தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது..! ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை தேவை! மாயாவதி ஆவேசம்! சிபிஐ விசாரணைக்கு திருமாவளவனும் ஆதரவு!

0
156
Bahujan Samaj Party (BSP) chief Mayawati pays her last respects to the mortal remains of party leader K. Armstrong, who was hacked to death by a six-member gang, in Chennai, Sunday. Credit: PTI Photo

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருப்பதையே காட்டுகிறது. இந்தச் சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆகையால் சிபிஐ விசாரணை தேவை என சென்னையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டின் அருகே கடந்த 5 ம் தேதி மாலை 6 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக முதல்கட்டமாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் தம்பி உட்பட 8 பேர் சிறையில் அடைக்கப்படுள்ளனர். மேலும் 3 பேரை கைது செய்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதேப் பரிசோதனைக்குப் பிறகு ஆம்ஸ்ட்ராங் உடல் பெரம்பூர் பந்தர்கார்டன் பள்ளியில் வைக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

கே. ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று காலை 10.50 மணி அளவில் பந்தர்கார்டன் பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், ”புத்தர் காட்டிய மனிதாபிமானப் பாதையில் பயணித்தவர் ஆம்ஸ்ட்ராங். அவர் அவரது வீட்டுக்கு அருகேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தத் துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனைடைந்தேன். இது தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருப்பதையே காட்டுகிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இத்தருணத்தில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு தமிழக அரசு பாதுகாப்புத் தர வேண்டும்.

இந்தக் கொலை தொடர்பாக கைதானவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்ற தகவல் கிடைத்துள்ளது. எனவே, இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. இந்தக் கொலையில் மாநில அரசுக்குத் தொடர்பு இல்லை என்றால், மாநில அரசு இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். சட்டம் தன் கடமையை செய்யட்டும். எங்கள் கட்சி இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது, நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கமாட்டோம், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம். கட்சியினர் யாரும் சட்டம், ஒழுங்கை கையில் எடுக்க வேண்டாம் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் நலன் காக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஞாயிற்று கிழமை ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பின் பேசிய அவர், “கொலை செய்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அதனால் தான் மாயாவதி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்கிறார். காவல்துறை உண்மையான குற்றவாளிகள் யார் என்பதனை கண்டறிய வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும். இது போன்ற படுகொலைகள் தொடர்ந்து நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும் தொடர்ந்து தலித் இயக்கத்தை சார்ந்தவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இதன் பின் யார் இருப்பது? கூலிப்படையை ஏவியவர்கள் யார்? என்பதனை விரைவில் கண்டறிய வேண்டும். சிபிஐ விசாரணை வேண்டும் என்ற மாயாவதியின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, சென்னை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யவும், அங்கு கல்லறை எழுப்பவும் அனுமதி கோரிய ரிட் மனுவை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 7-ஆம் தேதி) சிறப்பு அமர்வு நடத்தியது.

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஏ.பொற்கொடி, தாக்கல் செய்த ரிட் மனுவை இன்று காலையில் (10.30) மணியளவில் விசாரித்த நீதிபதி வி.பவானி சுப்பராயன், சென்னை மாநகராட்சி பரிந்துரைத்த மூன்று மாற்று இடங்களில், ஒரு இடத்தில் தற்போது உடலை அடக்கம் செய்யலாம் என பரிந்துரைத்தார். அதோடு, பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகமானது குறுகிய சாலையுடன் கூடிய குடியிருப்புப் பகுதியில் உள்ளதால், கட்சி அலுவலக வளாகத்திற்குள் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது.

Also Read : கொள்முதல் விலையை குறைத்த தனியார் பால் நிறுவனங்கள்! விற்பனை விலையை குறைக்காததால் கொந்தளிக்கும் பால் முகவர்கள், விவசாய சங்கங்கள்!

கட்சி அலுவலக நிலத்தின் பரப்பளவு சுமார் 2,400 சதுர அடியில் மட்டுமே இருந்தது, அதில் ஒரு மேற்கட்டுமானம் ஏற்கனவே உள்ளது. தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம். தற்போதைக்கு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அரசு தரப்பில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது, 2000 சதுர அடி தர தயாராக இருக்கிறோம். இது குறித்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் கருத்தை பெற்று தெரிவியுங்கள்” என்றார்.

இந்த வழக்கின் தீர்ப்பு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மதியம் 2.15 மணிக்கு தீர்ப்பை வழங்கிய நீதிபதி வி.பவானி சுப்பராயன், “ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகேயுள்ள பொத்தூரில் அடக்கம் செய்து கொள்ளலாம். போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. கண்ணியமான முறையில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேண்டும். அரசு மரியாதை கோரிய விண்ணப்பத்தின் மீது தமிழக அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார். இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry