மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்! அதிர்ச்சியான ஏ.ஆர்.ரஹ்மான்! ‘இரவின் நிழல்’ விழாவில் பரபரப்பு!

0
331

‘இரவின் நிழல்’ படத்தின் முதல் பாடல் வெளியிட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் திடீரென தான் வைத்திருந்த மைக்கை தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் பார்த்திபன் இயக்கி கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ‘இரவின் நிழல்’. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இரவின் நிழல் Non Linear முறையில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படமாகும். இப்படத்தில் ஆஸ்கர் வின்னர்கள் கட்டா லங்கோ லியோன்ர் விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளராகவும், கிரைக் மான் சவுண்ட் டிசைன் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஏ.ஆர் ரஹ்மானுடன் சேர்த்து மொத்தம் மூன்று ஆஸ்கர் வின்னர்கள் இப்படத்தில் பணியாற்றி உள்ளார்கள்.

இந்த படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியின் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடகி ஷ்ரேயா கோஷல் குரலில் உருவாகியுள்ள ‘மாயவா சாயவா’ எனும் பாடலை இயக்குநர் பார்த்திபன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் சமுத்திரகனி, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குநர் கரு பழனியப்பன் மற்றும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபனா சந்திரசேகர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இரவின் நிழல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். நிகழ்ச்சியில் மேடையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்க்கு நினைவு பரிசாக அவரது தாய் மற்றும் தந்தை உருவப்படம் பதிக்கப்பட்டுள்ள இசை வடிவ கேடயத்தை இயக்குநர் பார்த்திபன் வழங்கினார். பின்னர் பார்த்திபன் மகள் கீர்த்தனா தொடங்கியுள்ள ‘த்வனி ‘இசை நிறுவனத்தின் இலச்சினையை ரஹ்மான் வெளியிட்டார்.

விழாவில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ”பார்த்திபனுடன் படம் பண்ணனும் என்பது, எனக்கு ரொம்ப நாள் ஆசை. தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் வந்து இந்த மாதிரியான ஒரு படம் பண்ணுவது மிகவும் கடினம். ஆனால் நம்ம ஊர்ல எல்லாருக்கும் எல்லா திறமையும் உள்ளது. இதே படத்தை யூரோ மற்றும் அமெரிக்காவில் எடுத்திருந்தால் உலகமே பாராட்டி இருக்கும். தமிழ்நாட்டில் எடுத்திருக்கிறோம் பார்ப்போம்” என்றார்.

இயக்குநர் பார்த்திபன் பேசுகையில், ”ஏ.ஆர்.ரஹ்மானுடன் படம் பண்ண வேண்டும் என்பது 20 ஆண்டுகால கனவு. ஒரு படத்தில் ஒப்பந்தமாகி கடைசியில் அந்த படத்தில் இணைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஜூன் 5-ம் தேதி இரவும் பகலும் படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது” என்றார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பார்த்திபன் கலந்துரையாடினார். அப்போது, பார்த்திபன் பயன்படுத்திய மைக் திடீரென வேலை செய்யவில்லை. இதனால் கோபம் அடைந்த பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்தார். அது ரோபோ சங்கர் மேல் விழுந்தது. இதை எதிர்பார்க்காத ஏ.ஆர்.ரஹ்மான் சற்றே அதிர்ச்சி அடைந்தார். அவரை ரஹ்மான் சமாதானப்படுத்தினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry