இந்தியாவின் சதுரங்க சக்தி தமிழகம்! சதுரங்க வல்லபநாதர் கோவிலை சுட்டிக்காட்டி பிரதமர் பேச்சு!

0
237

நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “மிகக் குறைந்த காலத்தில் ஒலிம்பியாட்டுக்கு மிகச் சிறந்த ஏற்பாடுகளை நாம் செய்துள்ளோம். விருந்தினர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்ற நம்பிக்கை இந்தியாவின் சிறப்பம்சமாகும். உலகின் பழமையான மிகச் சிறந்த வரலாற்றை கொண்டது தமிழகம்.

இயற்கையாகவே தமிழ்நாடு செஸ் விளையாட்டுடன் தொடர்பு கொண்டது. விருந்தோம்பல் குறித்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கூறியுள்ளார்.

‘இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு’

இந்தியர்கள், விருந்தினர்களை கடவுளாக கருதுபவர்கள். இந்தியாவில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். சதுரங்கத்தின் தாயகமான இந்தியாவிற்கு மிகவும் பெருமைமிகு சதுரங்கப் போட்டி வந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையில், நாடுகள், அணிகள் பங்கேற்கின்றன. மிக அதிக எண்ணிக்கையில் பெண்கள் பிரிவிலும் பங்கேற்பு உள்ளது.

இப்போது முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்துடன் தொடங்கியுள்ளது. தொடர் ஓட்டம் இந்தியாவிலிருந்து தொடங்குவது பெருமைக்குரிய விஷயமாகும். 75வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி 75 நகரங்களுக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்றது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பல முதன்மைகளையும், பதிவுகளையும் கொண்டுள்ளது.

சதுரங்கத்தின் பிறப்பிடமான இந்தியாவில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடத்தப்படுகிறது. 30 ஆண்டுகளில் முதல் முறையாக இது ஆசியாவுக்கு வந்துள்ளது.
தமிழகம் சதுரங்கத்துடன் வலுவான வரலாற்றுத் தொடர்பைக் கொண்டுள்ளது. இதனாலேயே இது இந்தியாவின் சதுரங்க சக்தியாக விளங்குகிறது.

இந்தியா பல செஸ் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியுள்ளது. இது சிறந்த மனம், துடிப்பான கலாசாரத்தின் பிறப்பிடமாக உள்ளது. உலகின் பழமையான மொழி தமிழ். விளையாட்டு என்பது மிகவும் அழகானது. ஏனெனில் அனைவரையும் ஒன்றிணைக்கும் அற்புத சக்தியை கொண்டிருக்கிறது. விளையாட்டுக்கள் மக்களையும், சமூகங்களையும் நெருக்கமாக்குகிறது. விளையாட்டுக்கள் கூட்டுணர்வை வளர்க்கிறது.

இந்தியாவில் தற்போது இருப்பதைவிட சிறப்பான நேரம் முன் எப்போதும் இருந்தது இல்லை என்பதை பகிர்ந்துகொள்ள நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒலிம்பிக், பாராலிம்பிக், டெஃப்லிம்பிக், ஆகியவற்றில் இந்தியா தனது சிறப்பான செயல்களை வெளிப்படுத்தியது.
நமது கலாசாரத்தின் விளையாட்டுக்கள் தெய்வீகமாக கருதப்படுவதால் அழகிய சிற்பங்களுடன் தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்கள் பல விளையாட்டுக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன. குறிப்பாக திருப்பூவனூரில் சதுரங்க வல்லபநாதர் கோவில் உள்ளது. (தேவாரப் பாடல் பெற்ற தலம், திருவாரூர் மாவட்டம். நீடாமங்கலம் – மன்னார்குடி சாலையில் பூவனூரில் இறங்கி இக்கோவிலுக்குச் செல்லலாம்.)

எனவே 44-வது செஸ் ஒலிம்பியாட் இங்கே நடைபெறுவது மிகவும் பொருத்தமானது.
விளையாட்டுக்கள் அழகானவை, அனைவரையும் ஒன்றுபடுத்தும் அற்புதமான சக்தியை அது கொண்டிருக்கிறது. நாம் ஒன்றுபட்டு இருக்கும்போது நாம் வலுவாக இருக்கிறோம். நாம் ஒன்றுபட்டு இருக்கும்போது நாம் சிறப்பாக இருக்கிறோம். விளையாட்டுக்கள் மூலம் இது நிகழ்கிறது.

விளையாட்டில் திறமையை ஊக்கப்படுத்துவதும் விளையாட்டுக்கான அடிப்படைக் கட்டமைப்பில் முதலீடு செய்வதும் முக்கியமானது. விளையாட்டில் தோற்றவர்கள் இல்லை. இங்கே வெற்றியாளர்களும் இருக்கிறார்கள், எதிர்கால வெற்றியாளர்களும் இருக்கிறார்கள். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு இங்கு கூடியிருக்கும் அனைத்து அணிகள் மற்றும் வீரர்களுக்கு எனது வாழ்த்துகள்” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry