விக்ரம் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஜய்யுடன் இரண்டாவது முறையாகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் எகிறிய வண்ணமிருக்கிறது.
அக்டோபர் 19 -ம் தேதி படம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றதை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ‘லியோ’ படக் குழு தினமும் அப்டேட்களை அள்ளித் தெளித்த வண்ணமிருக்கின்றனர்.
மேலும், இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த படக்குழுவினர் அசந்துபோய் இருப்பதாக சமூகவலைதளங்களில் ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் பற்றிய ட்வீட்கள் தீயாய்ப் பரவி வந்தன. இந்நிலையில் கோலிவுட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ட்ரெய்லரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ட்ரெயிலரின் ஒரு காட்சியில் நடிகர் விஜய் ஆபாச வார்த்தையில் பேசுகிறார். இது விஜய் ரசிகர்களுக்கே மிகப்பெரிய ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ட்ரெயிலரில் விஜய் கெட்ட வார்த்தை பேசும் காட்சிக்கு பெரும்பாலும் எதிர்மறை கருத்துக்களே குவிந்து வருவதால், படத்தில் இந்த வார்த்தையை நீக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் ரத்தம், துப்பாக்கிச்சூடு என டிரெய்லர் முழுவதும் வன்முறைக் காட்சிகள் விரவிக் கிடக்கிறது.
காஷ்மீரில் வசிக்கும் மனைவி(த்ரிஷா) மற்றும் ஒரு மகளுடன் குடும்ப மனிதராக விஜய் நடித்துள்ளார் என்பதை ட்ரெய்லரில் நாம் புரிந்து கொள்ள முடிந்தது. இருப்பினும், அவரது கடந்த காலம் அவரை வில்லன்களால் துரத்துகிறது, பழிவாங்கும் நோக்கத்துடன் அவரைத் தேடுகிறது. ஒரு சீரியல் கில்லர் பற்றியும், அவரைத் தேடும் போலீஸ் அதிகாரி பற்றியும் காட்சிகள் உள்ளன. சஞ்சய் தத் வில்லனாக மிரட்டுகிறார். விஜய்க்கான ஆக்ஷன் காட்சிகள் நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுக்கவல்லவை. விஜய் தொடங்கி மிஷ்கின் வரை மிரட்டல் லுக்கில் காட்சியளிக்கின்றனர்.
மாஸ்டர் பட வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் விஜயை இயக்கும் இரண்டாவது படம் லியோ. இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோ சார்பாக லலித் குமார் தயாரித்துள்ளார். லியோ படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், தற்போது ட்ரெய்லரை வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
இதனிடையே, லியோ’ ட்ரைலரை பார்த்த நெட்டிசன்கள் சிலர்… லோக்கி, காப்பி அடிப்பதில் அட்லீயை மிஞ்சி விட்டதாகவும், லியோ திரைப்படம், 1988 ஆம் ஆண்டு வெளியான ‘Aparan’ என்கிற மலையாள படத்தை தழுவியும், 2005 ஆம் ஆண்டு வெளியான ‘History of Violence’ என்கிற படத்தையும் தழுவி எடுக்கப்பட்டது போல் உள்ளதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry