டிவி சேனல்கள் எல்லை மீறிச் செல்கின்றன! கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன! தலைமை நீதிபதி கடும் சாடல்!

0
276

“தொலைக்காட்சி விவாதங்கள் பலவும் பக்க சார்புடையதாக, அரைகுறை தகவலுடையதாக, ஏதேனும் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கின்றன. காட்சி ஊடகங்களுக்கு பொறுப்பே இல்லை. சமூக ஊடகங்கள் இன்னும் மோசம்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த கல்வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய என்.வி.ரமணா,“தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள், சமூக ஊடக அலசல்கள் எல்லாம் கட்டப்பஞ்சாயத்து போல் நடக்கின்றன. இவை தேசத்தை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. சமூக ஊடகங்களில் சில நேரங்களில் நீதிபதிகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் கட்டமைக்கப்படுகின்றன.

நீதிபதிகள் ஒரு சம்பவம் குறித்து உடனடியாக எதிர்வினையாற்றாமல் இருக்கலாம். அவ்வாறு எதிர்வினையாற்றாததால் அவர்கள் பலமில்லாதவர்கள், கையாலாகாதவர்கள் என்று அர்த்தமில்லை. அதிநவீன ஊடக அங்கங்களின் வீச்சு அதிகம். ஆனால், அவற்றால் எது சரி எது தவறு எனத் தெரிந்துகொள்ள இயலவில்லை. நல்லது எது கெட்டது எது, உண்மையானது எது போலியானது எது என்றெல்லாம் பகுப்பாய்வு செய்யத் தெரியவில்லை.

Also Read : மின் மீட்டருக்கு மாத வாடகை! மீட்டர் இடமாற்றத்துக்கு டபுள் சார்ஜ்! மின்வாரியம் அதிரடி திட்டம்!

ஊடகங்களில் எது ட்ரெண்டாகிறதோ அதை வைத்து ஒரு வழக்கின் போக்கை தீர்மானிக்க இயலாது. ஊடகங்கள் பல தாமாகவே கட்டப்பஞ்சாயத்துகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. போதிய அறிவு இல்லாமல், ஏதோ ஒரு சார்புடன் நடத்தப்படும் விவாதங்கள் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய கேடு. ஊடகங்களில் வெளியாகும் சார்புடைய செய்திகள் ஜனநாயகத்தை பலவீனமாக்குகிறது. இதனால் நீதியை நிலைநிறுத்துவதும் பாதிக்கப்படுகிறது.

நாட்டில் அச்சு ஊடங்களாவது ஓரளவு பொறுப்புடன் செயல்படுகின்றன. காட்சி ஊடகங்களில் நடக்கும் தொலைக்காட்சி விவாதங்கள் பலவும் பக்க சார்புடையதாக, அரைகுறை தகவலுடையதாக, ஏதேனும் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கின்றன. காட்சி ஊடகங்களுக்கு பொறுப்பே இல்லை. சமூக ஊடகங்கள் இன்னும் மோசம். காட்சி ஊடகங்கள் எல்லைமீறிச் செல்வதாலும், பொறுப்பை உணராமல் செயல்படுவதாலும் ஜனநாயகத்தை இரண்டு அடி பின்னால் இழுத்துச் சென்றுவிடுகிறது.

ஆகையால், ஊடகங்கள் தனக்குத்தானே வரம்புகளை வகுத்துச் செயல்பட வேண்டும். காட்சி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் பொறுப்புடன் செயல்படுமாறு அறிவுறுத்துகிறேன். காட்சி ஊடகங்கள் தங்களின் சக்தியை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேசத்திற்கு புதிய சக்தியை பாய்ச்சவும் பயன்படுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry