பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் இந்த மாதத்திற்கான மனதின் குரல் (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு ஒலிபரப்பானது. இது 89-வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும்.
இதில் பேசிய பிரதமர் மோடி, “சில நாட்களுக்கு முன்பாகத் தான் தேசம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறது, இது நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்லது. பாரதத்தின் திறமைகள் மீதான ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது. இந்த மாதம் 5ஆம் தேதியன்று தேசத்தின் யூனிகார்ன்களின் எண்ணிக்கை 100 என்ற எண்ணிக்கையை எட்டி விட்டது.
ஒரு யூனிகார்ன் என்பது குறைந்தபட்சம் 7500 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்டார்ட் அப் ஆகும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த யூனிகார்ன்களின் மொத்த மதிப்பு 330 பில்லியன் டாலர்கள் ஆகும், அதாவது 25 இலட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமானது. இந்த விஷயம் ஒவ்வொரு இந்தியருக்கும் கண்டிப்பாகப் பெருமிதம் அளிக்கவல்லது.
நம்மிடத்திலே மொத்தம் 44 யூனிகார்ன்கள் கடந்த ஆண்டு உருவானது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இது மட்டுமல்ல, இந்த ஆண்டில் 3-4 மாதங்களிலே, மேலும் 14 புதிய யூனிகார்ன்கள் உருவாயின. இதன் பொருள் என்னவென்றால் உலகளாவிய பெருந்தொற்று என்ற இந்த காலகட்டத்திலும் கூட, நமது ஸ்டார்ட் அப்புகள், செல்வத்தையும், மதிப்பையும் உருவாக்கிக் கொண்டே வந்திருக்கின்றன. இந்திய யூனிகார்ன்களின் சராசரி வருடாந்தர வீதம், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பிற நாடுகளை விடவும் அதிகமானது.
இனிவரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு இருக்கும் என்பது ஆய்வாளர்களின் முடிவு. பாரதத்தின் ஸ்டார்ட் அப் சூழலமைப்பு பெருநகரங்களோடு மட்டுமே நின்று விடவில்லை. சின்னச்சின்ன நகரங்கள், பகுதிகளிலிருந்தும் கூட தொழில்முனைவோர் முன்வருகிறார்கள்.
ஸ்டார்ட் அப்புகளை முன்னே கொண்டு செல்லும் பொருட்டு, தங்களையே அர்ப்பணித்திருக்கும் பல வழிகாட்டிகள் பாரதத்திலே இருக்கிறார்கள் என்பது எனக்கு பெருமிதம் தரும் விஷயம்.
ஸ்ரீதர் வேம்பு அவர்களுக்கு இப்போது தான் பத்ம விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. அவர் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோர் தான் என்றாலும், தற்போது, மேலும் பல தொழில் முனைவோர்களை உருவாக்குவது என்ற சவாலை அவர் மேற்கொண்டிருக்கிறார்.
ஸ்ரீதர் அவர்கள் தனது பணியை ஊரகப் பகுதியிலே தொடங்கியிருக்கிறார். அவர் கிராமங்களிலேயே வசித்திருந்து, ஊரகப் பகுதி இளைஞர்களை, இந்தப் பகுதியில் பங்களிப்பு அளிக்கும் வகையில் உற்சாகப்படுத்தி வருகிறார். நமது நாட்டிலே மதன் படாகீ போன்றவர்களும் கூட, ஊரகப்பகுதி தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும் பொருட்டு 2014இலே One Bridge என்ற பெயருடைய தளத்தை உருவாக்கினார்.
மீரா ஷெனாய் அவர்களும் கூட இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டுத் தான். நான் இங்கே சில பெயர்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன், ஆனால், இன்று நம்மிடையே வழிகாட்டிகளுக்குக் குறைவே கிடையாது. தேசம் முழுக்க முழு அளவிலான ஒரு ஆதரவு அமைப்பு தயாராகி வருகிறது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயம். இனிவருங்காலத்திலே, பாரதத்தின் ஸ்டார்ட் அப் உலக முன்னேற்றத்தின் புதிய முன்னோக்கிய பாய்ச்சலை நாம் காண்போம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
சில நாட்கள் முன்பாக இதே போன்ற ஒரு சுவாரசியமான, கவர்ச்சிகரமான விஷயத்தைப் பார்க்க நேர்ந்தது, இதிலே நாட்டுமக்களின் படைப்புத் திறன், கலைத்திறன் ஆகியவை பளிச்சிட்டது. தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு சுய உதவிக் குழுவானது எனக்கு ஒரு பரிசினை அனுப்பி இருக்கிறது. இந்தப் பரிசினிலே பாரத நாட்டின் மணம் வீசுகிறது. தாய்மை சக்தியின் ஆசிகள் நிரம்பியிருக்கின்றன. என் மீது அவர்கள் கொண்டிருக்கும் நேசமும் பாசமும் கனிவை ஏற்படுத்துகின்றன. அது ஒரு சிறப்பான தஞ்சாவூர் பொம்மை, புவிசார் குறியீடு கூட இதற்குக் கிடைத்திருக்கிறது.
வட்டார கலாச்சார மணம் வீசும் பரிசினை எனக்கு அனுப்பியமைக்கு, நான் தஞ்சாவூர் சுயஉதவிக் குழுவிற்கு என் சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தஞ்சாவூர் பொம்மை எத்தனை அழகானதாக இருக்கிறதோ, அத்தனை அழகானது, பெண்களின் அதிகாரப் பங்களிப்பின் புதிய காதை. தஞ்சாவூர்ப் பெண்களுடைய சுயஉதவிக் குழுக்கள் ஒரு அங்காடியையும், ஒரு சிறுகடையையும் திறந்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சிறுகடை, அங்காடி வாயிலாக, தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் இந்தப் பெண்களால் நேரடியாகக் கொண்டு சேர்க்க முடிகிறது. இந்த முயல்விற்கு, தாரகைகள் கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடி என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த முயற்சியோடு 22 சுயஉதவிக் குழுக்கள் இணைந்திருக்கின்றன என்பது தான். இந்த மகளிர் சுயவுதவிக் குழுக்கள், பெண்களின் சுயசேவை சமூகமே நடத்தும் இந்த அங்காடியை, தஞ்சாவூரின் பிரதானமான இடத்திலே திறந்திருக்கின்றார்கள்.
இதன் பராமரிப்புப் பொறுப்பு முழுவதையுமே கூட இந்தப் பெண்களே ஏற்றிருக்கின்றார்கள். இந்தப் பெண்கள் சுயஉதவிக் குழு, தஞ்சாவூர் பொம்மை, வெண்கல விளக்கு போன்ற புவிசார் குறியீட்டுப் பொருட்களைத் தவிர, பிற பொம்மைகள், தரை விரிப்புகள், செயற்கை நகைகள் ஆகியவற்றையும் கூட தயாரிக்கிறார்கள்.
ஒரு கடையின் மூலமாக புவிசார் குறியீட்டோடு, கைவினைப் பொருட்களின் விற்பனையில் கணிசமான முன்னேற்றம் காணக் கிடைக்கிறது. இந்த முயல்வு காரணமாக, கைவினைஞர்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களின் வருவாயும் அதிகரிப்பதால் அவர்களின் அதிகாரப் பங்களிப்பும் ஏற்படுகிறது. மனதின் குரல் நேயர்களே, உங்கள் பகுதியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் யாராவது பணியாற்றி வருகிறார்களா என்று நீங்களும் ஆராய்ந்து பாருங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அவர்களின் விற்பனைப் பொருட்கள் பற்றிய தகவல்களைச் சேகரியுங்கள், இப்படிப்பட்ட பொருட்களின் பயன்பாட்டை அதிகப்படுத்துங்கள். இப்படிச் செய்வதால், நீங்கள் சுயஉதவிக் குழுக்களுடைய வருமானத்தை அதிகரிக்க உதவுவதோடு, தற்சார்பு பாரத இயக்கத்திற்கும் வேகமளிப்பீர்கள்.
சமீபத்தில் நான் ஜப்பான் சென்றிருந்தபோது இந்தியாவின் மீது அபரிமிதமான அன்பு கொண்ட ஜப்பானின் சில அற்புதமான ஆளுமைகளைச் சந்தித்தேன். அவர்களில் ஒருவர் ஹிரோஷி கொய்கே ஜி என்கிற ஒரு கலை இயக்குனர். அவர் மகாபாரதம் திட்டத்தை இயக்கியவர். இது இந்தியா, கம்போடியா மற்றும் இந்தோனேசியா உள்பட 9 நாடுகளில் நிகழ்த்தப்பட்டது.” மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் இவ்வாறு அவர் பேசினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry