பெட்ரோல், டீசல் விலை எதிரொலி! ஆட்டோ கட்டணம் உயர்கிறது! ஐகோர்ட் உத்தரவு!

0
336

“பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும்” என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மளமளவென உயர்ந்து வருகிறது. சென்னையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த வேண்டும் என 2013ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், அதிக கட்டணம் வசூலித்து பயணிகள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க, ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது தொடர்பான அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், 2013ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி அனைத்து ஆட்டோக்களிலும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பிரிண்டர் பொருத்த அதிக செலவாகும் என்பதால் அதைப் பொருத்தவில்லை என்றும் தெரிவித்தார். இதை மறுத்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தியிருந்தாலும் அவை செயல்படுவதில்லை என்றும், ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகளிடம் தங்கள் விருப்பம் போலக் கட்டணம் வசூலிப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து, மீட்டர் பொருத்தியும் அதனை செயல்படுத்தாத ஆட்டோக்களை கண்டறிய போக்குவரத்து துறையும், காவல் துறையும் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயனடையும் வகையில் பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் எனவும், கட்டணங்களை மாற்றியமைக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்ளாமல், பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் தானாக மாறும் வகையில் மென்பொருளை பயன்படுத்தலாம் என்றும் அரசுக்கு யோசனை தெரிவித்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry