Kerala blasts: கேரளாவில் ஜெபக்கூட்டத்தில் டிபன் பாக்ஸ் குண்டுவெடிப்பு! இருவர் பலி, 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

0
46
A scene inside the convention centre soon after the blast, in Kalamassery in Kerala

கேரள மாநிலம், கொச்சி களமச்சேரி மருத்துவக் கல்லூரி அருகே சாம்ரா இன்டர்நேஷனல் கிறிஸ்தவ கன்வென்சன் சென்டரில், யாக்கோபா சாட்சி சபைகளின் மண்டல மாநாடு கடந்த 27-ம் தேதி தொடங்கியது. அந்த மாநாட்டின் நிறைவுவிழாவான இன்று சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கூடியிருந்தனர்.

இந்த நிலையில், கன்வென்சன் சென்டரில் இன்று காலை 9.45 மணியளவில் மேடைக்கு அருகே திடீரென அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன. இதனால் சில இடங்களில் பல அடி உயரத்துக்கு தீ எரிந்தது. இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 2 பேர் பலியானார். 52 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஐசியு-வில் உள்ள 18 பேரில் ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்த சென்டரின் உள்ளே டிபன் பாக்ஸ்களில் IED (Improvised Explosive Device) வைக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. ஐ.இ.டி. எனப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனத்தில் அம்மோனியம் நைட்ரேட், டைமர் மற்றும் பேட்டரியின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் கேரள போலீசார், மாநிலம் முழுவதும் பாதுக்காப்பை பலப்படுத்தியுள்ளனர்.

குண்டுவெடிப்பு நடந்த கன்வென்ஷன் சென்டருக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். தடயவியல் குழுவினர், கைரேகை நிபுணர்கள், தீயணைப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். யாக்கோபா சபையின் அனைத்து சென்டர்களும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

குண்டுவெடிப்புக்கு நடந்த இடத்தில் சோதனை மேற்கொண்ட டிஜிபி ஷைக் தர்வேஷ் சாஹிப், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “குண்டு வெடிப்புக்கு ஐஇடி கருவி பயன்படுத்தப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு சிறப்பு குழு அமைக்கப்பட இருக்கிறது என்றார்.

சம்பவ இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் மத்திய உளவுத்துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். 4 பேர் கொண்ட என்.ஐ.ஏ. குழு உள்ளூர் போலீஸாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், குண்டுவெடிப்புக்கு சற்று முன்பு மையத்தில் இருந்து கார் ஒன்று வேகமாக வெளியேறுகிறது. ஐஇடி வெடிகுண்டு வைத்த நபரே காரை ஓட்டியிருக்கலாம் என விசாரணைக் குழு சந்தேகிக்கின்றது.

குண்டுவெடிப்பை அடுத்து, கேரள மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட எஸ்.பி-க்களுக்கும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்தின் முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

டிபன் பாக்ஸ் குண்டுவெடிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம். போலீஸ் அதிகாரிகள் கொச்சிக்கு சென்றுள்ளனர். களமச்சேரி சம்பவம் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுவருகின்றன” என்றார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இதில் மாநில பாதுகாப்பு குறித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளார்களிடம் பேசிய மத்திய அமைச்சர் முரளிதரன், “கிறிஸ்துவ மத மக்களின் பொதுப்பிரார்த்தனை கூட்டத்தில் இப்படி ஒரு வெடிகுண்டு தாக்குதல் நடந்தது அறிந்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன். இச்சம்பவம் குறித்து முதல்வர் பினராயி விஜயனை, தொலைபேசி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்பு கொண்டு பேசினார். அவரைத்தொடர்ந்து நானும் , முதல்வரை தொடர்பு கொண்டு பேசினேன். இது வெடிகுண்டு தாக்குதல்தான் என டிஜிபி உறுதிப்படுத்தியுள்ளார்” என்றார்.

Also Read : பென்னி குயிக், முல்லைப் பெரியாறு அணையின் உண்மையான வரலாற்றுப் பின்னணி! விவசாயிகளின் மனச்சான்றை எடுத்துரைக்கும் புதிய தொடர்!

எட்டு பேர் கொண்ட தேசிய பாதுகாப்பு படையின் குண்டு வெடிப்பு தடுப்பு குழு டெல்லியிலிருந்து கேரளா விரைந்துள்ளது. அந்தக் குழு குண்டு வெடிப்பு குறித்து விசாரிப்பதுடன், குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை சேகரித்து ஆய்வு செய்கிறது.

குண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவர் பிடிபட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள ஏடிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) எம்.ஆர்.அஜித் குமார், “இதனை தாமே செய்ததாகக் கூறி திருச்சூர் மாவட்டத்தின் கிராமப்புறமான கொடக்ரா காவல் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார். அவர் பெயர் டொமினிக் மார்ட்டின். அவரும் அந்த சபாவைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார். இதுகுறித்து விசாரித்து வருகிறோம்.” என்று கூறியுள்ளார்.

50 வயது மதிக்கத்தக்க டொமினிக் மார்ட்டின் சரணடைவதற்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் கடந்த 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை. யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளுடன் தனக்கு உடன்பாடு இல்லை. அவர்களின் நடவடிக்கைகளை நிறுத்த விரும்பினேன். அவர்களின் கருத்துக்கள் நாட்டிற்கு ஆபத்தானவை” என்று பேசியுள்ளார்.

டொமினிக் மார்ட்டின்

இந்தநிலையில், குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் தமிழகத்தில் ஊடுருவலாம் என்ற அடிப்படையில், கேரள மாநிலத்தை ஒட்டியிருக்கக்கூடிய, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் ஏதேனும் துப்பு கிடைக்கலாம் என்ற நோக்கில், கேரள மாநிலத்தை ஒட்டிய எல்லையோர தமிழக பகுதிகளில் காவல்துறை சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry