ஆசிரியர்களை காவல்துறை கைது செய்த விதம் கண்டனத்துக்குரியது! உடனடியாக விடுவிக்க முதலமைச்சருக்கு ஐபெட்டோ வலியுறுத்தல்!

0
464
Tamil Nadu teachers protesting pay disparity, seeking permanent jobs arrested in Chennai

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னையில் பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் மூன்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டிருந்தார்கள்.

போராடியவர்களை அழைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தைக்கு பின்பு அமைச்சரின் அறிவிப்பு போராட்டக் களத்தில் உள்ளவர்களுக்கு திருப்தி அளிக்காததால் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார்கள்.

ஐபெட்டோ அண்ணாமலை

இந்நிலையில் போராடிக் கொண்டிருந்த ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளார்கள். குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றி உள்ளார்கள். இதையெல்லாம் பார்த்து குழந்தைகள் கதறி அழுதுள்ளார்கள். காவல்துறையின் இந்த நடவடிக்கை வேதனையினை அளிக்கிறது. முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை, ஆசிரியர்களின் இதயக் குமுறல்களுக்கு கொடுப்பதாகத் தெரியவில்லை.

Also Read : போராடிய ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது! பயத்தில் கதறிய குழந்தைகள்! தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கடும் கண்டனம்!

‘சம வேலைக்கு சம ஊதியம்’ கேட்டு போராடி வருகின்ற பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் ஆதரவு தெரிவித்து போர்க்குண உரையினை நிகழ்த்தி உள்ளார்கள்.

முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இவர்களுடைய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரையினை நாங்கள் கேட்டோம். ‘அதிமுக ஆட்சியில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காலமுறை ஊதியம் வழங்குவோம்’ என்று சொன்னார். இடைநிலை ஆசிரியர்கள் என்ன கோரிக்கை வைத்தார்கள் என்று புரிந்துகொண்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று சொன்னார்களா? என நமக்குத் தெரியவில்லை.

தொடர்ச்சியாக இவருடைய ஆட்சியிலும் போராடிக் கொண்டே இருக்கிறார்கள். மூவர் குழு நியமனம் செய்துள்ளார்கள். 31/5/2009க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், 01/06/2009க்குப் பின்பு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே பெருத்த ஊதிய வேறுபாடு உள்ளது என்பது உண்மையிலும் உண்மையாகும். 01.01.2006 முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதிய நிர்ணயம் மட்டுமே இடைநிலை ஆசிரியர்களுக்கான தீர்வாக அமைய முடியும்.

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மாதம் ₹ 2,500/- ஊதியத்தினை உயர்த்தி அறிவித்ததுடன், அவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டத்தையும் அறிவித்துள்ளார்கள். ‘நாங்கள் ஊதிய உயர்வு கேட்டுப் போராட்டம் செய்யவில்லை. எங்கள் அனைவரையும் பணி நிரந்தரப்படுத்துங்கள் என்றுதான் போராடி வருகிறோம். 12 அரை நாள் ஆசிரியர் என்ற பெயரிலிருந்து விடுவித்து, முழுநேர ஆசிரியர்களாக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம்’ என்று கூறுகிறார்கள். தற்போது அரசின் அறிவிப்பினை ஏற்று போராட்டத்தினை அவர்கள் வாபஸ் பெற்றுள்ளார்கள்.

Also Read : வாழ்வுரிமைக்காக போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதா? மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த பாமக வலியுறுத்தல்!

ஆசிரியர் தகுதித் தேர்வில்(TET) தேர்ச்சி பெற்றவர்கள், ஆசிரியர் பணிக்கு நியமனம் செய்ய வேண்டி தொடர்ந்து போராடி வருகிறார்கள். நியமனத் தேர்வை ரத்து செய்து விட்டு TET தேர்ச்சி பெற்றவர்களை காலிப்பணியிடங்களில் நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. வயதுவரம்பினை வேண்டுமானால் தளர்வு செய்கிறோம் என்று பொது பிரிவினருக்கு 52 வயது என்றும், மற்றவர்களுக்கு 58 வயது என்றும் அறிவித்துள்ளார்கள்.

TET தேர்வில் தேர்ச்சி பெற்றே 10, 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. வயது தளர்வினால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என்று சொல்லும் அவர்கள், இந்த அறிவிப்பு எல்லாம் வெற்று அறிவிப்புகள் என்று கூறி போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களின் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எந்த அறிவிப்பும் இல்லை. அவர்களின் கோரிக்கைளில் நியாயமிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக கல்வி அமைச்சர் அவர்களின் அறிவிப்பில், போராடி வரும் ஆசிரியர்களின் இதயக் குமுறக்கு தீர்வு காண முடியவில்லை. ஆனால், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு தமிழ்நாடு அரசின் மிக முக்கியமான திட்டமான எண்ணும் எழுத்தும் திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றுதான் அறிவுரை வழங்குகிறார். முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், இந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் சோதனையை யார் நடத்துவது..?

Also Read : கோரிக்கைகளை முதல்வர் கண்டுகொள்ளவில்லை! அக்.16-ல் 20,000 பேர் உண்ணாவிரதம்! MSME கூட்டமைப்பு அறிவிப்பு!

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இணைப்புப் பாடத்திட்டமான (Bridge Course) இந்தத் திட்டம், கொரோனா பெருந்தொற்று காலம் முடிந்தவுடன் தானாகவே கைவிட்டு இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டின் கல்வித் திட்டத்தில் இது ஒரு உயிர்வளித் திட்டமாக மாறி உள்ளது என்பதை கேட்டு நெஞ்சு பொறுக்குதில்லையே..!

எண்ணும் எழுத்தும் திட்டத்தினை கற்பித்தல் பணி செய்யும் ஆசிரியர்கள் சிறப்பான திட்டம் என்று சொல்கிறார்களா? அல்லது, கல்வியாளர்கள் இந்த திட்டத்தை சிறப்பான திட்டம் என்று வரவேற்கிறார்களா? செல்லுக்குள் கற்றலில் ஈடுபட்டு வரும் மாணவர்கள்தான் சிறப்பான திட்டம் என்று சொல்கிறார்களா? அல்லது, அந்த மாணவர்களின் பெற்றோர்தான் இந்தத் திட்டத்தை சிறப்பான திட்டம் என்று சொல்கிறார்களா? ஐஏஎஸ் அதிகாரிகள்தான் சிறப்பான திட்டம் என்று செயல்படுத்தி வருகிறார்கள். SCERT இயக்ககம் மாணவர்களின் கல்வி நலனை பாழ்படுத்தி வரும் இத்திட்டத்தினை பல்வேறு கோணங்களில் ஆசிரியர்கள் மீது திணித்து வருகிறது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் போதிக்கும் பள்ளிகளில், காலை உணவுத் திட்டம் கொண்டு வந்தாலும் அல்லது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனைக் காக்க பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வந்தாலும், கற்றல் திறன் இல்லாமல் பல மாணவர்கள் பெற்றோர்கள் செய்யும் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இதைத்தான் மத்திய அரசு விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் அமல்படுத்துகிறது. இதை நாம் எதிர்க்கிறோம்.

Also Read : குடும்ப நிறுவனத்துக்காக ஆவினை நசுக்கும் திமுக அரசு? பகீர் பின்னணியை அம்பலப்படுத்தும் முகவர்கள்! அதிமுகவால்தான் ஆவினை காப்பாற்ற முடியும்!

அக்டோபர் 2 காந்தியடிகள் பிறந்த நாளில், கிராம சபைக் கூட்டம் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய முதலமைச்சர், எண்ணும் எழுத்தும் திட்டத்தினை நல்ல திட்டம் என்று பேசியுள்ளார்கள். மத்திய அரசின் கல்வித் திட்டமான தேசியக் கல்விக் கொள்கையினை ஐஏஎஸ் அதிகாரிகள் அழகான தமிழில் பெயர் மாற்றம் செய்து அமல்படுத்தி வருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

பிள்ளைகளுக்கு கற்றல் திறன் இல்லாவிட்டால், பெற்றோர் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளை நாடிச் சென்று சேர்ப்பார்கள். ஏனெனில் அங்கு எண்ணும் எழுத்தும் திட்டமும் இல்லை, கண்ணும் கருத்தும் திட்டமும் இல்லை..! தமிழ்நாட்டில் இந்த நிலைமைதான் ஏற்படும் என்பது உண்மையிலும் உண்மை! இது சத்தியம்! சத்தியம்.! சத்தியம்..!

கருணாநிதி ஆட்சிக்கும் அவரின் பிள்ளையினுடைய ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு, அவர் உண்மை கண்டறியும் சோதனையை அவ்வப்போது நடத்துவார். இவர்கள் அதிகாரிகள் சொல்வதை உண்மை என்று நம்பி செயல்படுத்தி வருகிறார்கள். புத்தகம் படிப்பில்லாத கல்வியும் வாசிப்புத் திறன் இல்லாத கல்வியும், ஆசிரியர் போதனையில்லாத கல்வியும் மாணவர்களை கல்வி அறிவில் கரை சேர்த்ததாக இதுவரையில் வரலாறு இல்லை என்பதை அரசு உணர வேண்டும்.

Also Read : சாதியை அணையா அடுப்பில் போட்ட அருட்பிரகாச வள்ளலார்! மனித குலத்துக்கே வழிகாட்டும் பெருமகனாரின் அறமும், ஜீவகாருண்யமும்!

பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில், அக்டோபர் 13ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயமும் பல்வேறு பொதுக் கோரிக்கைகளுடன் கொள்கை முழக்கமிட தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் அணிவகுத்து வர ஆயத்தமாகி வருகிறார்கள்.
மாணவர்களின் கல்வி நலனை பாழ்படுத்தி வரும் எண்ணும் எழுத்தும் திட்டத்தினை கைவிட வேண்டும், அன்றாடம் ஆசிரியர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கி வரக்கூடிய எமிஸ் இணையதள பணியில் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும், அனைத்து வகையான பயிற்சிகளிலிருந்தும் ஆசிரியர்களை முழுமையாக விடுவித்து ஏழை எளிய மாணவர்களுக்கு வகுப்பறையில் உயிரோட்டமாக பாடம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட உள்ளது.

இந்தத் தகவலெல்லாம் முதலமைச்சருக்கு சென்றடைந்ததா? என்று எங்களுக்குத் தெரியவில்லை. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் பாதிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதுவரையில் உணர்ந்தவராகத் தெரியவில்லை. போராடும் ஆசிரியர்களுடைய கோரிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் தீர்வு காண முன்வராமல், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் பெருமைகளையே சொல்லி வருகிறார் என்றால், பள்ளிக் கல்வித்துறை எங்கே சென்று கொண்டுள்ளது? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

Also Read : மூளைக்கும் வயிற்றுக்கும் நடக்கும் சிக்னல் பரிமாற்றம்! உணவுக்கும் மூளைக்குமான சிலிர்க்கவைக்கும் தொடர்பு! Can nutrition affect your mental health?

தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் இந்த செயல்பாட்டினை ஆண்டவனால்தான் காப்பாற்ற முடியும்.
ஆம்..! ஆண்டவன் என்றால் இதற்கு முன்பு ஆட்சி செய்த கருணாநிதியுடைய கொள்கை நெறிவழியில் சென்றால் மட்டும்தான் காப்பாற்ற முடியும். சில IAS அதிகாரிகளுடைய பிடியிலிருந்து இந்த ஆட்சி விடுபட வேண்டும்.

மகளிர் உரிமைத்தொகை, மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் போன்ற நலத்திட்டங்கள் எல்லாம் வாக்கு வங்கியாக மாற்றமடைந்து வருமா? என்பதை காலம் வருகிறபோது தான் தெரிந்து கொள்ள முடியும். நிரந்தரமாக உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் வாக்கு வங்கியினை பற்றி கவலைப்படாமல் இருந்தால்… இன்றைய ஆட்சியாளர்களுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிவிப்பு வெளிவருமா?.. விடியல் ஏற்படுமா? என காத்திருக்கிறோம்.” இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry