கேஸ் சிலிண்டர் டெலிவரி சார்ஜ் என்ற பெயரில் கொள்ளையோ கொள்ளை! தமிழ்நாட்டில் ரூ.95 கோடி, புதுச்சேரியில் ரூ.16 கோடி கூடுதல் வசூல்!

0
50

சமையல் கேஸ் டெலிவரி செய்யும்போது வற்புறுத்தி பெறப்படும் தொகை, நுகர்வோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பல கோடி ரூபாய் அளவுக்கு பெறப்படும் இந்தத் தொகையில், டீலர்களுக்கும் பங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

சமையல் கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டுக்கொண்டிருக்கிறது. 15 நாட்களில் ரூ.100 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.710 ஆகவும், புதுச்சேரியில் ரூ.706.50 ஆகவும் உள்ளது. கமர்ஷியல் சிலிண்டர் ரூ.1,446.50-க்கு விநியோகிக்கப்படுகிறது. பெருமுதலாளிகள் முதல், ஏழைகள், நடுத்தர மக்கள், சாதாரண டீ கடை வைத்திருப்பவர்கள் வரை, கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையில், இந்த விலையேற்றம் மக்களை நிலைகுலைய வைக்கிறது.

பழைய முறையே தேவை

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை வங்கியில் டெபாசிட் செய்யும் முறையை கொண்டுவந்தது.

ரூ.100-150 என செலுத்தப்பட்டு வந்த மானியத் தொகை, தற்போது ரூ.25 என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. பழைய முறைப்படி மானியத்தை கழித்துக்கொண்டு, சிலிண்டருக்கான தொகையை மட்டும் வசூலிக்க வேண்டும் என நுகர்வோர் வலியுறுத்துகின்றனர்.

எண்ணெய் நிறுவனங்கள் என்ன சொல்கின்றன?

விலை ஏற்றம், மானியக் குறைப்பு என அல்லாடும் நிலையில், சிலிண்டர் டெலிவரியின் போது வற்புறுத்தி பெறப்படும் தொகை, நுகர்வோரை பெரும் பணம் மற்றும் மனக்கஷ்டத்தில் ஆழ்த்துகிறது. எரிவாயு சிலிண்டரை டெலிவரி செய்யும் நபர், பில்லில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையைத் தாண்டி, டெலிவரி சார்ஜ் என, கூடுதலாக ரூ.40 – ரூ.100 வரை வசூல் செய்கிறார்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட வினியோக நிறுவனங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விசாரணையின்போது தெரிவித்தன.

இதுபற்றி நுகர்வோர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறும்போது, “பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்தத் தொகையில், டெலிவரி சார்ஜும் அடங்கும். எனவே, தனியாக எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களுக்கு அவரவர் பணி புரியும் ஏஜென்சிகள் கொடுக்கும் சம்பளத்தில் அந்த டெலிவரி தொகையும் அடங்கும்என்கின்றனர்.

கோடிகளில் கட்டாய வசூல்

சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் போது வற்புறுத்தி பெறப்படும் தொகையை கணக்கிட்டால் அதிர்ச்சி தருகிறது. ஒரு சிலிண்டருக்கு, சராசரியாக ரூ.40 கூடுதலாக கொடுப்பதாக வைத்து கணக்கிடலாம். ஒரு வருடத்துக்கு, ஒரு குடும்பம் 12 சிலிண்டர்கள் வாங்குவதாக இருந்தால், ரூ.480 தான் அதிகமாகத் தர நேரிடும். இது குறைந்த தொகையாகத் தெரியலாம்.

ஆனால், புதுச்சேரியில் சுமார் 4 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. ஒரு குடும்பம், ஒரு வருடத்துக்கு 12 சிலிண்டர்கள் வாங்குவதாக கணக்கிட்டால், மொத்தம் ரூ.16 கோடி கூடுதல் தொகை கொடுக்க வேண்டியிருக்கிறது. அதேபோல், தமிழ்நாட்டில் ஏறக்குறைய 2 கோடியே 38 லட்சம் இணைப்புகள் உள்ளன. இதன் மூலம் 95 கோடி ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இந்தத் தொகையில், சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுக்கும் பங்கு இருக்குமா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

ஏனென்றால், சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக, வினியோக நிறுவனங்களுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படுகிறது. அதாவது, எண்ணெய் நிறுவனங்கள், விநியோகஸ்தர்களுக்கு, ஒரு சிலிண்டருக்கு ரூ.61.84 காசுகள் கமிஷனாக கொடுக்கிறது. இதில் ரூ.27.60 காசுகள் டெலிவரி சார்ஜ் ஆகும். இந்தத் தொகையை, சிலிண்டர்களை டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல், வினியோக முகவர்கள் எடுத்துக் கொண்டு, டெலிவரிக்காக நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கும்படி, டெலிவரி மேன்களை நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது.

ஏஜென்சிகள் மீது குற்றச்சாட்டு

டெலிவரி மேன்களின் உழைப்பை குறைத்து மதிப்பிடுவது நமது நோக்கமல்ல. இதுபோன்ற கடினமான பணியைச் செய்யும் அவர்களுக்கு, சென்னை போன்ற பெரு நகரங்களில் மாதம் ரூ.10,000 வரையிலும், புதுச்சேரியில் ரூ.5,000-க்கு கீழேயும், ஏஜென்சிகள் ஊதியமாக கொடுப்பதாகத் தெரிகிறது.

அதேநேரம் ஊதியத்தை குறைத்து அதை ஈடுகட்ட நுகர்வோரிடம் வசூலித்துக்கொள்ளுமாறு, ஏஜென்சிகள் வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. நுகர்வோர் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் டெலிவரி சார்ஜ் அல்லது டிப்ஸ் கொடுக்கலாம். ஆனால் வற்புறுத்தி வாங்கக் கூடாது.

சிலிண்டர் டெலிவரியின்போது பணம் கொடுக்கத் தேவையில்லை என்பதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வாக ஏற்படுத்த வேண்டும். வற்புறுத்தி கேட்கும்போது, அதுபற்றி நுகர்வோர் புகார் தெரிவிப்பதற்காக உள்ள தொலைபேசி எண்களை விளம்பரப்படுத்த வேண்டும். பெட்ரோலியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், மத்திய பொட்ரோலிய அமைச்சகமும், எண்ணெய் நிறுவனங்களும் இந்தப் பிரச்சனைக்கு உரிய தீர்வைக் காண வேண்டிய அவசர, அவசிய தேவை ஏற்பட்டிருக்கிறது

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry