அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் 2003 ஏப்ரலில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
போராட்ட உணர்வுடன் ஜாக்டோ ஜியோ பதாகையினை உயர்த்திப் பிடித்து 2003 ஜீலை இரண்டாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் அனைவரும் கரம் கோர்த்துப் போராட்டத்தில் களம் கண்டோம்.
ஒரே நாளில் ஒன்றே முக்கால் லட்சம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். 999 பேர் ஏழு மாதத்திற்கும் மேலாக நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். தமிழ்நாட்டில் கிளைச் சிறைச்சாலைகள் தொடங்கி அனைத்து சிறைச்சாலைகளிலும் ஜாக்டோ ஜியோ தலைவர்களை, பொறுப்பாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தலைமைச் செயலக பணியாளர்களை சித்திரவதை செய்தார்கள். அத்தனை தாக்குதலையும் தாங்கிக் கொண்டு களத்தில் நின்று போராடி வந்தோம்.
பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றங்களின் தீர்ப்பினால் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டோம். இழந்த ஊதியங்களைப் பெற்றோம். வேலை இழந்த இயக்கப் போராளிகளை அவரவருடைய இயக்கங்கள் கரம் பற்றி பாதுகாத்து வந்தது என்பதை இன்றைக்கு நினைத்தாலும் இயக்க உணர்வு மேலிட்டு கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீர் தளும்புகிறது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமைச் செயலக அலுவலர்களை அவரவர் இடத்தில் அமரச் செய்து போர்க்குணம் கண்டு பெருமிதம் கொண்டோம். நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. செல்வாக்கு மிக்க கட்சித் தலைமை 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் இழந்தது என்ற வரலாறு இன்னமும் நினைவுப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.
பழைய ஓய்வவூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பறிக்கப்பட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என்று 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் வருகிறோம். தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் தேர்தல் அறிக்கையிலும் சொன்னார்கள். பழைய ஓய்வவூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தேர்தல் பரப்புரைக் கூட்டங்களிலும் சத்தியப் பிரமாணமாகச் சொன்னார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. முதன்முறையாக தற்போதுதான் மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி நான்கு சதவீத உயர்வினை 01.07.2023 முதல் நிலுவைத் தொகையுடன் உயர்த்தி வழங்கி உள்ளார்கள்.
Also Read : சத்துணவு அமைப்பாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.10,000 ஆக உயர்த்த வேண்டும்! தமிழக அரசுக்கு பாமக வலியுறுத்தல்!
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ள நான்கு கட்ட போராட்டங்கள் – 01.11.23… மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்; 15.11.23 முதல் 24.11.23 முடிய ஆசிரியர் அரசு ஊழியர் சந்திப்பு பிரசார இயக்கம்; 25.11.23 மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம்; 28.12.23 சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டம்.
இந்தப் போராட்டங்களின் பிரதிபலிப்பாக, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற வண்ணம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்கிற அறிவிப்பு வெளிவர வேண்டும் என்ற நம்பிக்கை உணர்வுடன், போராட்டக் களத்தில் போர்க்குணப் பயணத்தினை ராணுவ வீரர்களைப் போல வீரநடை போட்டு நடத்துவோம்.
நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் தான் உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தால், நமது ஜாக்டோ ஜியோ கூட்டுக் குடும்பத்து பிள்ளைகள் ஆறு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் பேர் ஓய்வூதியமின்றி, குறைந்த வயதில் இறந்து போகிறவர்களின் குடும்ப நிலையினையும், எதிர்காலத்தினையும் கண்டு ஆறுதல் சொல்ல முடியாமல் நாம் கலங்கி நிற்கிறோம்.
அதுபோல் 10, 15 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களும், ஓய்வூதியம் இல்லாமல் பணி நிறைவு பெறுபவர்களையும் பார்த்து, கண்களில் கலங்கி நிற்கும் கண்ணீரைத் தாங்க முடியாத வேதனையில் உழன்று கொண்டுள்ளோம். நமது கண்களில் கண்ணீருக்கு பதில் சிவந்த கண்களில் ரத்தம் கசிகிற உணர்வினைப் பெறுகின்றோம்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இழந்ததை, முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காலத்தில், நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றுள்ள காலத்தில் ஜக்டோ ஜியோ கூட்டமைப்பால் பெற முடியும் என்கிற நம்பிக்கையுடன் கொள்கைப் பிரகடனம் எடுத்து வெற்றி பெறும் வரை களத்தில் கரம் கோர்த்து, நம்பிக்கை உணர்வுடன் போர்பரணி முழக்கங்களை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்போம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஒப்புக்கொண்ட 12 கோரிக்கைகளும், சொன்னது என்னாச்சு? என்ற கோரிக்கை முழக்கத்துடன் டிட்டோஜாக் அமைப்பின் மூலம் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் பயணமாவோம். முற்றிலும் விமர்சனங்களைத் தவிர்த்துக் கொள்வோம். நம் கண் முன்னால் தெரிவதெல்லாம் பழைய ஓய்வூதிய திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள 6,25,000 குடும்பத்தாருடைய நிலையும், இடைநிலை ஆசிரியர்களுடைய ஊதிய முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலையும்தான்.
ஜேக்டோ-ஜியோ பேரமைப்பு போராட்டம் அறிவித்துள்ள இந்த நேரத்தில் கூட, மத்திய அரசைப் பின்பற்றி 10.03.2020 க்கு முன்பு உயர்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கும், அதன்பிறகு உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள், பெறுபவர்கள் அனைவருக்கும் ஒரே தொகையாக (Lumpsum Amount) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஆசிரியர் நியமனத் தேர்வு கூடாது என்கிறோம். ஆனால் ஆசிரியர் பயிற்றுநர்களைத் தேர்வு செய்ய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு (TET-2) நியமனத் தேர்வு ஒன்றை நடத்துகிறார்கள். அன்று பி.எட்., கல்லூரியில் படிக்கும் மாணவர்களை வைத்து பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்திய பாடத்தை மதிப்பீடு செய்தார்கள். இன்று 3, 6, 9 வகுப்புகளுக்கு அடைவுத் தேர்வினையும் அதே மாணவர்களை வைத்து நடத்துகிறார்கள். இதையெல்லாம் எப்படி தாங்கிக் கொள்வது?
Also Read : ஆசிரியர்கள் நியமன விவகாரம்! வாக்குறுதி அளித்துவிட்டு துரோகம் செய்யலாமா? தமிழக அரசுக்கு பாமக கண்டனம்!
ஈட்டிய விடுப்பைப் பணமாக்கிக் கொள்ளலாம் என்ற அரசாணையினை வெளியிட்டவரின் பிள்ளை ஆட்சியில் ஈட்டிய விடுப்பினை ஒப்புவிப்புச் செய்யும் அனுமதியையும் இழந்து நிற்கிறோம். ஜாக்டோ ஜியோ அமைப்பினால் பெற முடியாததை வேறு எந்த சக்தியாலும் பெற முடியாது என்பதை இந்தியாவில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கவாதிகளும் இன்னமும் பறைசாற்றி வருகிறார்கள்.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் கொள்கை வைரங்களே..! கொள்கைச் சீமான்களே..! தேவையற்ற புலனப் பதிவுகளை தவிர்த்து, நாட்டை காக்கும் முப்படை வீரர்களாக நமது போராட்டத்தினை நடத்துவோம். சோர்வு, தொய்வு என்ற வார்த்தையே அறியாதவர்கள்தான் போராளியாக இருக்க முடியும். வெற்றி பெறுவோம் என்ற உணர்வுடன் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள நான்கு கட்டப் போராட்டம் மட்டுமல்ல; அடுத்த கட்டப் போராட்டத்தினையும் நடத்த அணிவகுத்து நிற்போம் வாருங்கள்..!
புழுவானாலும் பாதிப்பு ஏற்படுகிற போது துடிக்கத்தான் செய்கிறது. நாம் துடித்தெழ வேண்டாமா? மந்திரத்தால் மாங்காய் விழுவதில்லை. பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் பெறுவதற்கு ஒன்றுபட்ட போராட்டத்தினால் மட்டுமே முடியும் என்கிற வரலாற்றினை மீண்டும் நெஞ்சத்தில் ஏற்றிக்கொண்டு போராடுவோம்..! கோரிக்கைகள் வெற்றியடைகிற போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை, பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்ற பெருமையை பெறப் போகிறோம் என்ற நம்பிக்கையோடு களத்தில் நிற்போம்.” இவ்வாறு அறிக்கையில் வா. அண்ணாமலை கூறியிருக்கிறார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry