தஞ்சையில் அரசுப் பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவுக்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read : ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு சாதகமானதா? பாதகமானதா? ஐபெட்டோ கேள்வி!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் வட்டம், சின்னமனையைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில், சின்னமனையைச் சேர்ந்த மதனுக்கு (30) அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். மதன் குடும்பத்தினர், ரமணியை பெண் கேட்டு அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால், மதனைப் பிடிக்கவில்லை என ரமணி கூறியதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மதன், இன்று காலை ரமணி பணியாற்றி வந்த பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு வகுப்பறைக்குள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த ரமணியின் கழுத்தில் கத்தியால் அவர் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனையறிந்த மாணவர்கள் அலறி அடித்து வகுப்பறையை விட்டு வெளியில் ஓடி வருவதையறிந்த மற்ற ஆசிரியர்கள், அந்த வகுப்பறைக்குள் சென்று பார்த்த போது ரமணி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதையடுத்து, அவர்கள், ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சேதுபாவசத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மதனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவுக்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
விடியா திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு… pic.twitter.com/cICsxRa4K2
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) November 20, 2024
அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவுக்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். ஆசிரியர் ரமணியின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், திமுக முதல்வர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன்,” என்று கூறியுள்ளார்.
இந்த பரபரப்புக்கு மத்தியில், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தனை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் வைத்து வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கண்ணனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், முன் விரோதம் காரணமாக ஆனந்தன், கண்ணனை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry