NEETஐ எதிர்த்துக்கொண்டு TET தேர்வு நடத்துவது சரியா? டெட் தேர்வில் வென்றவர்களுக்கு போட்டித் தேர்வு வைப்பதுதான் சமூக நீதியா? வேல்ஸ் பார்வை!

0
516

தமிழ்நாட்டில் கட்சி பேதமின்றி டெட் தேர்வை வரவேற்பவர்கள், நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். TET (Teachers Eligibility Test) தகுதித் தேர்வானது மத்திய அரசு சொல்லி மாநில அரசால் நடத்தப்படுவது. NEET (National Eligibility cum Entrance Test) தகுதித் தேர்வு மத்திய அரசால் நடத்தப்படுவது. இரண்டுமே தகுதித்தேர்வு எனும்போது, எதனால் இந்த முரண்?

1976-ம் ஆண்டு நெருக்கடிநிலை அமலில் இருந்த காலக்கட்டத்தில், மாநிலப்பட்டியலில் இருந்த கல்வி, பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதன்படி கல்வியில் தரத்தை உருவாக்குவதற்கான காரணிகளை கண்டறிந்து, அதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது.

மத்தியில் காங்கிரஸ் – திமுக கூட்டணியில் இருந்தபோது 2010 டிசம்பர் 27-ல் நீட் தேர்வு அரசிதழில் வெளியானது. 2016-ல் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் நீட்-இல் இருந்து தற்காலிக விலக்குக் கோரி அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 254ன் படி மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்கியது. இந்த விலக்கு ஓராண்டுக்கு மட்டுமே பொருந்தும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 2017ல் தமிழக அரசு மீண்டும் அதே பிரிவில் விலக்குக் கோரிய போது, உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசியத் தேர்வு முகமை, நீட் தேர்வை நடத்தி வருகிறது. நீட் வருவதற்கு முன்பாக, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் விருப்பத்துக்கு நுழைவுத் தேர்வை நடத்தின. இதையேற்பவர்கள், நீட் தேர்வு கூடாது என்கின்றனர். அப்படியானால், ஆசிரியர் தகுதித் தேர்வும் கூடாதுதானே?

2009ல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 01-04-2010ல் அமலுக்கு வந்தது. இதன்படி, இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும், தேர்வை அந்ததந்த மாநிலங்களே நடத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. 2012-ல் தொடங்கி ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) மூலம் டெட் தேர்வை தமிழக அரசு நடத்துகிறது.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் நடப்படும். ஆனால், மத்திய அரசு வழிகாட்டுதலில் மாநில அரசு நடத்தும் டெட் தேர்வு, கடந்த 10 ஆண்டுகளில் 6 முறைதான் நடந்துள்ளது. திமுக அரசு தற்போது டெட் தேர்வு நடத்துகிறது. 1 – 8ம் வகுப்பு வரை போதிக்கும் ஆசிரியர்கள் டெட் மூலம் தேர்வாகிறார்கள். வினாத்தாள் மிகக்கடினமாகவே தயார் செய்யப்படுவதால் தேறுவது அவ்வளவு எளிதல்ல. தேர்ச்சி என்பது 1 – 2% வரையே இருக்கும்.

டெட்-இல் தகுதி பெற்றாலும் பணி கிடைத்துவிடுமா? என்றால், இல்லை. டெட் தேர்வில் தகுதி பெற்ற பிறகு, தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பணி ஆணையைப் பெற முடியும். இப்படி இரண்டு படிநிலைகளில் வடிகட்டியப்பிறகே ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். டெட்-இல் தகுதி பெற்றாலும் தமிழக அரசின் போட்டித் தேர்வால் பலருக்கு பணி வாய்ப்பு பறிபோகிறது. மூப்பு அடிப்படையில் பணி கிடைப்பதும் தடைப்படுகிறது.

டெட் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “மாணவர்களுக்குத் தரமான கல்வியை போதிக்க, ஆசிரியர்கள் அனைத்து வகையிலும் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் தரத்தை சோதிக்கவே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது” என்று கூறியது. இதன் மூலம் தரமான ஆசிரியர்களை தேர்வு செய்வதில் அரசும், நீதிமன்றமும் கண்டிப்புடன் உள்ளன.

ஆசிரியர்களை தேர்வு செய்ய மட்டும் இந்தக் கண்டிப்பு போதுமா? மருத்துவத்துக்கு வேண்டாமா? மருத்துவர்களை நோயாளிகள் கடவுளாக பாவிப்பார்கள். தங்கள் உயிரை மருத்துவரை நம்பி ஒப்படைப்பார்கள். இப்படியான சேவையைச் செய்யப்போகும் ஒருவரின் தரத்தை சோதிப்பது எப்படித் தவறாகும்? நீட் வருவதற்கு முன்பு படித்துப் பணியில் இருக்கும் மருத்துவர்கள் திறமையில்லாதவர்களா? என விதண்டாவாதம் பேசுவோர் உண்டு. அப்படியானால், டெட் தேர்வில் தகுதி பெற்று, போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு முன்பிருந்தவர்கள், பாண்டித்தியம் பெறாத ஆசிரியர்களா?

2011க்கு முன்பாக நியமிக்கப்பட்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத சுமார் 10,000 ஆசிரியர்கள் பணியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என தமிழ்நாடு அரசும், உயர் நீதிமன்றமும் ஒருசேரக் கூறுகிறது; இதே அக்கறை நீட் விவகாரத்திலும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது இயல்புதானே? மத்திய அரசு சொல்லி நடக்கும் டெட் தேர்வில் தகுதி பெற்றாலும், கூடவே போட்டித்தேர்வையும் வைத்து மேலும் வடிகட்டுவது தமிழ்நாடு அரசுதானே?

உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியுள்ள நீட் தேர்வை எதிர்த்து, சட்டமன்றம் தொடங்கி, பல வடிவங்களில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், நீட் தேர்வு வேண்டாம் அல்லது தமிழ்நாட்டுக்கு விலக்குக் கொடுங்கள் என உச்ச நீதிமன்றத்தை நாட ஆளும் அரசு தயங்குகிறது. டெட் தேர்வை எதிர்த்து ஆண்ட கட்சியோ, ஆளும் கட்சியோ குரல் கொடுக்கவில்லை. டெட் தேர்வு வேண்டாம் என சட்டப்போராட்டம் நடத்தவில்லை.

12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைக்கும் அரசியல் கட்சிகள், வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையிலேயே ஆசிரியர்களையும் நியமிக்க அரசை வற்புறுத்தலாமே? எதற்காக டெட்-இல் தகுதி பெறுவோருக்கு மாநில அரசு போட்டித் தேர்வை நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றால்தான் பணிநியமனம் என்ற கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும்? இந்த 2 படிநிலைத் தேர்வுகளையும் எதிர்ப்பதுதானே நியாயமாக இருக்க முடியும். எனவே, நீட் போலவே, டெட் தேர்வில் இருந்தும் தமிழகத்துக்கு விலக்கு பெற தமிழக அரசு உரத்த குரல் எழுப்ப வேண்டும்.

– கட்டுரையாளர் : நடுநாட்டான், பத்திரிகையாளர், எழுத்தாளர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry