அதலபாதாளத்தில் கிரிப்டோ வர்த்தகம்! கறுப்புப் பணத்தை முதலீடு செய்தவர்கள் தவிப்பு!

0
500

கிரிப்டோ கரன்சிகள் அதல பாதாளத்துக்குச் சரிந்திருக்கிறது. பிட்காயின் மதிப்பு 6 மாதங்களுக்கு முன்னர் ரூ.50 லட்சத்தை தாண்டியிருந்தது. மே 26-ம் தேதி இதன் மதிப்பு ரூ. 23.08 லட்சங்களாக சரிந்துள்ளது. பிட்காயின் மட்டுமன்றி மேலும் பல செல்வாக்கான கிரிப்டோகரன்சிகள் அவற்றின் மதிப்பில் பாதிக்கும் மேலாக வீழ்ந்துள்ளன.

2 ஆண்டுகளாக எதிர்பார்ப்புகளை விதைத்த பல கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு மைனஸில் சரிய, பல்வேறு நாடுகளின் கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகள் அவற்றைப் பரிவர்த்தனைக்கான பட்டியலில் இருந்தே நீக்கியுள்ளன. இதனால் அந்த கிரிப்டோவில் முதலீடு செய்தவர்களின் சொத்துகள் மாயமாகி உள்ளன. லுனா என்ற கிரிப்டோவின் மதிப்பு கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகிவிட்டது.

உலகளவில் கிரிப்டோ கரன்சிகள் சந்தித்துள்ள சரிவோடு ஒப்பிடும்போது இந்தியாவில் அதில் முதலீடு செய்த பலரும் தப்பித்திருக்கிறார்கள். இதற்காக மத்திய அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள். கிரிப்டோகரன்சி முதலீட்டில் கிடைக்கும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரியுடன், பரிவர்த்தனைகளுக்கு தலா 1 சதவீதம் டிடிஎஸ் விதிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புகளால், சாமானிய கிரிப்டோ முதலீட்டாளர்கள், சரிவு தொடங்கும் முன்பாகவே வெளியேற தொடங்கினர்.

கருப்புப் பணத்தை முசலீடு செய்துவிட்டு வெளியேற முடியாதவர்கள் தற்போது தவித்து வருகிறார்கள். ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் சுமார் 20 லட்சம் பேர் ஈடுபட்டிருக்கும் இந்திய கிரிப்டோ சந்தையின் பாதிப்பு குறித்த துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை.

நவம்பரில் கிரிப்டோகரன்சிகள் அவற்றின் வரலாற்று உச்சத்தை தொட்டபோதே, அடுத்தக்கட்ட சரிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டன. கிரிப்டோகரன்சி சந்தையின் வீழ்ச்சியை, இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அடையாளம் காணப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முன்கூட்டியே அறிவித்தார். அதன்படியே கிரிப்டோ உலகம் ஏப்ரல், மே மாதங்களில் சரிவை சந்தித்துள்ளது. “கிரிப்டோகரன்சி சந்தை விரைவில் வீழும்; ஆனால், அது பங்கு சந்தையை பாதிக்காது” என்றும் அவர் கணித்திருந்தார்.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

கிரிப்டோகரன்சி சந்தை வீழ்ச்சிக்கு ஒழுங்குமுறை அமைப்போ, மைய அதிகாரமோ இல்லாததும் ஒரு காரணமாகும். சிறிய காரணிகளுக்குக்கூட பெரிதாய் எதிர்வினையாற்றும் பெரும்பாலான கிரிப்டோ கரன்சிகள் மீண்டும் இயல்புக்குத் திரும்புவதும் கேள்விக்குறியாகி உள்ளது. கிரிப்டோகரன்சி சகாப்தத்துக்கு இதுதான் முடிவு எனவும் சொல்லிவிட இயலாது. கிரிப்டோ உலகின் கட்டமைப்பு குறித்து மீளாய்வு செய்ய இந்த சரிவு தூண்டுகோலாகி இருக்கிறது.

‘கிரிப்டோகரன்சிக்கு என உலகளாவிய ஒழுங்குமுறை அமைப்பை நிறுவ வேண்டும், சந்தையின் போக்கினை கணிக்கும் தொழில் நுட்பங்கள் பரவலாக்கப்பட வேண்டும், பிரமிட் வர்த்தகம் போன்ற மோசடியான உள்ளடிகள் தவிர்க்கப்பட வேண்டும்’ உள்ளிட்ட நெடுநாள் கோரிக்கைகள் இந்த இக்கட்டான சூழலை உரசியதாய் உரத்து ஒலிக்கின்றன. இவை கிரிப்டோ சேமிப்புகள், முதலீடுகள் மற்றும் பரிவர்த்தனைகளில், தொலைநோக்கின் அடிப்படையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry