திறனற்ற அரசின் வெளிப்பாடே வன்முறை! உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதாக தலைவர்கள் கண்டனம்!

0
516

சின்னசேலம் கணியாமூர் தனியார் பள்ளி மாணவி பலியான வழக்கை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சின்னசேலம் பள்ளி மாணவி பலியான விவகாரத்தில்,”தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் என டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார், மாணவியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது. தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, சின்னசேலம் பள்ளி மாணவி மர்மச்சாவு தொடர்பாக நடந்த போராட்டத்தில் கலவரத்தைத் தூண்டியவர்களை தண்டிக்க வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவியின் மர்மச்சாவுக்கு நீதி கேட்டு பெற்றோர்கள் கடந்த 5 நாட்களாக அமைதியாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று காலையில் போராட்டம் பெரும் கலவரமாக மாறியிருக்கிறது.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக நிலைமையை இந்த அளவுக்கு மோசமாக்கிய காவல்துறையின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

இந்த கலவரங்களுக்கு காவல்துறையின் அலட்சியம் தான் காரணம். மாணவியின் பெற்றோர் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்; தவறு இல்லை என்று தெரிய வந்திருந்தால் உண்மையை பெற்றோரிடம் விளக்கி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும்.

ஆனால், இதை செய்ய காவல்துறை தவறி விட்டது. சின்ன சேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளூர்காரர்களோ, மாணவியின் நெருங்கிய உறவினர்களோ இல்லை. வெளியூரிலிருந்து திட்டமிட்டு வந்தவர்கள் தான் கலவரத்தை நடத்தியதாக தெரிகிறது. இந்த உண்மையை காவல்துறையும் ஒப்புக் கொண்டிருக்கிறது. அதை உளவுத்துறை மூலம் முன்கூட்டியே அறிந்து காவல்துறை தடுத்திருக்க வேண்டும்.

நிலைமையை கணிக்க உளவுத்துறை தவறியது தான் சின்ன சேலம் கலவரத்திற்கு முதன்மையான காரணமாகும். சின்ன சேலம் கலவரத்தின் பின்னணியில் மாணவியின் மர்மச்சாவு மட்டும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சக்திகளும், அரசியல் காரணங்களும் கூட இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

பின்னணியில் இருந்து கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவியின் மர்மச்சாவு குறித்தும் விரிவான விசாரணை நடத்தி தவறு இழைத்தவர்களை தண்டிக்க வேண்டும்.”இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry