4 நாட்கள் தொடர் விடுமுறை! 1000 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு!

0
154

அடுத்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வருவதால், அதாவது வரும் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனக்கருதி 1000 சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டும், 15-ந் தேதி புனித வெள்ளி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவிற்காக அரசு விடுமுறையும், தொடர்ந்து 16 , 17 ஆம் தேதி சனி, ஞாயிறு என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. மேலும் 16-ந் தேதி சித்ரா பவுர்ணமி ஆகும்.

எனவே, கோயம்பேட்டில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 13-ந் தேதி வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் 500 பேருந்துகளும், 16-ந் தேதி சித்ரா பவுர்ணமி என்பதால் அன்று 500 பேருந்துகளும் இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. சித்ரா பவுர்ணமி தினத்தில் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியையொட்டி, கோயம்பேட்டில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 13-ந் தேதி கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விழுப்புரம், சேலம், கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகங்களின் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 16-ந்தேதி சித்ரா பவுர்ணமியையொட்டி விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் மட்டும் கூடுதலாக 500 பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து விடப்படுகிறது.

மேலும் இந்த சிறப்பு பேருந்துகள் விழுப்புரம், சேலம், வந்தவாசி, வேலூர், திருவண்ணாமலை, ஓசூர், கும்பகோணம், தஞ்சாவூர், நெய்வேலி, சிதம்பரம், கள்ளக்குறிச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு முன்பதிவு நடைபெற்று வருவாதகவும், மற்ற பேருந்துகளுக்கு முன்பதிவு தேவையில்லை என்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry