ஆட்டிப் படைக்கும் ஆவி உலகத் தலைவன் மாந்தி! சுப காரியத் தடைகளை ஏற்படுத்தும் சனியின் மகனுக்கு என்ன செய்யலாம்?

0
48
சனீஸ்வர பகவான்

ஆவி உலகின் தலைவனான மாந்தி என்றால் ‘குளிகன்’. சனிபகவானின் மகன், குளிகை நேரத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பதை கடந்த பதிவில் பார்த்தோம். இந்தப் பதிவில் மாந்தியின் புராண வரலாற்றையும், ஜோதிடத்தில் மாந்தியின் முக்கியத்துவத்தையும் தெரிந்துகொள்வோம்.

வான் மண்டலத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு துணைக் கோள் உள்ளது. பூமிக்கு, சந்திரன் துணைக் கோளாக (உப கிரகம்) இருப்பதைப் போல் புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன் (குரு) ஆகிய கிரகங்களுக்கும் ஒரு துணைக் கோள் (உப கிரகம்) உள்ளது. இதில், சனி கிரகத்திற்கு மாந்தி துணைக் கோள் என்று ஜோதிட சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

Also Read : குளிகை நேரத்தில் இத மட்டும் செஞ்சிருங்க..! அப்புறம் நீங்க டாப்தான்! Kuligai Neram is Good or Bad!

மாந்தியின் புராண வரலாறு :

சரி இனி மாந்தியின் பிறப்பு வரலாற்று கதைக்குள் செல்வோம். ராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்றிருந்தார். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில், ராவணன் தனது குல குருவைச் சந்தித்து, “யாராலும் வெல்ல முடியாத வீரமும், அறிவும் கொண்ட மகனே தனக்கு பிறக்க வேண்டும். அதற்கு என்ன வழி என்று கேட்டார்”. அதற்குப் பதிலளித்த குல குரு, “மகன் பிறக்கும் நேரத்தில் நவகிரகங்கள் அனைத்தும் ராசிக்கட்டத்தில் 11-ம் இடத்தில் இருந்தால், யாராலும் வெல்ல முடியாத மாவீரனாகத் திகழ்வார்” என்று யோசனை கூறினார்.

ராவணனோ, ராசிக்கட்டத்தை உருவாக்கி நவகிரகங்களையும் சிறைபிடித்து ஒரே கட்டத்தில் அடைத்து வைத்தார். “ராவணனே இந்தப் பாடுபடுத்தும்போது அவனுக்கு பிறக்கும் மகனும் பலசாலியாக இருந்துவிட்டால் என்ன செய்து?” என்று தவித்துப் போன நவகிரகங்கள், இந்த யோசனையை கூறிய குல குருவை கடிந்து கொண்டன.

மண்டோதரிக்கு பிரசவ வலி அதிகரித்தச் செய்தி நவகிரகங்களை சென்றடைந்தது. “குழந்தைப் பிறக்கும் நேரம் நவகிரகங்களாகிய நாம் ராசிக்கட்டத்தில் 11-ம் இடத்தில் சிறைபட்டு கிடக்கிறோம். இந்த நேரத்தில் ராவணன் எண்ணியதைப் போல் குழந்தை மாபெரும் பலசாலியாகவும், யாராலும் வெல்ல முடியாதவனாகவும் இருப்பான். அப்படி இருந்துவிட்டால் பெரிய சிக்கலை உண்டாக்கும்.” என்று நவகிரகங்கள் கவலைக்கொண்டன.

Also Read : பஞ்சாங்கம் என்றால் என்ன? எது சரியானது… திருக்கணிதப் பஞ்சாங்கமா, வாக்கியப் பஞ்சாங்கமா?

இதை எப்படி முறியடிப்பது என்று யோசித்த நவகிரகங்கள், சனிபகவானால் மட்டுமே இதற்குத் தீர்வு காணமுடியும் என எண்ணி அவரிடம் மன்றாடின. சாதுர்த்தியமாக செயல்பட்ட சனிபகவான், தனது உடலில் இருந்த வியர்வை மற்றும் அழுக்குகளை ஒன்று திரட்டி, உருண்டையாக்கி ராசிக்கட்டத்தின் 8ஆம் இடத்தில் விழச்செய்தார். அவரே மாந்தி (குளிகன்).

மாந்தி உதயமான அந்த நேரத்தில் ராவணனுக்கு ஒரு மகன் பிறந்து அவனுக்கு ‘மேகநாதன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. மாபெரும் பலசாலியாகவும், வீரனாகவும் மேகநாதன் திகழ்ந்தாலும், ராமபிரான் கையால் கொல்லப்பட்டார். நவகிரகங்கள் அனைத்தும் ராசிக்கட்டத்தில் 11-ம் இடத்தில் சிறைபட்டு கிடந்ததால் மாபெரும் வீரனாக திகழ்ந்த மேகநாதன், மாந்தி ஒருவர் 8-ம் இடத்தில் (ஆயுள் ஸ்தானம்) இருந்ததால் அற்ப ஆயுள் ஏற்பட்டது.

ஜோதிடத்தில் மாந்தியின் அவசியம் :

கேரள, ஆந்திர ஜோதிடர்கள் மாந்தியை வைத்து பலன் கூறுகிறார்கள். குறிப்பாக கேரள ஜோதிடர்களே மாந்திக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தமிழ்நாட்டு ஜோதிடர்கள் மாந்திக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தற்போது சிலர் மாந்தியை வைத்து பலன் கூறுகின்றனர். அதிலும் பிரசன்னத்தில் தோஷங்களை கண்டுபிடிக்க மாந்தி நிலை மிக முக்கியம்.

பிரேத தோஷம், பித்ரு தோஷம், பெண் சாபம் போன்றவற்றை மாந்தியைக் கொண்டே கண்டறிய முடியும். ஒருவருடைய ஜாதகத்தில் எத்தனை யோகங்கள்,  நற்பலன்கள் இருந்தாலும் அதை முடக்கி வைக்கும் சக்தி மாந்திக்கு உண்டு. ஒருவர் பல கோயில்களுக்கு சென்று பரிகாரங்கள் செய்தும், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால், அவர் மாந்தியின் பிடியில் சிக்கியுள்ளார் என்பதை நிச்சயம் அறியலாம்.

லக்னத்திற்கு 6, 8, 12-ல் சந்திரன் அமர்ந்து சந்திரனுடன் ஆவியுலக தலைவன் மாந்தி சேர்க்கை பெற்றால், ஜாதகர் துர் ஆவிகளால் பீடிக்கப்பட்டு மரண வேதனை அனுபவிப்பார். இதற்குப் பரிகாரம் என்று பார்த்தால், ஸ்ரீஆஞ்சநேய சுவாமியை வழிபட்டால், மாந்தியால் ஏற்படும் தோஷம் விலகும்.

தொடர்புக்கு:- ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர். ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.

ஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை 91590 13118 என்ற தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ் அப்பிலோ அல்லது astrovenkataeswar@gmail.com என்ற மெயிலுக்கோ அனுப்பினால், வரும் நாட்களில் வேல்ஸ் மீடியா இணைய இதழில் பதில்கள் வெளியாகும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry