அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்படிருந்த சீலை அகற்றக் கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தலைமை அலுவலகத்தின் சாவியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி, வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்துள்ளார்.
Also Read : கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து சிபிஐ விசாரணை! அரசு தயங்குவது ஏன் என ஜெயக்குமார் கேள்வி?
இந்த சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையை முடித்திருந்த நீதிபதி என்.சதீஷ்குமார், இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், “அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றவும், தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கவும் வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில் அதிமுக தலைமை அலுலகத்தில் தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அனுமதிக்கக் கூடாது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தேவையான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும்” என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு இபிஎஸ் தரப்புக்கு சாதகமாக வந்ததைத் தொடர்ந்து, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தின் முன் குவிந்த அவரது ஆதரவாளர்கள், உற்சாக முழகக்கங்களை எழுப்பினர். இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry