குடியரசுத் தலைவர் குறித்து சர்ச்சை கருத்து! கொந்தளித்த பெண் அமைச்சர்கள்! பதிலுக்கு ஆவேசமான சோனியா!

0
143

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு கடந்த 25ம் தேதி பதவியேற்றார். நாட்டின் 15வது ஜனாதிபதியாகவும், பழங்குடி வகுப்பை சேர்ந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் திரெளபதி முர்மு பெற்றுள்ளார்.

இந்நிலையில் தான் திரெளபதி முர்மு குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்பியும், லோக்சபா காங்கிரஸ் குழு தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியது சர்ச்சையாகி உள்ளது. திரெளபதி முர்முவை ‘ராஷ்டிரபத்னி’ என அவர் கூறியுள்ளார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். மேலும் திரெளபதி முர்மு குறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்றம் மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் ஆக்ரோஷமாக பேசினார்.

அப்போது, ‛‛பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களை இழிவுப்படுத்தும் வகையில் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி பேசியுள்ளார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி உள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியினர் பெண்களை அவதூறாக பேசி வருகின்றனர். நீங்கள்(சோனியா காந்தி) திரெளபதி முர்முவை அவமானப்படுத்த அனுமதித்துள்ளீர்கள்‛‛ என கூறினார். மேலும் சோனியா காந்தியும் மன்னிப்பு கோர வேண்டும் என்ற வகையில் அவர் பேசினார்.

இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் சோனியா காந்திக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். பாஜகவினரும் பதில் கருத்து தெரிவித்தனர். இதனால் கருத்து மோதல் ஏற்பட்டு கூச்சல் நிலவியது. இதையடுத்து சிறிதுநேரம் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

Also Read : முதலைகள், புலிகள் கடிக்கும்! யானை மிதிக்கும்! சேற்றை வீசுவேன்..! பாஜகவுக்கு சாபம் விடும் மமதா பானர்ஜி!

இந்த ஒத்திவைப்பு நடவடிக்கைக்கு மத்தியில் சோனியா காந்தி, பாஜகவின் எம்பி ரமாதேவியை சந்தித்து பேசினார். அப்போது, ‛‛இந்த விஷயத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார். இதில் என்னை ஏன் இழுக்கின்றனர்” என கேள்வி எழுப்பினார். அப்போது ஸ்மிருதி இரானி குறுக்கீட்டு பேச முற்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சோனியா காந்தி, ‛‛என்னுடன் பேச வேண்டாம்” என மிகுந்த கோபத்துடன் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, குடியரசு தலைவரை அவமதிக்கும் எண்ணமில்லை, ‘ராஷ்ட்ரபத்னி’ என தவறுதலாக கூறிவிட்டேன் என  காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். வேண்டுமானால் என்னை தூக்கிலிடுங்கள்: சோனியாகாந்தியை ஏன் இதில் இழுக்க வேண்டும்? குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்க தயார்” என அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry