அமைச்சர் பொன்முடி குற்றவாளி! சொத்துக்குவிப்பு வழக்கில் ஐகோர்ட் அதிரடி! எம்.எல்.ஏ. பொறுப்பை இழக்கிறார்?

0
22
Trouble for DMK Minister K Ponmudi after Madras HC sets aside acquittal in Disproportionate Assets case - Pic. Courtesy : Vikatan

கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக, அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து, இதுதொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக நீதிபதி எம். ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார்.இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் உட்பட 39 சாட்சிகளிடம் மேற்கொண்ட புலன் விசாரணை ஆதாரங்களை சுட்டிக்காட்டி லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதேபோல் பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் வருமானத்தை பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டுள்ளது. பொன்முடியின் மனைவிக்கு 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவர் தனியாக வர்த்தகம் செய்கிறார். இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை என்று பொன்முடி வழக்கறிஞர்கள் சார்பில் வாதிடப்பட்டது.

மேலும், குறிப்பிட்ட காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பிலான வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நவம்பர் 27 ஆம் தேதி எழுத்துப் பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பானது தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்றைக்கு இந்த வழக்கில் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்திருக்கிறார்.

அந்த தீர்ப்பில், கீழமை நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வரும் 21-ம் தேதி காலை 10.30 மணிக்கு பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரிலோ அல்லது காணொலி வாயிலாகவோ ஆஜராக வேண்டும்.

பொன்முடியும் அவரது மனைவியும் 64.90% வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளது என்று நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஊழல் வழக்கில் குற்றவாளி என்பது நிரூபணமானாலே பொன்முடி இயல்பாகவே தன் பதவியை இழக்கிறார். தண்டனை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த நடைமுறை தொடங்கும். பொன்முடியால் ஆறு ஆண்டுகள் வரை தேர்தலில்போட்டியிட முடியாது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஒருவேளை சிறை தண்டனை ஏதும் விதிக்கப்படாமல், அபராதம் மட்டும் விதிக்கப்பட்டாலும் பொன்முடி தகுதி இழப்புக்கு உள்ளாவார் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். 21-ம் தேதி தண்டனை விவரங்கள் அடங்கிய தீர்ப்பு நகல் வெளியான பிறகே அதற்கான நடைமுறை தொடங்கும் என்று தெரிகிறது.

Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry