குடும்ப நிறுவனத்துக்காக ஆவினை நசுக்கும் திமுக அரசு? பகீர் பின்னணியை அம்பலப்படுத்தும் முகவர்கள்! அதிமுகவால்தான் ஆவினை காப்பாற்ற முடியும்!

0
118
Milk agents accuse DMK Govt. of stalling Aavin's growth for family firm.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தினசரி இரவு தூங்கி, அதிகாலையில் பால் விநியோகத்திற்காக எழும் போதே, இன்று ஆவின் பால் பாக்கெட்டுகள் எவ்வளவு வருமோ..?, எவ்வளவு பற்றாக்குறையாக தருவார்களோ..?, பச்சை நிற பால் பாக்கெட் வருமா..? வராதா..? சில்லரை வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்ன பதில் சொல்வது..? பற்றாக்குறையான பால் பாக்கெட்டுகள் விநியோகத்தை எப்படி சமாளிப்பது..? என்கிற மன உளைச்சலுடனேயே பால் முகவர்களின் பணி தொடங்குகிறது.

அந்த வகையில் “கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக” ஆவின் தேய்ந்து, சுருங்கிக் கொண்டிருக்க, தமிழகம் முழுவதும் 50%க்கும் மேல் ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் முடக்கப்பட்டிருக்கிறது. ஆவினில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத, அது குறித்து விசாரிப்பதாக கூறுகின்ற, ஐஏஎஸ் படித்தவர் ஆவினின் நிர்வாக இயக்குனராக (வினித்) இருப்பதும், துறை சார்ந்த அமைச்சர் ஆவினையே மறந்து வெறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதிலும் மட்டுமே கவனம் செலுத்துவதும், பால்வளத்துறைக்கு மட்டுமல்ல ஆவினுக்கும் சாபக்கேடு என்றால் அது மிகையல்ல.

Also Read : பால் விலை ரூ.8 வரை உயர்கிறது! ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை திடீர் நிறுத்தம்! ஆவின் அட்டகாசத்தால் நுகர்வோர், முகவர்கள் அவதி!

தற்போதைய ஆவின் நிர்வாகத்தின் மெத்தனமான அல்லது திட்டமிடாத செயல்பாடுகளால் தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பால் முகவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இந்த நிலையில் இந்த அக்டோபர் மாதம் முதல் தங்களின் ஆவின் பாலகங்களுக்கான கடை வாடகை, மின்கட்டணம், பணியாளர்களின் ஊதியம் உள்ளிட்டவற்றை எப்படி  வழங்க முடியும்..? என்கிற கவலை இப்போதே ஒவ்வொரு பால் முகவர்களையும் ஆட்கொள்ளத் தொடங்கி, மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளியுள்ளது.

சு.ஆ. பொன்னுசாமி

தற்போது பச்சை நிற ஆவின் பாக்கெட் பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை முற்றிலுமாக முடக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது போல், 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் பால் முகவர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்ட ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட்டுகளின் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

ஆவினுக்கான பால் கொள்முதலும், பால் பாக்கெட்டுகள் உற்பத்தி மற்றும் விநியோகமும் அப்போது திட்டமிட்டு குறைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட தனியார் பால் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஆவினின் வளர்ச்சி முடக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போதைய நிலவரத்தை பார்க்கும் போது அதே தனியார் பால் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஆவினின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டு, 2006-2011ம் ஆண்டைய நிலை ஆவினிற்கு மீண்டும் வந்திருக்கிறதோ..? என்கிற மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது.

Also Read : நீரிழிவுநோய் – சுக்கு என்ன தொடர்பு? வெறும் வயிற்றில் சுக்குத்தண்ணீர் குடிப்பதால்..! Benefits of Dry Ginger!

ஏனெனில் தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகமானது திட்டமிட்டே 50%க்கு மேல் குறைக்கப்பட்டு வரும் சூழலில், பொதுமக்களுக்கு சரியாக ஆவின் பால் விநியோகம் செய்ய முடியாமல் பால் முகவர்கள் அல்லல்படுவதோடு, தங்களின் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்தத் தகவல் ஊடகங்கள் வாயிலாகவும், உளவுத்துறை அதிகாரிகள் மூலமாகவும் அரசின் கவனத்திற்கு தொடர்ச்சியாக கொண்டு சென்ற பிறகும் கூட, துறை சார்ந்த அமைச்சரோ, தமிழக முதல்வரோ இதுவரை வாய் திறக்காமல் இருப்பதும், அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் நமது சந்தேகத்தை மேலும் உறுதிபடுத்துவதாக இருக்கிறது.

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் பலரது வாயில் இருந்து தற்போதெல்லாம் “அதிமுக ஆட்சியே பரவாயில்லை, திமுக ஆட்சிக்கு வந்தாலே ஆவினுக்கு அழிவு காலம் தான், ஆவின் காப்பற்றப்பட இந்த ஆட்சி கலைந்து, வேறு எவர் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை” என்கிற வார்த்தைகளை அடிக்கடி கேட்க முடிகிறது. இதுவே பொதுமக்களின் வார்த்தைகளாக மாறினாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.

Also Read : டிபிஐ வளாகத்தில் அடுத்தடுத்து மயக்கமடையும் ஆசிரியர்கள்! தோல்வியில் முடிந்த அமைச்சர் பேச்சுவார்த்தை! முதலமைச்சர் தலையிட வலியுறுத்தல்!

ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்கவும், ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படவும் ஆவின் மீது சிறப்பு கவனம் செலுத்திட தமிழக முதல்வர் சாட்டையை சுழற்றினால் ஒழிய, பொதுமக்கள் மற்றும் பால் முகவர்கள் மத்தியில் ஆவினால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதை தடுக்க முடியாது என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

திமுக அரசு உடனடியாக விழித்துக் கொண்டு, அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தி மற்றும் ஆவின் பால் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால் பிழைத்துக் கொள்ளலாம். அல்லது 1000ம் ரூபாய் மகளிருக்கு கொடுத்து விட்டோம், அவ்வளவும் வாக்காக மாறும் என கனவு கண்டு நம்பிக் கொண்டிருந்தால் அது கானல் நீராகி வரும் காலங்களில் ஆட்சியை கோட்டை விடும் சூழலே உருவாகும் என்பதையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தில் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry