சட்டம் ஒழுங்கு சீர்குலைவு! மாணவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

0
323

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை அடையாறு கிரவுண் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. அதில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்த வழிகாட்டுதல்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, “சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் அவருடைய தாயார் மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்கின்ற விதத்தில் பள்ளி நிர்வாகம் செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் அந்த தாயாரை, பள்ளி நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறவில்லை. அது மட்டும் இல்லாமல் மாணவியை இழந்து வேதனையோடு இருக்கின்ற தாயாருக்கு இந்த அரசாங்கம் ஆறுதல் சொல்லி இருக்க வேண்டும். அந்த மாணவி மர்மமான முறையில் இறந்ததாக தாய் சந்தேகப்படும்போது, அதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அப்படி சம்பவம் ஏற்பட்டிருந்தால் அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இந்த அசாதாரண நிலைமை வந்திருக்காது.

இந்த அரசாங்கமும், காவல்துறையும் செயலிழந்திருக்கிறது. அந்த தாய்க்கு நீதி கிடைக்காத காரணத்தினால் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உறவினர்கள், நண்பர்கள் கொதித்து எழுந்து அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முழு பொறுப்பு திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் தான். இந்த அரசாங்கம் அவர் தலைமையில் தான் இயங்குகிறது. காவல்துறையும் அவர் தலைமையில் தான் இயங்குகிறது.

மூன்று நாட்களாக மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடி வருகிறார்கள். ஆனால் இந்த அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. மாணவியின் தாயாரை ஆறுதலுக்கு கூட அதிகாரிகள் யாரும் வந்து சந்திக்க வில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். மாணவர்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை தமிழகத்தில் இருக்கிறது. ஒரு செயலற்ற அரசாங்கம் இருக்கிறது. உளவுத்துறை செயலிழந்துவிட்டது.

மூன்று நாட்களாக நீதி கேட்டு அந்த பெற்றோர்கள் போராடி வருகிறார்கள். உளவுத்துறை அதை முறையாக விசாரித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்து, உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு இருக்காது.
இதற்கு முழுக்க முழுக்க காரணம் முதல்வர் ஸ்டாலின் தான். அவரது தலைமையிலான இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது , மாணவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry