கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் ஆசிரியர்கள் கைது! வன்முறையாளர்களை கொத்துக் கொத்தாக தூக்கும் போலீஸ்!

0
396

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விவகாரம், தொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி சூறையாடப்பட்டது.

பள்ளியில் இருந்த பொருட்கள், மாணவர்களின் ஆவணங்கள், பள்ளியின் ஏராளமான பேருந்துகள், பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸாரின் பைக்குகள் எரிக்கப்பட்டன. கல்வீச்சு தாக்குதலில் டிஐஜி, 2 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 67 போலீஸார் காயமடைந்தனர். கலவரத்தை ஒடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

மாணவி மர்ம மரண வழக்கில் பள்ளியின் வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா மற்றும் கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் அளித்திருந்த புகாரின் அடைப்படையில் இந்த இரண்டு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மாணவியைத் திட்டியதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே, இவ்வழக்கில் பள்ளி முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக உள்துறை செயலாளர் பணீந்தரரெட்டி மற்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் வன்முறை நடைபெற்ற இடங்களில் நேற்று மாலை கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே, நேற்றைய வன்முறை தொடர்பாக அனைத்து வீடியோ பதிவுகளையும் வைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை ஒவ்வொருவராக அடையாளம் கண்டு போலீஸார் கைது செய்து வருகின்றனர். அவர்களின் மீது 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை சம்பவம் தொடர்பாக கரூரை சேர்ந்த 4 இளைஞர்களை இன்று கைது செய்துள்ளனர். வன்முறை குறித்து சமூக வளைத்தளங்களில் கருத்து பதிவிட்டதாக சைபர் கிரைம் போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry