காவிரி நீர்ப் பங்கீடு விவகாரம்! தமிழகத்திற்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்தது கர்நாடகா!

0
27
River Cauvery at Kushalnagar bridge. Credit: DH Photo

டெல்லியில் திங்கள் கிழமை நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில், காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 5000 கன அடி நீரை திறந்துவிட பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த தமிழக அரசு, நிலுவையில் உள்ள 54 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவிடுமாறு வலியுறுத்தியது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் டெல்லியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப்சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பங்கேற்றனர். கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

அப்போது தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, “காவிரி நதிநீர்ப் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி, ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டியதில் 54 டிஎம்சி தண்ணீர் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் தற்போது உள்ள நீரை உரிய முறையில் பங்கீடு செய்ய வேண்டும். அடுத்த 15 நாட்களுக்கு நாள்தோறும் 24 ஆயிரம் கன அடி நீர்திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட‌ வேண்டும்” என வலியுறுத்தினார்.

Also Read : கர்நாடகா அநீதி இழைத்துவிட்டது! உடனடியாகத் தண்ணீர் பெறாவிட்டால் பயிர்களைக் காப்பாற்ற முடியாது!

அதற்கு கர்நாடக அரசின் அதிகாரிகள், “கர்நாடகாவில் நிகழாண்டில் போதிய அளவில் மழை பொழியவில்லை. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளும் நிரம்பவில்லை. அணைகளில் குறைவான அளவில் நீர் இருப்பதால் கர்நாடக விவசாயிகளின் பாசனத்துக்கே நீர் திறந்துவிடப்படவில்லை. எனவே தமிழகத்துக்கு தற்போதைய நிலையில் 24 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை. தினசரி 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுகிறோம்” என தெரிவித்தனர்.

நிறைவாகப் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், “கர்நாடக அணைகளின் நீர் இருப்பு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைந்த அளவில் பதிவான‌ மழை ஆகியவற்றை கருத்தில் கொள்கிறோம். அதேவேளையில் தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு நீர் தேவைப்படுகிறது. எனவே, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

Also Read : தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது! காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை நிராகரிக்கும் கர்நாடகா முதலமைச்சர்!

முதலில் இதனை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, தற்போது, காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை திறந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நேற்றிரவு 8 மணி அளவில் 2,292 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அது அதிகரிக்கப்பட்டது. இதேபோல், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. செப்டம்பர் 12ம் தேதி வரை கர்நாடகா வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு செப்டம்பர் 1ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதனால் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக‌ அணைகளின் நீர் இருப்பு குறித்த அறிக்கையை இன்று அல்லது நாளை தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. அந்தஅறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry