சாதியை அணையா அடுப்பில் போட்ட அருட்பிரகாச வள்ளலார்! மனித குலத்துக்கே வழிகாட்டும் பெருமகனாரின் அறமும், ஜீவகாருண்யமும்!

0
80
Vallalar said, ‘The path of compassion and mercy are the only path of god’

வடலூர் இருக்கும் கடலூரில், மதத்தை அபின்(கஞ்சா) என்று வரையறுத்த மாச்சியவாதிகள் ஒன்று கூடி, வள்ளலார் பெருமகனின் 200 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்றால், அந்த மெய்ஞானியின் தேவை இன்னமும் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

எந்த வரையறைக்குள்ளும் அடைக்க முடியாத அற்புதமான மெய்ஒளி, வள்ளலார் பெருமகன். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்கிற முழக்கம், ஒரு நூற்றாண்டுக்கான முழக்கம் அல்ல, இந்த பூமிப்பந்தின் கடைசி உயிர் இருக்கும் வரை ஒலிக்க வேண்டிய முழக்கம் என்பதை காலம் நமக்கு உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது.

உலகத்தில் தர்மம் உள்ளவரை இந்த அடுப்பு அணையாது, இந்த அடுப்பு உள்ளவரை தருமம் அணையாது என்று சத்திய வாக்கு கொடுத்து, 1867ம் ஆண்டு, மே 23 ஆம் தேதி, வள்ளலார் பெருமகன் வடலூர் மண்ணில் தான் நிறுவிய தர்மச்சாலையில் கட்டிய மண்ணடுப்பில் ஏற்றிய தீ, 156 வருடங்களைக் கடந்து இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது.

வரலாற்றை ஓரளவு கற்றுத் தெரிந்த நானே நாகரிகம் பிறந்த மேலை நாடுகளில் இது போன்ற அடுப்பு ஏதாவது இருக்கிறதா என்று பல பத்தாண்டுகளாக தேடிக் கொண்டிருக்கிறேன். கண்ணுக்கு எதுவும் அகப்படவில்லை. அறிவியலில் உச்சம் தொட்டவர்கள் மானுடத்தில் கோட்டை விட்டார்கள் என்பதுதான் மேலைநாட்டு தத்துவார்த்தங்களின் அடிப்படை குறியீடு.

156 ஆண்டுகள் ஒரு அடுப்பை அணியாமல் வைத்திருப்பது, அந்த அடுப்பின் மூலமாக பசி என்று வருகிறவர்களுக்கு எல்லாம் உணவு கொடுப்பது என்பதெல்லாம் செல்லுலாய்டுகளில் கூட நாம் சித்தரிக்க முடியாத காட்சி. ஆனால் வடலூரில் உள்ள சத்திய தருமச் சாலை அதை அத்தனை கவனமாய் அடைகாத்துக் கொண்டிருக்கிறது.

வடலூரில் உள்ள சத்திய தருமச்சாலையில் காலை உணவாக கஞ்சி கொடுக்கப்படுகிறது. மதிய உணவாக சோறு, சாம்பார், ரசம், மோர், ஊறுகாய், ஒரு கூட்டு கொடுக்கப்படுகிறது. இரவு உணவாக கலவை சோறு கொடுக்கப்படுகிறது. எத்தனை கொடிய பஞ்சத்திலும் வடலூரில் வள்ளலார் பெருமகன் ஏற்றிய தீ எரிந்து கொண்டே இருக்கிறது. மூன்று நேரமும் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறார்களே… தருமச்சாலைக்கென்று மூன்று நேரமும் சோறு போடும் அளவிற்கு சொத்து பத்து இருக்கிறதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

லட்சக்கணக்கான ஏக்கர் சொத்து வைத்திருக்கும் திருவாவடுதுறை ஆதீனம், பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் சொத்து வைத்திருக்கும் மதுரையாதீனம், தருமபுர ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர்களிலே சொத்து வைத்திருக்கும் ராமகிருஷ்ண ஆசிரமம் உள்ளிட்ட எந்த ஆதீன மடமும், ஆசிரமங்களும் கைப்பிடி சோற்றை பசித்தவர்களுக்கு கொடுக்காத நிலையில், நில புலன் எதுவும் இல்லாத வடலூர், மூன்று நேரமும் பசித்தவருக்கு உணவு வழங்கிக் கொண்டிருக்கிறது.

5,000 ரூபாய் கட்டி, ஒரு பந்தி செலவை ஏற்கும் அருளாளர்களும் அங்கு இருக்கிறார்கள். வடலூர் சுற்றுவட்டாரத்தில் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை தருமச்சாலைக்கு கொடுக்க வேண்டும் என்கிற எழுதப்படாத அறம் ஒன்றும் இருக்கிறது. கூடுதலாக தருமச்சாலைக்கென்று இருக்கும் ஒரு மாட்டு வண்டி சுற்றுப்புற கிராமங்களுக்கு சென்றால், அடுப்பெரிய தேவையான அத்தனை விறகையும் அந்த வண்டியிலே போட்டு விடுகிறார்கள் அறம் சார்ந்த மக்கள்.

தருமச்சாலைக்கு வெளியே நான்கு தானிய உண்டியல்கள் இருக்கிறது. நெல், புழுங்கல், பச்சரிசி, பருப்பு என வைக்கப்பட்டிருக்கும் நான்கு உண்டியல்களிலும்,யாரோ ஒருவர், எதையோ ஒன்றை கொண்டு வந்து போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட அரிசியை விலை கொடுத்து வாங்கவில்லை என்கிறது தருமச்சாலை.

சாதி வெறிக்கு பெயர் போன கடலூர் மாவட்டம், தருமச்சாலைக்கு முன்னே அடங்கி நிற்பதை பார்த்தால், ஆனந்தம் அளவின்றி மேலிடுகிறது. என்னதான் சாதி வெறி ஊறிப் போயிருந்தாலும், தருமச்சாலை நூற்றாண்டுகளாக முன்னெடுத்து நிற்கும் அறமும், ஜீவகாருண்யமும் அவர்களை அடக்கி ஒடுக்குகிறது.

ஊரைச் சுற்றி எத்தனை வறட்சி ஏற்பட்டாலும், தருமச்சாலைக்குள்ளே இருக்கும் கிணறு, இத்தனை ஆண்டுகளில் ஒருபோதும் வற்றியதில்லை என்பதற்கு பின்னால் இருக்கிறது வள்ளலார் இராமலிங்கர் முகிழ்ந்து நின்ற ஜீவகாருண்யம். 1876 ம் சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் சிக்கி, உண்ண உணவின்றி ஒரு கோடிக்கும் மேலானோர் பசிக்கு பலியானார்கள். அன்றும் வடலூரில் உள்ள தருமச்சாலையின் அடுப்பு எரிந்து கொண்டு தான் இருந்தது.

வடலூரில் உணவு சமைக்க ஆரம்பித்ததற்கு பின்னால், இந்த ஊரும், உலகமும் எத்தனையோ மாற்றங்களை கண்டிருக்கிறது. ஆனால் மண்ணடுப்பு கோட்டடுப்பாக மாற்றப்பட்டதை தவிர, சத்திய தருமச்சாலையில் எந்த மாற்றமும் இல்லை.

அடுப்பில் எரியும் தீயையே ஜோதி வடிவாக காணுகிறார் வள்ளலார் பெருமகன். அதனையே வழிபடுங்கள் என்கிறார். தத்துவம் இரண்டும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதை என்னால் உணர முடிகிறது. வாழ்ந்த காலத்தில் வள்ளலார் பெருமகன் மீது ஆயிரக்கணக்கான விமர்சனங்கள் வைத்திருக்கிறார்கள். கரை கண்டு எரிச்சலுற்றிருக்கிறார்கள், இழித்துப்பேசி இருக்கிறார்கள். எல்லோருக்கும் அவருடைய பதில் மொழி, அவருடைய தத்துவத்திலேயே அடங்கி இருந்தது.

உலகம் கண்டிராத ஒப்பற்ற மகான் வள்ளலாரின் 200வது பிறந்த தினம் இன்று. பசித்தவருக்கு உணவு என்கிற ஒற்றை சொல்லில் உலகத்தை சுருக்கிய, வள்ளலார் பெருமகனை வணங்கி நிற்கிறேன். அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி!

கட்டுரையாளர் : ச.அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry