தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களே நிலவளமும், நீர்வளமும் ஒருசேர பொருந்தியவை. அப்படிப்பட்டவைகளில் குமரி மாவட்டமும் ஒன்று. இந்த குமரி மாவட்டத்திற்கு முன்னொரு காலத்தில் பெருமை சேர்த்த நெய்யாறு அணை, இன்று எட்டாக்கனியாக கசந்து நிற்கிறது. வழக்கம் போல் இதுவும் மலையாள துரோகம்தான்..!
திருவனந்தபுரம் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கள்ளிக்காடு என்ற இடத்தில், பிரமாண்டமான முறையில் 1952 க்கும் 1958 க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட அணையே நெய்யாறு அணை. விடயம் என்னவென்றால் அணை கட்ட ஆரம்பிக்கும்போது பிரிக்கப்படாத தமிழகத்தில் இருந்தது அணைப்பகுதி.
Also Read : படுக்கையறை வாஸ்து! கட்டில் வைக்கும் திசை முதல் படுக்கை அறை வரை..! பயனுள்ள வாஸ்து டிப்ஸ்!
ஆனால் 1956இல் நிகழ்த்தப்பட்ட மொழிவழி பிரிவினை மோசடியின்போது தமிழகத்திற்கா-கேரளத்திற்கா என சிக்கலான ஏழு தாலுகாக்களில், இந்த அணை இருக்கும் நெய்யாற்றின் கரையும் ஒன்று என்பதால் நிலைமை சிக்கலானது. ஆனாலும் 84.75 அடி உயரத்தில் அணை கட்டப்பட்டுவிட்டது. அணையினுடைய மொத்த நீரில், 40 விழுக்காடு தண்ணீர் தமிழகத்தின் கழியல் அணைமுகம் மற்றும் கருப்பையாறு போன்ற பகுதிகளில் இருந்தே கிடைக்கிறது.
1958இல் அணை கட்டி முடிக்கப்பட்டாலும், தமிழகத்திற்கும் கேரளாவிற்குமிடையே எழுந்த மொழிவழி பிரச்சினைகளால் எந்த பயன்பாட்டிற்கும் இல்லாது போனது.விவசாயிகளின் பெரிய எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படாத நிலையில், அணையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்திலிருந்தும், கேரளத்திலிருந்தும் எழுந்த வண்ணமாக இருந்தது.
இந்த நேரத்தில் 1963ஆம் ஆண்டு தமிழக கேரள எல்லையான பாறசாலைக்கு அருகே இரண்டு கால்வாய்களை வெட்டுவதற்கு தயாரானது தமிழக பொதுப்பணித்துறை. இரண்டு மாநிலங்களிலும் நீர்த்தேவை இருப்பதை உணர்ந்து கொண்ட தமிழக முதலமைச்சரும், கேரள முதலமைச்சரும் நெய்யாறு அணையின் நீரை பகிர்ந்து கொள்வதற்கு முன்வந்தார்கள். பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்ட இந்த புரிந்துணர்வு, எந்த எழுத்து வடிவமும் பெறாததால், தமிழகம் இன்று வஞ்சிக்கப்பட்டு நிற்கிறது.
முழுக்க முழுக்க தமிழக அரசின் செலவில் கட்டப்பட்ட இரண்டு கால்வாய்களையும், அன்றைக்கு கேரள மாநில முதலமைச்சராக இருந்த சங்கர் தலைமையில், தமிழக முதலமைச்சராக இருந்த காமராஜர், ”சுந்தரிமுக்கு” என்ற இடத்தில் திறந்து வைத்தார். இரண்டு கால்வாய்களில், வலதுபக்க கால்வாய் மூலம் கேரளாவின் நெய்யாற்றின்கரை தாலுகாவிற்கும், இடதுபக்க கால்வாய் மூலம் தமிழகத்தின் விளவங்கோடு தாலுகாவிற்கும் தண்ணீர் பகிர்ந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
நீர் திறப்பு விதிப்படி ஜூன் முதல் ஜனவரி வரை வினாடிக்கு 150 கனஅடி நீர், நெய்யாற்றின்கரை இடதுகரை கால்வாய் மூலம் தமிழகத்திற்கு திறக்கப்பட்டது. இதன் மூலம் குமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தாலுகாவில் உள்பட்ட அண்டுகோடு, இடைக்கோடு, பாக்கோடு, விரிகோடு, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய பகுதிகளில் சுமார் 11 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது.
இப்படி 1963 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் எவ்வித பிரச்சினையுமின்றி தமிழகத்தை நோக்கி ஓடிவந்த நீருக்கு, 2003 ஆம் ஆண்டில் ஒரு சிக்கல் வந்தது. அன்றைக்கு கேரள மாநில முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.கே. அந்தோணி தலைமையிலான அரசு, “பிற மாநிலங்களுக்கு தண்ணீர் தர வேண்டும் என்றால் அதற்கு கேரள சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்” என்று இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லாத ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தார்.
Also Read : டீ, காபி குடிப்பதற்கு முன் கட்டாயம் தண்ணீர் அருந்த வேண்டும்! ஏன் தெரியுமா?
அநியாயமான இந்த சட்டத்தை கேரள சட்டமன்றம் நிறைவேற்றியதும், அடுத்த ஆண்டே தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டு இருந்த நெய்யாற்றின்கரை இடதுகரை கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. குமரி மாவட்டம் கொந்தளித்தது. நேற்றுவரை கரைதட்டி ததும்பி ஓடிய நீர், இன்று வரவில்லை என்று சொன்னால், என்னதான் செய்வான் இந்தத் தமிழ் நிலத்து அப்பாவி.
1958ஆம் ஆண்டு கேரள மாநில அரசு வெளியிட்ட கேரளாவின் நீர் ஆதாரங்கள் என்கிற ஆவணத்தில் “நெய்யாறு நதி ஒரு பன்மாநில நதி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது தமிழகம் மற்றும் கேரளாவிற்கு இடையே ஓடக்கூடிய நதி என்பது அதன் பொருளாகும். பன் மாநில நதி என்று கேரளாவே ஒப்புக்கொண்ட பின்னரும், எந்த யோக்கியதையில் ஏ.கே. அந்தோணி இதை அடைத்தார் என்ற கேள்வி இயல்பாகவே பிறக்கிறது.
அந்தச் சமயத்தில் கேரள மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த பிரேமச்சந்திரன், ஏ.கே. அந்தோணியை விட ஒரு படி மேலே சென்று, நெய்யாறு நீர் வேண்டுமென்றால், தமிழகம் அதிகமான பணம் தரவேண்டும் என்று பேசத் தொடங்கினார். பின்னர் திடீரென 14- 11- 2008 அன்று, பத்திரிக்கையாளர்களை சந்தித்த பிரேமச்சந்திரன், நெய்யாறு பன்மாநில நதி இல்லை என்று அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில் மத்திய நீர்வள கமிஷனின் நீர்வளத் தகவல் அமைப்பான WRIS இணையதளத்தில், நெய்யாறு நீர்ப்பாசனத் திட்டம் என்பது தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலம் சம்பந்தப்பட்ட திட்டம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைக் கடுமையாக ஆட்சேபித்த கேரள மாநில அரசு, நெய்யாறு கேரளாவிலேயே தோன்றி 56 கிலோ மீட்டர் தூரம் ஓடி, அரபிக் கடலில் கலப்பதாக விளக்கம் அளித்து மத்திய நீர்வள கமிஷனுக்கு கடிதம் எழுதியது.
ஆனால் ஒரு நீர்ப் பாசனத் திட்டத்தில், தண்ணீர், செலவு, மற்றும் பலன்கள் ஆகியவற்றை இரண்டு மாநிலங்கள் பகிர்ந்து கொண்டால், அது இரு மாநிலம் சம்பந்தப்பட்டது என்கிறது மத்திய நீர்வள கமிஷனின் சட்டம். அந்தச் சட்டத்தின் அடிப்படையில் நெய்யாறு அணை கட்டப்படும் போது அது பழைய தமிழகத்தில் இருந்தது என்பதை கேரள மாநில அரசு வசதியாக மறந்து விட்டது.
மேலாக தமிழகத்திற்கு நீர் வரும் நெய்யாற்றின்கரை இடதுகரை கால்வாயை அமைத்ததோடு, கேரளாவிற்கு நீர் செல்லும் வலதுகரை கால்வாயை அமைத்ததும் அன்றைய தமிழக பொதுப்பணித்துறை தான் என்பதை கேரள அரசியல்வாதிகள் முற்றிலுமாக மறந்து விட்டார்கள். தமிழக சட்டமன்றத்திலும் இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும், இந்த நெய்யாற்றின்கரை இடது கரை கால்வாய் குறித்து ஆயிரம் முறை விவாதிக்கப்பட்டும் இன்னும் விடிவு மட்டும் கிடைக்கவில்லை.
நாற்பதாண்டுகள் கரைபுரண்டு தண்ணீர் ஓடிய நெய்யாறு இடதுகரை கால்வாய் இன்று முற்றிலும் புதர் மண்டிக் கிடக்கிறது. விளவங்கோடு தாலுகாவில் 11 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்த தமிழ் நிலத்து அப்பாவி விவசாயிகள், வாழ வழியற்று எந்த கேரளம் அவர்களை வஞ்சித்ததோ, அந்த கேரளாவிற்கே சென்று வயிற்றுப் பாட்டிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எது எப்படியிருப்பினும் நெய்யாறு இடதுகரை கால்வாய் தமிழகத்தின் அவமான சின்னங்களில் ஒன்றாக நீடித்துக் கொண்டிருக்கிறது. 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக தமிழகத்தின் மீது நடத்தப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட மோசடியால், தமிழகம் இழந்த நீர்வளம் கொஞ்சநஞ்சமல்ல.
கட்டுரையாளர் : எழுத்தாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர் – பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம். மாநில செயலாளர் – தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry