சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக்கூறி சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், “சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடவடிக்கையை விரைவுபடுத்த கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று அறநிலையத்துறைக்கு எதிராக சுகுமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை உதவி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், `கோயில் சொத்தை குத்தகைக்கு எடுத்திருந்த தனி நபர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Also Read : திமுக அரசு கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது! திராவிட மாடலுக்கு மூல காரணமே பாதிரியார்கள்தான்!
வழக்கை இன்று மீண்டும் விசாரித்த உயர் நீதிமன்றம், “நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கான காரணங்களை உதவி ஆணையர் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து உதவி ஆணையர் வருத்தம் தெரிவிக்காத நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது, இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry