்டும். அதன்பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கள்ளச்சாராய மரணங்கள் குறித்து மடியில் கனமில்லை என்றால் விடியா திமுக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக் கூடாது! #CBI விசாரணை மூலம் உயிரிழந்த 67 பேருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும்! என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு உரிய நீதிவேண்டியும்,
CBI விசாரணை கோரியும் தொடர்ந்து சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்துத் தளங்களிலும் போராடிய முதன்மையான இயக்கம் @AIADMKOfficial !நமது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக, அஇஅதிமுக சார்பில் தொடரப்பட்ட… pic.twitter.com/fY1RtuOCgC
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) November 20, 2024
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry