மொத்த உறுதிமொழியும் சமஸ்கிருதத்தில் வாசித்ததாக தவறாக புரிந்துக்கொண்டு என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, என்னிடம் வாய் மொழியாகக் கூட எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை என்று மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் ரத்னவேலு குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை மருத்துவ கல்லூரியில் நேற்று முன் தினம் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, ஆட்சியர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், 2018ஆம் ஆண்டு மாணவர்கள் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்நிலையில், பாரம்பரிய ஹிப்போகிராடிக் உறுதிமொழிக்கு பதிலாக, தேசிய மருத்துவ கமிஷன் பரிந்துரைத்த, ‘மகரிஷி சரக் சபத்’ என்ற சமஸ்கிருத வாக்கிய உறுதிமொழியை ஆங்கிலத்தில் மாணவர்கள் எடுத்துள்ளனர். இதையடுத்து மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டாக்டர் ரத்தினவேலு, எப்போதும் மாணவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர்கள். அதன்படியே, இந்த நிகழ்வையும் மாணவர் செயலரே ஒருங்கிணைத்தார். அதன்படி, தேசிய மருத்துவ ஆணைய இணையதளத்தில் இருந்த அந்த ‘மகரிஷி சரக் சபத்’ என்ற வாக்கியம் அடங்கிய உறுதிமொழியை எடுத்து வாசித்திருக்கின்றனர்.
அதுவும் சமஸ்கிருதத்தில் வாசிக்கப்படவில்லை. ஆங்கிலத்திலேயே அந்த உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இங்கு யாருக்கு சமஸ்கிருதம் படிக்கவோ, புரிந்துகொள்ளவோ தெரியும் ? அதோடு, அவர்கள் இந்த உறுதிமொழியை படித்த பிறகுதான் எனக்கே தெரியும். அதுவரை எனக்கு இதைதான் படிக்கப்போகிறார்கள் என்று கூட தெரியாது. நான் ஒருபோதும் ஹிப்போகிராடிக் உறுதி மொழிக்கு பதிலாக, ‘மகரிஷி சரக் சபத்’ என்ற சமஸ்கிருத வாக்கியம் கொண்டு உறுதி மொழியை வாசிக்க வேண்டும் என்று சொல்லவில்லை; அது பற்றி எனக்கு உண்மையிலேயே தெரியாது.
இது பற்றி என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல், சமஸ்கிருதத்திலேயே முற்றிலும் உறுதிமொழி வாசிக்கப்பட்டதாக நினைத்து என் மீது நடவடிக்கை எடுத்துவிட்டார்கள். யார், இதை எப்படி மருத்துவ அமைச்சருக்கும் மருத்துவ கல்வி இயக்கத்திற்கும் கொண்டு போய் சேர்த்தார்கள் என்பது தெரியவில்லை.
என்னிடம் வாய் வார்த்தையாகக் கூட எதுவும் கேட்காமல், எந்த விசாரணையும் செய்யமல், தவறான புரிதலின் அடிப்படையில் என் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். சனிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது, ஞாயிற்றுக் கிழமை மதியம் என்மீதான நடவடிக்கை ஆர்டர் கொடுத்துவிட்டார்கள். முதலமைச்சர் இதை கவனித்து, உண்மையை கண்டறிந்து என் மீதான நடவடிக்கையை திரும்ப பெறவேண்டும் என டாக்டர் ரத்தினவேலு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமரவேல் மற்றும் மாணவர்கள் அளித்துள்ள விளக்கத்தில், “ஆங்கில மொழிபெயர்ப்பில் மட்டுமே உறுதிமொழி எடுத்தோம். 2019 ஆம் ஆண்டு முதல் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்திய வழிகாட்டு நடைமுறைபடியே நாங்கள் அப்படி வாசித்தோம். சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை.
எந்த மொழியில் உறுதிமொழி ஏற்க வேண்டுமென எந்த வழிகாட்டுதலும் இல்லை -மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள். #MaduraiMedicalCollege @CMOTamilnadu @drrathinavel @EPSTamilNadu @annamalai_k @drramadoss @SeemanOfficial @DrKrishnasamy @Selvakumar_IN @raaga31280 @Pandidurai274 @DrTamilisaiGuv pic.twitter.com/cmVlFACHFB
— VELS MEDIA (@VelsMedia) May 2, 2022
தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்திய வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்ததன் அடிப்படையில் வாசிக்கப்பட்ட உறுதிமொழி அது. அதில் எந்தவித உள் நோக்கமும் கிடையாது. முழுக்க முழுக்க மாணவர்கள் தயாரித்த உறுதிமொழி அது. அவசர கதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் டீன் ரத்தினவேல் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. உறுதிமொழி ஏற்பு விவகாரத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. முழுக்க மாணவர்கள் தயாரித்த நிகழ்வு அது” என்று கூறியுள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry